ஆணவக் கொலைகளை  அரசால் ஏன் தடுக்க முடியவில்லை?

சாதி வாரியாக மக்களின் ஓட்டு வங்கிகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு  அது ஊட்டி வளர்த்த சாதிப்பிள்ளைகளின் வெறியாட்டத்தின் உச்சமல்லவா ஆணவக் கொலை! பிறகெப்படி அரசால் இதை தடுக்கவோ, இல்லாமலாக்கவோ முடியும்?!
ஆணவக் கொலைகளை  அரசால் ஏன் தடுக்க முடியவில்லை?

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெருவெற்றி பெற்ற மராத்தி திரைப்படங்களில் ஒன்று ‘சாய்ரத்’ 

கிட்டத்தட்ட தமிழில் வெளியான ‘காதல்’ திரைப்படத்தைப் போன்றதான ஒரு கதையில் ஆணவக் கொலையின் அநாகரீகத்தை, கொடூரத்தைப் மிக வன்மையாக முன்வைக்கும் படங்களில் இது முதன்மையானது. 

மஹாராஷ்டிரத்தின் ஒரு கிராமத்தில் சாதி செல்வாக்குடன் ஊர் மெச்ச வாழ்ந்து வரும் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணாக நாயகி, அவளோடு கல்லூரியில் உடன் பயிலும் தலித் மாணவனாக நாயகன். இவர்களுக்குள் காதல் வருவதற்கான முகாந்திரம் நாயகனின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறன். அதனால் கவரப்படும் நாயகி அவனை விரும்பத் தொடங்குகிறாள். நாயகனுக்கு, அவளிடம் ஈர்க்கத் தக்க அம்சமாகத் திகழ்வது அந்தப்பெண்ணுக்குள் ஒளிந்திருக்கும் ஆண்மை கலந்த தைரியம். புல்லட் ஓட்டுவது, டிராக்டர் ஓட்டுவது, தன் மனதுக்குச் சரியென்று பட்டதைச் செய்யத் தயங்காத பிடிவாதம். இப்படிச் சில விஷயங்களால் ஈர்க்கப்பட்டு இருவரும் காதலிக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் வீட்டுக்குத் தெரிய வருகையில் சாதிரீதியாக பிரபலஸ்தராக விளங்கும் தந்தைக்கு ஒவ்வாமல் போகிறது. முடிவில் ஓடிப்போகத் துணியும் காதலர்களைப் பிடித்து பெண்ணை மானபங்கம் செய்ததாகப் பொய் வழக்குப் போட்டு நாயகன் மற்றும் அவனது நண்பர்களது வாழ்க்கையை நிர்மூலமாக்கி விடத் துடிக்கிறார். காரணம், மகளது இந்தத் துணிவால் சாதி ரீதியாக அதுவரை அனுபவித்து வரும் செல்வாக்குக்கும், மரியாதைக்கும் மகள் வேட்டு வைத்து விடுவாளோ என்ற அச்சம்! 

ஊறிப்போன சாதிவெறியின் உச்சத்திலோ அல்லது எல்லையற்ற ஆதங்கத்திலோ, சொந்தச் சாதியில் இல்லாத எந்த அருமை, பெருமையான குணத்தைக் கண்டு தங்களை விட தாழ்ந்த குலத்தைச் சார்ந்த ஒரு ஆணைத் தன் மகள் தேர்ந்தெடுத்தாள் என்கிற வெறியில் அந்தக் காதல் ஜோடியைப் பிரித்து இல்லாமலாக்கி விட பெண்ணைச் சார்ந்தவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஒரு கட்டத்தில் கொல்லத் துடிப்பவர்களிடமிருந்து ரயிலேறித் தப்பி ஆந்திராவின் ஒரு புறநகர்ப்பகுதியில் தஞ்சம் புகுகிறார்கள். 

அங்கே தொடங்குகிறது அவர்களது இல்லறம். மனதுக்குப் பிடித்தவனோடு வீட்டை விட்டு ஓடி வந்து தானே கட்டமைத்துக் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போது தான் நாயகிக்குத் தெரிகிறது அது அத்தனை எளிதானது இல்லை என. பெற்றோர் தயவின்றி, எந்த அடிப்படை அத்யாவசிய வசதிகளும் இன்றி பணக்கார வாழ்வுமுறைக்குப் பழகிப் போன ஒரு பெண் ஏழைக்கும் ஏழையாக வாழ்வது நரகம் என்று அவளுக்குத் தெரிய வரும் போது பேசாமல் பிறந்தகத்துக்கே திரும்பப் போய் விட்டால் என்ன என்று பலமுறை யோசிக்கிறாள். ஆனாலும், இயல்பிலேயே அவளுக்குள் ஊறிப்போன வைராக்கியம் தடுக்கிறது. இதில் இயக்குனரது ஒளிவுமறைவற்ற தன்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். 

காதலுக்குக் கண்ணில்லை, அது தெய்வீகம் என்றெல்லாம் மாய்மால ஜாலங்களை இளைஞர்களின் மனதிற்குள் புகுத்த முயலாமல் இப்படிக் காதலித்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என அதன் உண்மைத் தன்மையை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். வீட்டையும், சாதியையும் பகைத்துக் கொண்டு வெளியேறி கட்டமைத்த வாழ்வில் தத்தித் தத்தி முன்னேறி ஒருவழியாக நாயகனும், நாயகியும் தங்களுக்கென ஒரு சிறு வீடு, குழந்தை, குடும்பம் என செட்டிலாகும் போது அவளுக்குள் தனது இன்றையை நிலையைத் தன் அம்மாவுக்குத் தெரிவிக்கும் ஆசை முளைக்கிறது. தான் கட்டிக் கொண்டிருக்கும் அரைகுறையாகக் கட்டி முடிக்கப்பட்ட ஃப்ளாட்டின் அடிவாரத்தில் நின்று கொண்டு அம்மாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கண்ணில் நீர் துளிக்க தனது இன்றைய நிலையை மகிழ்வோடும், நெகிழ்வோடும் பகிர்ந்து கொள்கிறாள்.

அடுத்த காட்சியில், அவள் வாசலில் தன் குழந்தையுடன் அமர்ந்து கோலமிட்டுக் கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டுப் பெண் வந்து இவளது குழந்தையைக் கொஞ்சியவாறு தன் வீட்டுக்கு விளையாட அழைத்துச் செல்கிறாள். இவள் மகளுக்கு விடையளித்து விட்டு மீண்டும் கோலமிடக் குனிகையில்... கோலத்தை மறைத்துக் கொண்டு நிழலாடுகிறது. யாரென நிமிர்ந்து பார்த்தால் அவளது அண்ணனும், அண்ணனின் நண்பர்களும் கைகளில் பரிசுப் பொருட்களுடன் நிற்கிறார்கள். பார்த்து நெடுநாட்கள்... வருடங்கள் ஆனபடியால் உடனே பேசத்தோன்றாமல் திக்கித்து நிற்பவள் பின்னர் உபசரித்து உள்ளே அழைக்கிறாள். அவர்களை உட்கார வைத்து விட்டு குடிக்கத் தண்ணீர் கொண்டு வர சமயலறைக்குள் நுழைகிறாள். மீண்டும் வெளியில் வந்து தனது சகோதரனுடன் பேசிக் கொண்டே அனைவருக்கும் குடிக்கப் பானம் தருகிறாள். 

அவ்வளவு தான். கடைசியில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இப்படி முடிகிறது.

பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் விளையாடப் போன குழந்தை திரும்ப வந்து கதவைத்திறந்து வீட்டுக்குள் நுழைகையில் உள்ளே அது காணும் காட்சி படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களை ஒரு நொடியில் திடுக்கிட்டு அழ வைத்து விடும். அதன் அம்மாவும், அப்பாவும் கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்க குழந்தை அவர்களை நோக்கு கண்ணில் பீதியுடன் அவர்களின் அருகில் நகர்வதோடு திரை விழுந்து விடுகிறது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், சாதிப் பெருமை பேசும் எல்லா ஊர்களிலும் ஆணவக் கொலைகள் இப்படி திடுக்கிட்டுத் துணுக்குறச் செய்யும் விதமாகத்தான் இருக்கிறது. இவற்றைத் தடுக்கவும் வழியின்றி, முற்றாகக் களையவும் வழியின்றி அரசு தொடர்ந்து திண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. காரணம் சாதி வாரியாக மக்களின் ஓட்டு வங்கிகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு  அது ஊட்டி வளர்த்த சாதிப்பிள்ளைகளின் வெறியாட்டத்தின் உச்சமல்லவா ஆணவக் கொலை! பிறகெப்படி அரசால் இதை தடுக்கவோ, இல்லாமலாக்கவோ முடியக்கூடும்?! வேண்டுமானால் இந்த அரசு நீதிமன்றங்கள் வாயிலாக ஆணவக் கொலை பகடைக்காய்களான பெற்றோரைக் கூண்டிலேற்றி தண்டனை வேண்டுமானல் பெற்றுத்தரும்.

Image courtesy: SmartMindsIAS.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com