சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற அந்த 3 பேரழகிகள் யார்?

கி.பி 1412 ஜனவரி 6 ஆம் தேதி [4] பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது.
சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற அந்த 3 பேரழகிகள் யார்?

பண்டைய உலகம் அழகான, அறிவார்ந்த மற்றும் துணிச்சலான பல குறிப்பிடத்தக்க பெண்களைக் கொண்டிருந்தது. இவர்களில் பல பெண்ணரசிகள் இன்றும்கூட வரலாற்று புத்தகங்களிலும், பல்வேறு கலாச்சாரங்களின் நூல்களிலும், சிலையாகவும் சிற்ப அழகிகளாகவும் நமது கவனத்தை கவர்ந்துள்ளனர். 

வாழும் காலத்தில் சூழ்ச்சிகளால் கொன்றொழிக்கப்பட்டு, சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் சில சமயம் இருட்டடிப்பு செய்யப்பட்டும் இருந்தாலும், அவர்களின் புகழ் ஒருபோதும் மங்கி மறைவதில்லை. காலம்தோறும் வெவ்வேறு வகையில் வீறு கொண்டு அவர்களைப் போலவே உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது அவர்களின் புகழ். சந்திரர் சூரியர் உள்ளவரை அவர்களின் பெயர்கள் என்றென்றும் நிலைக்கும். அவ்வகையில் மறக்க முடியாத இந்த மூன்று அழகிகள் இன்றளவும் உலகிற்கு ஒரு தூண்டுதலாக கருதப்படுகிறார்கள். 

நவீன காலம் 16-ம் நூற்றாண்டில் தொடங்கியது எனலாம். எனவே நவீன காலத்திற்கு முன்னால், நம் பண்டைய நாகரிகத்தில் பேரழகிகள் இவர்கள். இவர்கள் அழகில் மட்டுமில்லை, தம் வாழ்நாளில் தொடங்கி வரலாறு தோறும் பெரும்புகழ் பெற்றவர்கள். 

1. கிளியோபாட்ரா VII (பிறப்பு - கி.மு. 69 - இறப்பு - கிமு 30)
 
சரித்திரத்தில் நிலைபெற்றுவிட்ட உலகப் பேரழகி யார் என்ற கேள்விக்கு பதில் கிளியோபாட்ரா என்றுதான் இன்றும் பதில் சொல்வார்கள். கற்பனைக்கும் எட்டாத பேரெழில் உருவம் பெற்றவள் கிளியோபாட்ரா. பண்டைய எகிப்திய வரலாற்றில் அழகின் கலைச் சின்னமாக விளங்கியவள் அவள். 

எகிப்து அரசன், பன்னிரெண்டாம் டாலமியின் மகளாகப் பிறந்தவள் க்ளியோபாட்ரா. தனது தந்தையின் மறைவுக்குப் பின் இளைய சகோதரன், பதிமூன்றாம், டாலமியுடன் இணைந்து எகிப்திய சாம்ப்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள் 18 வயதே நிரம்பியிருந்த கிளியோபாட்ரா. சங்கீதம் போன்ற தேன் குரல், பார்ப்பவர் கண் எடுக்க முடியாமல் மீண்டும் பார்க்க வைக்கும் அழகிய கண்கள், செதுக்கி வைத்த சிற்பம் போன்ற உடல் அமைப்பு என்று கிளியோபாட்ராவின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அழகு மட்டுமல்லாமல் அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவள் அந்த பேரரசி.

ஒன்பது மொழிகளைப் பேசும் திறமை, வேகம், அரசியல் சாணக்யம், மனத் துணிவு ஆகிய குணங்களுடன் தன்னிகரற்ற அரசியாக விளங்கினாள். காதல், வீரம், சாகஸம் என்று புகழ் ஏணியின் உச்சத்தில் இருந்த அவளுடைய வாழ்க்கை அதே காதலுக்காக உயிரை நீக்கிக் கொள்ளும் அளவுக்கு வீழ்த்தியது.

ஆனால் காதலுக்காக தற்கொலை செய்துகொண்ட அவளை சரித்திரத்தின் பக்கங்கள் பத்திரப்படுத்தியிருக்கிறது. க்ளியோபாட்ரவின் உடலானது இந்தப் பூமிப் பரப்பில் புதைந்து, கரைந்து, காணாமலாகியிருக்கலாம். ஆனால், அவளது புகழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருப்பது அவளுக்குக் கிடைத்த பெரும் பேறு.

1963-ம் ஆண்டில் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் நடிப்பில் கிளியோபாட்ரா படம் வெளிவந்து உலக ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது. இதன் படமாக்கத்தின்போது டெய்லர் தன்னுடைய வருங்கால கணவரான ரிச்சர்ட் பர்டனுடன் காதல் கொள்ளத் தொடங்கினார், திரைப்படத்தில் அவர் மார்க் ஆண்டனியாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. சம்யுக்தா (12 வது நூற்றாண்டு)
 
பண்டைய பாரதத்தில் கன்னோஜ் நாட்டின் மன்னன் ஜெய்சந்த் என்பவரின் அழகான மகள்தான் இளவரசி சம்யுக்தா. பண்டைய வரலாற்றில் மிக அழகிய இந்திய பெண்கள் அவர். 

ஜெய்சந்த், தில்லியின் அரசன் பிரிதிவிராஜ் சௌகானும் இராஜபுத்திர குலத்தவராக இருந்தாலும் இருவரும் ஒருவர் மீது மற்றவர் பகையுணர்வுடன் இருந்தனர். பிரிதிவிராஜின் வீரத்தையும் புகழையும் அறிந்து, சம்யுக்தா, அவர் மீது காதல் கொண்டாள். பிரிதிவிராஜும் சம்யுக்தாவின் மீது தீராக் காதல் கொண்டான். ஆனால் தந்தை ஜெய்சந்த் இருவரின் காதலை ஏற்று திருமணம் செய்து வைக்க மறுத்து, சம்யுக்தாவிற்கு திருமண சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார்.

சுயம்வரத்திற்கு பிரிதிவிராஜ் சௌகானைத் தவிர மற்ற இளவரசர்க்ளுக்கு அழைப்பு விடுத்தார். இதனை கேள்விப்பட்ட பிரிதிவிராஜ் சௌகான் மிகுந்த கோபம் கொண்டு, சம்யுக்தாவை கன்னோஜிலிருந்து கடத்திச் சென்று, தில்லியில் அவளை மணம் புரிந்தான். இது ஜெய்சந்தின் கோபத்தை பன்மடங்காக்கியது.

கோரி முகமது தில்லியின் மீது முதலில் படையெடுப்பு செய்தபோது பிரிதிவிராஜ் சௌகான் வென்றார். இரண்டாம் முறை கோரி முகமது பெரும்படையுடன் தில்லி மீது படையெடுக்கையில், பிரிதிவிராஜ் சௌகான் மீதான கோபத்தின் காரணமாக, ஜெய்சந்த் போரில் உதவி செய்ய மறுத்ததால், பிரிதிவிராஜ் போரில் தோல்வியுற்று மரணமடைந்தார். கணவனின் மரணத்தை அறிந்த சம்யுக்தாவும், இராஜபுத்திர குலப் பெண்களும் கூட்டாகத் தீக்குளித்து மாண்டனர். அதன் பின்னர் கோரி முகமது, கன்னோஜி நாட்டையும் சூறையாடி ஜெய்சந்தை வென்று, பெருஞ்செல்வங்களை கொள்ளை கொண்டு நாடு திரும்பினான் என்கிறது வரலாறு.

தமிழில் எம்.ஜி.ஆர் மற்றும் பத்மினி நடித்த ராணி சம்யுக்தா என்ற திரைப்படம் 1962-ல் வெளிவந்தது. சம்யுக்தா - பிரிதிவிராஜ் சௌகான் காதல் கதையும், பிரிதிவிராஜ் சௌகானின் வீரம் குறித்தும் தொலைக்காட்சி (ஸ்டார் பிளஸ்) தொடர்கள் வெளிவந்தது. மேலும் ராணி சம்யுக்தா என்ற பெயரில் பல வரலாற்று புதினங்கள் வெளியாயின. பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் சம்யுக்தாவின் பெயர் சரித்திரத்தில் நிலைத்துவிட்டக் காரணம் அவளது அழகு மட்டுமல்ல, தான் நேசித்த ஒருவருக்காக உயிரையும் மாய்த்துக் கொண்ட தியாகமும்தான்.

3. ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு)
 
ஜோன் ஆஃப் ஆர்க் பிரான்சின் மிக அழகான மற்றும் துணிச்சலான பெண். தொலைநோக்குப் பார்வையும், ஈடில்லாத தன்னம்பிக்கையும் கொண்ட போராளி இவள். இராணுவத் தலைவி, தியாகி, துறவி, பிரான்சின் கதாநாயகி என பன்முகத்தன்மையுடன் விளங்கிய ஜோன் உலக மக்களால் இன்றளவும் நினைக்கப்படுகிறாள்.

பிரான்ஸ் நாட்டின் ‘தோம்ரிமி’(Domrémy) என்ற  கிராமத்தில், ஜனவரி 6-ம் தேதி 1412-ம் ஆண்டு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜோன் பின்னாளில் தனது தாய் நாட்டையே காக்கும் அளவுக்கு வீர மங்கையானாள். தனது பதினெட்டாவது வயதில் பிரான்ஸை அந்நிய ஆட்சியிலிருந்து மீட்க சூளுரைத்து செயலில் இறங்கினாள். 

15-ம் நூற்றாண்டில். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்தது. பிரான்ஸின் பல பகுதிகளை இங்கிலாந்து கைப்பற்றியது. இதனால் பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ் பதவியில் இருந்தும் செயலற்றுப் போனான்.மன்னரைச் சந்தித்து தனது தலைமையில் ஒரு படையை தருவித்தால் பிரான்ஸை எப்பாடுபட்டாவது மீட்பேன் என்று தெரிவித்தாள். சார்லஸ் மிகுந்த தயக்கத்திற்குப் பிறகேஐந்தாயிரம் போர்வீரர்களை அனுப்பினான். ஆணைப் போல் கவசம் அணிந்து, போர் வீரனைப் போல உருமாறிய ஜோன் தனது கரத்தில் உருவிய வாளுடன் பெரும் உத்வேகத்துடன் குதிரையின் மீதேறி புறப்பட்டாள்.

பல நாட்கள் தொடர்ந்த போரின் இறுதியில் ஜோன் வென்றாள். ஆர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினாள். மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் ஜோனின் இந்த வீரச் செயல் திரிக்கப்பட்டு தீய எண்ணம் கொண்ட சிலரால் மதபோதக சபையின் முன்னால் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டாள். அதில் அவள் தோல்வியுற்று உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டாள். ஜோன் போன்றோரின் வீர மரணத்தாலும் ரத்த கறையாலும் தான் சரித்திரத்தில் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது. டானிஷ் இயக்குநர் கார்ல் டிரையர் இயக்கிய தி பேஷன் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் ( The Passion of Joan of Arc) எனும் மெளனப் படம் ஜோனின் புகழை உலகெங்கிலும் மொழிகள் கடந்த பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com