’பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ள கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இன்றியமையாதது
இன்று தமிழ்நாட்டு மாணவர்கள் வேலைவாய்ப்பு, தொழில் போன்ற பல்வேறு நிலைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளையும் கற்றல் இன்றியமையாததே. ஆனால் தாய்மொழியான தமிழையும், ஆங்கிலத்தையும் கட்டாயமாக்கிவிட்டு, இந்தியை விருப்பப் பாடமாக வைத்துக்கொள்ளலாம். தங்கள் தேவை கருதி மாணவர்கள் அம்மொழியை விரும்பிக் கற்கும் சூழல் உண்டாகும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

உயர் பதவி
நமது அண்டை மாநிலத்தவர் மும்மொழிகள் அறிந்திருப்பதால் தில்லி சென்று இந்தியில் பேசி தங்கள் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கணிசமான நிதி உதவிகளை மத்திய அரசிடமிருந்து பெறுகின்றனர். அது மட்டுமல்ல, மத்திய அரசின் உயர் பதவிகளிலும் எளிதில் இடம் பிடிக்கிறார்கள். நம்மால் அது இயலவில்லை. எனவே மும்மொழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
கே. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

தவறு
மூன்றாவது மொழியை அவரவர் தனிப்பட்ட முறையில் விரும்பிப் படிப்பதை தமிழ்நாட்டில் யாரும் தடுக்கவில்லை. எம்மொழியையும் கட்டாயமாகத் திணித்தால்தான் பிரச்னை எழுகிறது. இந்தி தெரிந்தால், வேலை கிடைக்கும் என்பது தவறு. வடமாநில மக்கள் இந்தி தெரிந்தவர்கள், ஏன் வேலை தேடி இங்கு பணிக்கு வரவேண்டும். எனவே, மும்மொழித் திட்டம் தேவையற்றது.
பூ.சி. இளங்கோவன், அண்ணாமலைநகர்.

விழிப்புணர்வு
மொழி என்பது கருத்துகளை வெளிப்படுத்தும் ஊடகம் என்பதை உணர்த்த வேண்டும். மொழிகள் பல கற்பதன் அவசர, அவசியத்தை உணர்த்தி, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். வளமான, நலமான கல்விக்குத் தாய்மொழியைப் புறக்கணிக்காத மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தவறு இல்லை. மத்திய அமைச்சர் கூறியுள்ள கருத்து ஏற்புடையதுதான்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

அவசியம்
ஒருவர் வாழ்க்கையில் முன்னேற தாய்மொழி, தேசிய மொழி மற்றும் உலக மொழியை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வட மாநிலங்களுக்கு சென்று தமது திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. அந்த அவலநிலை இனியும் தொடராமல் இருக்க மும்மொழிப் பாடத்திட்டம் அவசியம்.
மு. நடராஜன், திருப்பூர்.

அவலம்
பள்ளிகளில் தற்போது கற்பிக்கப்பட்டுவரும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளையே மாணாக்கர் சரியாகக் கற்றுக்கொள்வதில்லை. தாய்மொழியான தமிழ்மொழியில்கூட பயில ஆர்வம் காட்டுவதில்லை என்பது மிகவும் அவலமான ஒரு நிலை. அப்படி இருக்க மும்மொழிப் பாடத்திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்த வேண்டுமா? நடுவணரசின் அமைச்சர் கூற்று ஏற்புடையதல்ல.
வலங்கொண்டான், சேலம்.

சரியே
தாய்மொழிக் கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தி ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக பயன்படுத்தி மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அவரவர் தேர்விற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும். எனவே பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்து சரியே.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

வரவேற்கத்தக்கது
மாணவர்களின் தாய்மொழி, நமது நாட்டில் பெரும்பாலோர் பேசும் மொழியான இந்தி மொழி, உலகம் முழுதும் உறவாடுவதற்கு ஆங்கில மொழி என்கிற மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது வரவேற்கத்தக்கது. பள்ளி மாணவர்கள் மும்மொழியையும் கற்பதன் மூலம், நமது மாநிலத்தில் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் அயல்நாட்டிலும் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
என். சண்முகம், திருவண்ணாமலை.

தேசிய மொழி
பள்ளி மாணவர்கள் மீது எல்லா மொழிகளையும் திணிக்கக்கூடாது. நம் மாநிலத்திற்கு இருமொழிக் கொள்கையே ஏற்புடையதாகும். ஒரு மாநிலத்தில் தாய்மொழி முதலிடம் பெற வேண்டும். தாய்மொழியே வட்டார மொழியும் ஆகும். இரண்டாவது பொதுமொழியான ஆங்கிலம். இந்த நிலை நீடிப்பதே நலம் பயக்கும். தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை தேசிய மொழிகளாக ஆக்கப்பட வேண்டும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

காலத்தின் கட்டாயம்
தமிழகத்தில் தமிழும், ஆங்கிலமும் இருமொழித் திட்டமாக கற்பிக்கப்படுவதால், தமிழர்கள் வடமாநிலங்களில் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கிறது. எனவே, தமிழக மாணவர்கள் வேலைவாய்ப்பை இழந்த அனுபவத்தின் அடிப்படையில் மும்மொழித் திட்டத்தை கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி,
வரட்டணப்பள்ளி.

அறிவுடைமை
இருமொழிக் கொள்கையிலேயே தமிழும் சரிவர எழுதத் தெரியாத - ஆங்கிலமும் ஒழுங்காகப் பேசத்தெரியாத ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. இதில் மூன்றாவதாக மற்றும் ஒருமொழி எதற்காக? அப்படி விரும்புவோர் தனியாக அம்மொழியைக் கற்றுக் கொள்ளலாமே. எனவே, இரண்டு மொழிகளையே சிறப்பாகக் கற்றுத்தர கவனம் செலுத்துவதே அறிவுடைமை ஆகும்.
லதா ரங்கன், சென்னை.

உடனடி தேவை
தமிழையும் இந்தியையும், மூன்றாம் மொழியாக ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். போனது போகட்டும். இனியேனும் மும்மொழிப் பாடத்திட்டத்தினை உடனடியாக அமல்படுத்துவோம். பணம் பெற்றுக் கல்வி வழங்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் இருப்பதுபோல, அரசுப் பள்ளிகளிலும் மும்மொழிப் பாடத்திட்டத்திட்டம் இருக்க வேண்டுமென வற்புறுத்துவோம்.
ந. தமிழ்க் காவலன், திருவாரூர்.

வேலைவாய்ப்பு
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை முதல் மொழியாகவும், இரண்டாவதாக ஆங்கிலத்தையும், மூன்றாவதாக இந்தி மொழியையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டியது அவசியம். இந்தியா முழுதும் பேசப்படுகிற இந்தியை மூன்றாவது மொழியாக மாணவர்கள் பயின்றால் வேலைவாய்ப்புக்கும் மற்றும் பல விதத்திலும் உதவிகரமாக இருக்கும்.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

புறக்கணிப்பு
மத்திய அரசு பள்ளிகளில் இப்போதும் மும்மொழி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பலமொழி அறிவை ஒருவர் பெறுவதில் எத்தவறும் இல்லை. ஆனால், மும்மொழிகளைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கிறோம் என்ற பெயரில் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியை பயிற்றுவிக்காமல் புறந்தள்ளி பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது சரியல்ல.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

முழக்கம்
இந்தியை கற்பதால், தமிழின் தரம் தாழ்ந்துவிடப் போவதில்லை. ’இந்தியனாக இரு, இந்தியப் பொருள்களையே வாங்கு' என்று முழக்கமிடும் நாம் இந்திய மொழியான இந்தியைக் கற்பதில் தவறில்லை. தமிழ்நாட்டில் வலம்வர தமிழும், இந்தியா முழுவதும் உலாவர இந்தியும், வெளிநாடுகள் சென்று வர ஆங்கிலமும் அவசியம் என்பதை உணர்ந்து மும்மொழிப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவோம்.
சி. இராசேந்திரன், மணலி.

வஞ்சனை
அரசியல்வாதிகளால் அரசுப் பள்ளிகளில் இந்தி இல்லாமல் போனது. ஆனால், தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. அதனால் அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசுப் பள்ளிகளை நம்பியே உள்ள ஏழைப் பிள்ளைகள் இந்தி பயில முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பள்ளிகளில் மும்மொழித் திட்டம் கட்டாயம் தேவை.
சி. வையாபுரி, ஆறகளூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com