நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்கான போட்டிகள்

நியூஜெர்சியில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்கான போட்டிகள்


நியூஜெர்சி: நியூஜெர்சியில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் சார்பில், குழந்தைகளுக்கான தமிழ்க் கவிதை ஒப்புவித்தல், மாறுவேடம்  பூணுதல் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைப்பெற்றன.
எடிசன் நகரில், ஜான் ஆடம்ஸ் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளித் துணை முதல்வர்  லக்ஷ்மிகாந்தன் வரவேற்புரையாற்றினார். போட்டி நடுவர்களாக பங்குபெற்ற மைதிலி மாதவன், ரேவதி சங்கர் மற்றும் பாலசுப்ரமணியன் அவர்களையும்  கூட்டத்திற்கு அவர் அறிமுகம் செய்துவைத்தார். போட்டிகளைத் திறம்பட வடிவமைக்கவும் திட்டமிடவும் பெரிதும் உதவிய செந்தில்நாதன் முத்துசாமி தலைமை பொறுப்பேற்று நிகழ்ச்சியை நடத்தினார்.

வயதின் அடிப்படையிலான பல்வேறு பிரிவுகளில், கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் போட்டிகளில் பங்குகொண்டனர்.

3 முதல் 4 வயது வரையிலான மழலையர் வகுப்பு மாணவர்கள் மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டனர். கவிஞர் பாரதியார் போல் மீசையை முறுக்கிக் கொண்டும்,  முண்டாசுத் தலையுடனும்,  புரட்சிக்கவி பாரதிதாசன் போல் ஓங்கிய கைகளுடனும்,  இராமநாதபுர ராணி வேலுநாச்சியாராக உயர்த்திப் பிடித்த வாளுடனும், பால்காரியைப் போன்று  இடுப்பில் பானையுடனும், மனதை ஈர்க்கும் இன்னும் பல வேடங்கள் பூண்டும், மேடையை வலம் வந்து, அவர்வர் வேடத்திற்கு ஏற்றாற் போல் கவிதைகள் பாடியும், வசனங்கள் பேசியும்  மாணவர்கள் நடித்து அனைவரையும் மகிழ்வித்தனர்.

5 முதல் 6 வயது வரையிலான மாணவர்கள்,  கொன்றை வேந்தன் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டனர்.  ஔவையார் இயற்றிய அறநூலிருந்து, 15 - 20 ஒற்றைவரிப் பாக்களைக் குழந்தைகள் மனனம் செய்து, கொடுக்கப்பட்ட ஒரு நிமிட நேர அவகாசத்திற்குள், மேடையில் ஒப்பித்தனர்.  பிழையின்றி ஒப்பித்தல், தமிழில் சரியாக உச்சரித்தல், நேர்த்தியாக வழங்குதல் போன்ற வரைமுறைகளின்படி, நடுவர்கள் வெற்றிப்பெறும் குழந்தைகளைத் தேர்வு செய்தனர்.

7 முதல் 8 வயது வரையிலான மாணவர்கள், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியிலும்,  9 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள், பொருள் விளக்கத்தோடு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியிலும் கலந்துகொண்டனர். அறத்துப்பாலிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருந்த 20 குறள்களையும்,  கொடுக்கப்பட்ட இரண்டு நிமிட நேர அவகாசத்திற்குள், பல மாணவர்கள் சிறப்பாக ஒப்பித்தபடியால், இப்பிரிவில் போட்டி வெகுகடுமையாக இருந்தது. சுருதி ஆனந்த் என்ற மாணவி 1 நிமிடம் 45 விநாடிகளுக்குள் 27 திருக்குறள்களை ஒப்பித்து ஒரு வகையில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மதிய உணவு இடைவேளைக்குப்பின், மாணவர் போட்டிகள் தொடர்ந்தன. மதிய போட்டிகளுக்கு நடுவர்களாக செந்தில்நாதன் முத்துசாமி, கருப்பையா கணேசன், வித்யா ராம்குமார் ஆகியோர் பணியாற்றினர்.

11 முதல் 12 வயது வரையிலான மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டனர். பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் பற்றியும், ஏறு தழுவதல் வீரவிளையாட்டைப் பற்றியும், சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் குறித்தும் தலா 2 நிமிடங்களுக்கு மாணவர்கள் சிறப்பாக பேசினர்.

12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலுள்ள கதாபாத்திரங்களுள் ஒன்றைக் குறித்து தலா 3 நிமிடங்கள் மேடையில் பேசினர். பல நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட இப்படைப்புகளை, மாணவர்கள் தம் நவீன நோக்கோடு அணுகி, மேலாண்மை சொற்கூறுகளின் துணையோடும், சமீபகால போக்குகளின் துணையோடும், பவர்பாய்ண்ட் ஸ்லைட்கள் உதவியுடன் கோவலன், கண்ணகி, மணிமேகலை ஆகிய கதாபாத்திரங்களை நன்கு ஆராய்ந்து விளக்கியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

குழந்தைகளுக்கான போட்டிகள் முடிவடைந்தபின், பெரியவர்கள் பங்குகொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. "குழந்தைகளிடம் தமிழ் மொழி, பண்பாட்டை அதிகம் ஊக்குவிப்பது இந்திய வாழ் பெற்றோர்களா, அமெரிக்க வாழ் பெற்றோர்களா?" என்ற தலைப்பில், சுபா செல்லப்பன்  தலைமையில், பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களுமாக தலா நான்கு பேர் கொண்ட இரு அணிகளாக பிரிந்து, நகைச்சுவையாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் பேசி அனைவரையும் மகிழ்வித்தனர்.

2010-ஆம் ஆண்டில் லாப-நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி,  நியூஜெர்சியில் வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்களின் குழந்தைகளிடம் தமிழ் மொழி ஆர்வத்தைத் தூண்டவும், தமிழ் இலக்கியங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆண்டுதோறும் இத்தகைய போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் போட்டிகளில் பங்குபெற்று, பரிசுகளை வென்றனர். போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் பதக்கமும், வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில், தமிழ்ப்பள்ளியின் முதல்வர் சாந்தி தங்கராஜ் நன்றியுரையாற்றினார்.  போட்டியில் பங்குபெற்ற  அனைத்து மாணவர்களையும், அவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்த பெற்றோர்களையும் பாராட்டினார். நிகழ்ச்சிக்கு ஒலி வடிவமைத்து நாள் முழுதும் உதவிய இளங்கோவன் சௌந்தரராஜனுக்கும், நிழற்படங்கள் எடுத்துதவிய ஸ்ரீதர் குமாரவேலு, சதிஷ் குமார் ஆகியோருக்கும், காணொளி பதிவு செய்த ராஜேஷ் பன்னீர்செல்வம், பேரழகன் ஆகியோருக்கும், சிற்றுண்டி, காபி, தண்ணீர், பழ ரச வகைகளைப் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்கி உதவிய முத்துராஜா, விஜய்,  ராஜேஷ் ஆகியோருக்கும் சாந்தி தங்கராஜ் நன்றி தெரிவித்தார்.  போட்டிகள் தங்கு தடையின்றி சீராக  நடைபெற உதவிய மற்ற அனைத்துத் தன்னார்வ தொண்டர்களுக்கும் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com