

ஏப்ரல் 23.
இந்த நாளை பெங்களூர் ஐபிஎல் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
இந்த நன்னாளில் தான் அதிகபட்ச ரன்களை எடுத்தது ஆர்சிபி. ஆனால் அதே நாளில் ஐபிஎல் போட்டியின் மிகக்குறைந்த ஸ்கோரையும் எடுத்து அவமானத்தைச் சந்தித்துள்ளது.
சாதனை நாள்
முதலில் நல்ல விஷயத்தைப் பார்த்துவிடுவோம்.
2013 ஏப்ரல் 23. இந்த நாளை பெங்களூர் ரசிகர்களால் மட்டுமல்ல, ஐபிஎல் ரசிகர்களாலும் மறந்துவிடமுடியாது. எத்தனை சிக்ஸர்கள்... பவுண்டரிகள்...!
அன்றைய தினம் 30 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில்.
மிகப்பெரிய சோதனையைச் சந்திக்கப் போகிறோம் என்றறியாத புணே அணி, அன்று டாஸ் வென்று முதலில் பந்துவீசுவது என்கிற தவறான முடிவை எடுத்தது. பெங்களூர் அணியில் கெயில், தில்ஷான் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர்.
2-வது ஓவரின் முதல் இரு பந்துகளை கெயில் பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது லேசான தூறலுடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. சுமார் 45 நிமிடங்களுக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. எனினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
மழை ஓய்ந்ததும் கெயில் புயல் வீசத் தொடங்கியது. அவர் பந்துகளைத் தொடர்ந்து சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். புணே வீரர்கள் மாறி மாறி பந்து வீசியபோதிலும், கெயிலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
5-வது ஓவரின் முடிவில் கெயில் 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.
அடுத்த இரு ஓவர்களில் கெயில் தொடர்ந்து பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே விரட்டினார். 9-வது ஓவரில் 30 பந்துகளை எதிர்கொண்டு கெயில் சதமடித்தார். 50 ரன்களில் இருந்து 100 ரன்களை எட்ட அவர் 13 பந்துகளையே எதிர்கொண்டார். 14-வது ஓவரில் தில்ஷான் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கோலி 11 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து டிவில்லியர்ஸ் கெயிலுடன் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்ஸும் தனது பங்குக்கு புணே பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி வரை களத்தில் இருந்த கெயில் 175 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது.
கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக்குறைந்த பந்துகளை எதிர்கொண்டு சதமடித்த வீரர் என்ற பெருமையை கெயில் பெற்றார். அதற்கு முன்பு 2004-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட்டில் கென்ட் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் 34 பந்துகளில் சதமடித்தார். அதுவே கிரிக்கெட்டில் அதிவேக சதமாக இருந்தது.
ஐபிஎல் போட்டியில் 2009-ம் ஆண்டில் மும்பை இண்டின்ஸ் அணிக்கு எதிராக யூசுப் பதான் 37 பந்துகளில் 100 ரன்கள் எடுத்ததே அதற்கு முன்பு ஐபிஎல்-லில் அதிவேக சதமாக இருந்தது. அந்தச் சாதனையும் கெயில் தகர்த்தார். இன்றுவரை கெயிலின் சாதனை முறியடிக்கபடாமல் உள்ளது.
அன்றைய தினம் கெயில் மொத்தம் 175 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 17 சிக்ஸர், 13 பவுண்டரி அடங்கும். ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ரன்னும் கெயில் ஆட்டமிழக்காமல் எடுத்த 175 ரன்கள்தான். அதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மெக்கல்லம் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. அவர் பெங்களூர் அணிக்கு எதிராக இந்த ரன்களை எடுத்தார். அந்தச் சாதனையும் அன்றைய தினம் முறியடிக்கப்பட்டது.
அதேபோல அன்றைய தினம் ஐபிஎல் போட்டியில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன் என்பது புணேவுக்கு எதிராக பெங்களூர் எடுத்துள்ள 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள்தான். அதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்ததே ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதேபோல அன்றைய தேதியில் டி20 போட்டியில் 263 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. சமீபத்தில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து அதிகபட்ச டி20 ஸ்கோரைச் சமன் செய்தது. ஆஸி. அணி தொடக்க வீரர் மேக்ஸ்வெல், 65 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 14 பவுண்டரிகள் உள்பட 145 ரன்கள் குவித்தார்.
இத்தனை சாதனைகளையும் செய்த அதே நாளில் ஐபிஎல் போட்டியின் குறைந்தபட்ச ஸ்கோரையும் எட்டியது முரண்நகை தானே!
சோதனை நாள்
அதே ஏப்ரல் 23 அன்றுதான் இந்தத் துயரம் ஏற்படவேண்டுமா?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா, 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது. பெங்களூர் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டைமல் மில்ஸ், பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பெங்களூர் தோல்வி: பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாக, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. இறுதியில் பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 9 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இதுபோல ஐபிஎல்-லில் நடந்ததே கிடையாது. கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்ட்டர் நைல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் வரலாற்றில் ஓர் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகளும் வீழ்ந்தது இது 2-ஆவது முறையாகும். பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணி 2009-ல் பெங்களூருக்கு எதிராக 58 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோராக இருந்தது.
பெங்களூர் ஐபிஎல் ரசிகர்களிடம் ஏப்ரல் 23-ம் தேதி குறித்து தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் மறக்காமல் அதன் சாதனை மற்றும் சோதனைத் தருணங்களைச் சொல்லிவிடுவார்கள். அப்படியொரு விநோத நாள் அது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.