

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி மெர்ல்பர்னில் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி. எனவே, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களம் காணும் ஆஸ்திரேலியா. மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து விளையாடுகிறது.
முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 103 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்நிலையில் மிகவும் சம்பிரதாயமான பாக்ஸிங் டே நாளான இன்று மெர்ல்பர்ன் மைதானத்துக்கு 88,172 ரசிகர்கள் வருகை தந்துள்ளார்கள். மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பதிவாகியுள்ள நான்காவது பெரிய ரசிகர் கூட்டம் இது.
இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாமல் கால்பந்து போட்டிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. 110 டெஸ்ட் போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன.
2015 உலகக் கோப்பை போட்டி இறுதிப் போட்டிக்கு 93,013 ரசிகர்கள் வருகை தந்தது இன்றுவரை சாதனையாக உள்ளது. மெல்பர்னில் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் வந்தது அப்போதுதான். 2013-ல் இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு 91,112 ரசிகர்களும் 2006-ல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு 89,155 ரசிகர்கள் வருகை தந்தார்கள். இந்நிலையில் இன்றைய 88,172 ரசிகர்கள் வருகை பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.