1000 ரன்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்திய ஆட்டோ ஓட்டுநர் மகனின் இன்றைய பரிதாப நிலை!

உலக சாதனை நிகழ்த்திய பள்ளிச் சிறுவன் அடுத்த இரண்டு வருடங்களில் கிரிக்கெட்டையே மூட்டைக் கட்டி வைத்துவிட்டான் என்றால்...
1000 ரன்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்திய ஆட்டோ ஓட்டுநர் மகனின் இன்றைய பரிதாப நிலை!

ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்திய பள்ளிச் சிறுவன் அடுத்த இரண்டு வருடங்களில் கிரிக்கெட்டையே மூட்டைக் கட்டி வைத்துவிட்டான் என்றால் அது எவ்வளவு பெரிய சோகமான செய்தி. பிரணவ் தனவாடே அந்த நிலைமையில்தான் தற்போது உள்ளார்.   

2016 ஜனவரியில் மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார். அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். 

பண்டாரி கோப்பைக்காகப் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஆர்யா குருகுல பள்ளிக்கு எதிராக, கே.சி.காந்தி உயர்நிலைப் பள்ளி சார்பில் விளையாடினார் 10ம் வகுப்பு மாணவர் பிரணவ். இதில் அவர் 323 பந்துகளில் 59 சிக்ஸர்கள், 129 பவுண்டரிகள் விளாசி இந்தச் சாதனை ரன்களைச் சொந்தமாக்கினார்.

இதற்கு முன்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஏ.இ.ஜே.காலின்ஸ் என்ற வீரர் கடந்த 1899-ம் ஆண்டு அடித்திருந்த 628 ரன்களே உலக அளவில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், 117 ஆண்டுகள் கழித்து 1,009 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார் பிரணவ்.

அத்துடன், இந்திய பள்ளிகளிடையேயான கிரிக்கெட்டில், மும்பையைச் சேர்ந்த பிருத்வி ஷா என்ற மற்றொரு மாணவரின் 546 ரன்களையும் பிரணவ் முறியடித்தார். 

பிரணவின் ரன் குவிப்பானது, அவரது பள்ளி அணியும் உலக சாதனை படைக்க சாதகமாக அமைந்தது. பிரணவின் கே.சி.காந்தி உயர் நிலைப் பள்ளி அணியானது, 3 விக்கெட் இழப்புக்கு 1, 465 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து சாதனை படைத்தது. முன்னதாக, அதன் எதிரணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு முன்பாக, 1926ம் ஆண்டு நியூ செளத் வேல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விக்டோரியா அணி அடித்திருந்த 1,107 ரன்களே உலக சாதனையாக இருந்தது.

1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ள பிரணவ் தனவாடேவுக்கு 5 ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) அறிவித்தது. இதுதொடர்பாக, அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு இன்னிங்ஸில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ள பிரணவ் தனவாடேவுக்கு மாதந்தோறும் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என சங்கத் தலைவர் சரத் பவார் அறிவித்தார். 2016 ஜனவரி முதல் 2021ம் ஆண்டு டிசம்பர் வரையில் அவருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் பிரணவின் கல்வி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.

பிரபல கிரிக்கெட் வீரர்களின் பாராட்டுகளும் பிரணவுக்குக் கிடைத்தன. ஒரு இன்னிங்ஸில் 1000 ரன்களை குவித்து சாதனை படைத்த முதல் வீரரானதற்கு வாழ்த்துக்கள் பிரணவ். கடின உழைப்புடன் இன்னும் புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்றார் சச்சின் டெண்டுல்கர். நன்றாக விளையாடினாய் பிரணவ். எந்த கிரிக்கெட்டில் விளையாடினாய் என்பது முக்கியமல்ல. உனது ரன்கள் நம்பமுடியாதது. இன்னொரு சச்சின் உருவாகிறாரா? என்று குதூகலத்தார் ஹர்பஜன் சிங்.

படிக்க எவ்வளவு இன்பமாக உள்ளது! இந்தப் பள்ளிச் சிறுவன் வருங்காலத்தில் இன்னொரு சச்சினாக வளரவும் கனவு கண்டவர்கள் எத்தனை பேரோ? அன்று கிரிக்கெட் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்த பிரணவ் இன்று பரிதாபமான நிலையில் உள்ளார். 

ஆனால் அந்தச் சாதனை நாள்களுக்குப் பிறகு மோசமாக விளையாடி வருகிறார் பிரணவ். இதனால் மும்பை 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் கூட பிரணவுக்கு இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் உதவித்தொகையைத் தற்போது மறுத்துள்ளார் பிரணவின் தந்தை. எதிர்பார்த்தபடி பிரணவ் சரியாக விளையாடவில்லை. இந்நிலையில் உதவித்தொகை பெறுவது சரியில்லை என்பதால் மறுத்துள்ளோம். அவன் நன்றாக விளையாடும்போது உதவித்தொகையைப் பெற்றுக்கொள்கிறோம் என பிரணவின் தந்தை பிரசாந்த் கூறியுள்ளார். 

1009 ரன்கள் எடுத்ததால் தொடர்ந்து உதவித்தொகை பெறுகிறான். அதனால் அவனுக்கு ரன்கள் எடுப்பதில் கவனம் இல்லை. கிடைக்கும் பணத்தைக் கொண்டு பந்த்ரா பகுதியில் ஒரு பிளாட் வாங்கியுள்ளான் என்று பலரும் பிரணவை விமரிசனம் செய்ததால் அவருடைய குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். 

1009 ரன்கள் எடுத்தபிறகு ஏர் இந்தியா மற்றும் தாதர் யூனியன் அணிகளில் இணைந்தார் பிரணவ். ஆனால் இரு அணிகளும் தற்போது பிரணவை அவர்கள் அணியிலிருந்து நீக்கியுள்ளன. வலைப்பயிற்சிக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தற்போது கிரிக்கெட் விளையாடுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் பிரணவ்.

பிரணவின் பயிற்சியாளர் மொபின் சீக் நம்பிக்கையுடன் பேசுகிறார். அவரை நாங்கள் ஊக்கப்படுத்தி வருகிறோம். தன் கவனத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. தொடர் விமரிசனங்களால் கிரிக்கெட்டில் சரியாகக் கவனம் செலுத்தமுடியாமல் உள்ளார். தன் திறமையை மேலும் உணர்ந்து வரும் வருடங்களில் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com