மீண்டும் சதம் அடித்தார் ஸ்மித்! டிராவில் முடிந்த 4-வது டெஸ்ட்!

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முடிவுகள் எட்டப்பட்ட நிலையில் மழையாலும் பேட்டிங்குக்குச் சாதகமான பிட்சினாலும்...
மீண்டும் சதம் அடித்தார் ஸ்மித்! டிராவில் முடிந்த 4-வது டெஸ்ட்!

* கடந்த 24 வருடங்களில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடியது இப்போதுதான். 

* 2017-ல் ஸ்மித் அடித்த ஆறாவது டெஸ்ட் சதம்.

* ஸ்மித்தின் இரண்டாவது நிதானமான சதம்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்தப் புள்ளிவிவரங்கள் தான் அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளன. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியில்லாமல் டிராவில் முடிவடைந்துள்ளது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முடிவுகள் எட்டப்பட்ட நிலையில் மழையாலும் பேட்டிங்குக்குச் சாதகமான பிட்சினாலும் இந்த டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது.

மெல்போர்ன் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 119 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 103 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 144.1 ஓவர்களில் 491 ரன்கள் குவித்தது. அலாஸ்டர் குக் 409 பந்துகளில் 27 பவுண்டரிகள் உள்பட 244 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் 4, ஹேஸில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-ஆம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. வார்னர் 40, ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட அந்த அணி 61 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. இன்று ஆட்டத்தைத் தொடங்கிய ஸ்மித்தும் வார்னரும் நிதானகமாகவே ரன்கள் சேர்த்தார்கள். டெஸ்ட் போட்டியிலேயே 161 பந்துகளில் 150 ரன்கள் அடிக்கக்கூடிய வார்னர், இன்று அதில் 50 ரன்கள்தான் சேர்த்தார். ஸ்மித்தின் அரை சதத்துக்கு 151 பந்துகள் தேவைப்பட்டன. சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த வார்னர், ரூட் பந்துவீச்சில் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷான் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் லேசாக சூடு பிடித்தது.

பிறகு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ், நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். இதனால் தேநீர் இடைவேளை வரை இருவரையும் பிரிக்கமுடியாமல் போனது. ஆஸ்திரேலிய அணி 118-வது ஓவரில்தான் 250 ரன்களைத் தொட்டது. ஆறே பவுண்டரிகளுடன் 259 பந்துகளில் சதமெடுத்தார் ஸ்மித். இது அவருடைய 23-வது டெஸ்ட் சதமாகும். 

ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் இருந்தபோது இரு கேப்டன்களும் ஆட்டத்தை முடித்துக்கொண்டார்கள். அப்போது ஸ்மித் 102, மார்ஷ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. கிட்டத்தட்ட முழு நாளில் ஆஸ்திரேலிய அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என முன்னிலை வகித்துத் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ஜனவரி 4 அன்று சிட்னியில் தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com