
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்க அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இலங்கை தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. 71 ரன்கள் எடுத்த இந்தியாவின் தீப்தி சர்மா ஆட்ட நாயகியாகவும், தென் ஆப்பிரிக்காவின் சுனே லஸ் தொடர் நாயகியாகவும் அறிவிக்கப்பட்டனர்.
முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அந்த அணியில் மிக்னான் டூ ப்ரீஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.
தொடக்க வீராங்கனை லிஸ்ùஸல் லீ 37, உடன் வந்த லெளரா 21 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து வந்த திரிஷா 22, கோலி டிரையான் 23, கேப்டன் டேன் வான் நீக்கெர்க் 37, மாரிஸான்னே காப் 14, சுனே லஸ் 35 ரன்கள் எடுத்தனர்.
ஷப்னிம், அயபோங்கா ஒற்றை இலக்க ரன்களில் வீழ்த்தனர். இறுதியில் அந்த அணி 49.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஷிக்ஷா பாண்டே 2, எக்தா, பூனம், தீப்தி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை மோனா மேஷ்ராம் அரைசதம் கடந்து 59 ரன்கள் எடுத்து அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தினார். உடன் வந்த காமினி 10 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த தீப்தி சர்மா 89 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து வந்த வேதா 31, சிக்ஷா 12, எக்தா 6, பூனம் 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினார்.
இறுதியாக 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து வென்றது இந்திய அணி. ஹர்மன்பிரீத் கெளர் 41, ராஜேஸ்வரி கெய்க்வாட் ரன்கள் ஏதும் இன்றி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அதிகபட்சமாக மாரிஸான்னே, அயபோங்கா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.