

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை நாளை ஆரம்பிக்கிறது. பாகிஸ்தானுடனான போட்டி என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.
இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் முறையாக பெரிய போட்டியில் தலைமை வகிக்கிறார். எனவே அவருக்கு இந்தத் தொடர் முக்கியமான ஒன்றாகும். அதனால் இதில் வெல்வதற்கு அவர் தீவிரம் காட்டுவார். இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கவுள்ள ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி, கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இந்த முறையும் அந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பலாம். இதுதவிர கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியும் பலம் சேர்க்கிறது. இந்தியா கோப்பையை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாகிஸ்தான் அணி கணிக்க முடியாத அணியாகவே உள்ளது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடர் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து அசார் அலிக்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அஹமது புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை சர்ஃப்ராஸ் கொண்டுவருவாரா என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான், கோலியை வம்புக்கு இழுக்கும் விதத்தில் பேட்டியளித்துள்ளார்.
கோலியைக் கண்டு பாகிஸ்தான் அணி அஞ்சவில்லை. அவரை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியும். கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால் நான்கு போட்டிகளில் நான் அவரை மூன்றுமுறை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் அவர் தோல்வியடைந்துள்ளார்.
இந்திய ரசிகர்கள் முன்னிலையிலேயே கோலிக்குப் பந்துவீசியுள்ளேன். எனவே இங்கிலாந்தில் அவரை எதிர்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. நான் இந்தமுறை அவரை எதிர்கொள்ளும்போது என்னிடம் தடுமாறிய அதே கோலியாகவே அவரை எண்ணுவேன். இது தவறாக இருக்கலாம். அவரும், அவர் விக்கெட்டுகளை எடுத்த அதே ஜுனைத் கானாகவே என்னை எண்ணுவார். இதனால் அவர் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டைப் பறிகொடுக்கலாம்.
கோலி, உலகம் முழுக்க சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசியுள்ளார். ஆனால் என்னிடம் அவரால் ரன்கள் எடுக்கவே முடியவில்லை. இது எனக்குப் பெருமைக்குரிய விஷயம். அந்தச் சாதனையை சாம்பியன் டிராபி போட்டியிலும் தொடர்வேன் என்று கூறியுள்ளார். இதனால் கோலி - ஜூனைத் கான் மோதலையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் கடைசி 5 பெரிய போட்டிகளில் இந்தியாவுடன் தோல்வியடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி ஜெயிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எட்பாஸ்டனில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 291 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்பிறகு அற்புதமாகப் பந்துவீசிய நியூஸிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை மழை தடுத்துவிட்டது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் எட்பாஸ்டனில் நடைபெறுகிறது. நாளையும் காலை மற்றும் மதியம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
நாளை இந்திய நேரம் மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.