சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேச அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு மூன்று வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேச அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள்!
Updated on
2 min read

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுகிற சூழல் உருவாகியுள்ளது. அந்த அணி கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறுகிற வாய்ப்புகள் பிரகாசமான உள்ளன. 

லண்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 95 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. இதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. வார்னர் 40, ஸ்மித் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தொடர்ந்து மழை பெய்ததாலும் கட்டாயத் தேவையான 20 ஓவர்களுக்கு ஆட்டம் நடைபெறாததாலும் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு மூன்று வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எப்படி என்று பார்க்கலாம். 

1. வங்கதேசம் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தையும் இங்கிலாந்து மீதமுள்ள இரு போட்டிகளையும் (நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக) வென்றால் வங்கதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

2. அல்லது வங்கதேசம் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை வெல்லவேண்டும். மறுபக்கம் இங்கிலாந்து மீதமுள்ள இரு லீக் போட்டிகளிலும் (நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக) தோற்கவேண்டும். இதனால் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெறும். வங்கதேசம், நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் மூன்று புள்ளிகளுடன் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசம் தகுதி பெற வாய்ப்புண்டு.   

3. வங்கதேசம் நியூஸிலாந்தைத் தோற்கடிக்க வேண்டும். நியூஸிலாந்திடம் இங்கிலாந்து தோற்கவேண்டும். அதேசமயம் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வென்றுவிட்டாலும் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புண்டு. அதாவது 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து தகுதி பெறும். வங்கதேசம், நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் மூன்று புள்ளிகளுடன் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசம் தகுதி பெற வாய்ப்புண்டு.  

ஆனால்... கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்தை வங்கதேசம் தோற்கடித்தாலும் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போக வாய்ப்புண்டு.

வங்கதேச அணி கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்தைத் தோற்கடிக்கிறது. அதேசமயம் இன்று நடைபெறுகிற ஆட்டத்தில் இங்கிலாந்து நியூஸிலாந்தையும் ஆஸ்திரேலியா இங்கிலாந்தையும் தோற்கடித்தால் அந்தோ பரிதாபம்! வங்கதேசம் தகுதி பெறாது. 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com