

அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பாலாஜி ஆகியோருடன் ஜூனியர் மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் வெங்கட்ராமன் கணேசன், ஜெர்மனி கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பிடித்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்றி வரும் 32 வயது கணேசன், பணி காரணமாக 2012-ல் ஜெர்மனிக்கு மாற்றலானார். அங்குத் தொடர்ந்து கிரிக்கெட்டைத் தொடர்ந்தவர் தற்போது ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் ஐசிசி போட்டியில் பங்குபெறும் ஜெர்மனி அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இடக்கை தொடக்கவீரரான கணேசன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:
இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. குடும்பச் சூழல் காரணமாக 2006-ல் கிரிக்கெட்டை விட நேர்ந்தது. ஆனால் இப்போது ஒரு தேசிய அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நான் ஜெர்மனியில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். குடும்பத்தின் ஆதரவு காரணமாக கிரிக்கெட், வேலை என இரண்டிலும் கவனம் செலுத்தமுடிகிறது என்று கூறியுள்ளார்.
ஜெர்மனியில் கிரிக்கெட் ஆட எப்படி வாய்ப்பு கிடைத்தது?
ஜெர்மனி, கால்பந்தின் மீது ஆர்வம் உள்ள தேசம். கிரிக்கெட் குறித்து இணையத்தில் தேடியபோது அங்குச் சில கிரிக்கெட் கிளப்புகள் இருப்பதைக் கண்டறிந்தேன். ஜெர்மனியில் கிரிக்கெட்டுக்கு எதிர்காலம் உண்டு என்பதைக் கண்டறிந்தேன். கிரிக்கெட் கிளப்புகளில் சேர்ந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினேன். எனது உடற்தகுதியில் அதிகக் கவனம் செலுத்தினேன். என்னுடைய மாநில அணியான வெஸ்டர்ன் ஈகிள்ஸுக்காகச் சிறப்பாக விளையாடி சதங்கள் அடித்தேன் என்கிறார்.
வெங்கட்ராமன் கணேசன், ஜெர்மனியின் குடியுரிமை பெற்றவர் அல்லர். ஆனால், ஐசிசி விதிமுறைகளின்படி, ஒருவர் ஒரு நாட்டில் குறைந்தபட்சம் நான்கு வருடங்கள் வசித்தால் அவரால் அந்நாட்டின் சார்பாக ஐசிசி போட்டிகளில் விளையாடமுடியும். இதன் அடிப்படையில் ஜெர்மனி அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
தமிழக U14, U22 அணிகளிலும் 2004-06ல் எஸ்பிஐ, மாம்பலம் மஸ்கிடோஸ் ஆகிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் லீக் அணிகளிலும் விளையாடியுள்ள கணேசன், ஜெர்மனி அணி குறித்து கூறியதாவது: ஜெர்மனியில் கிரிக்கெட்டை வளர்த்தெடுப்பதில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலிய மக்களின் பங்களிப்பு அதிகம். ஜெர்மனி அணியின் கேப்டனே ஓர் இந்தியர்தான். ரிஷி பிள்ளை. ஐரோப்பாவில் கிரிக்கெட் நன்கு வளர்ச்சி காண்கிறது. தொலைக்காட்சிகளில் உள்ளூர் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன என்கிறார்.
கணேசன் ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள படங்கள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.