சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குத் தகுதி பெற அணிகள் என்ன செய்யவேண்டும்?

மூன்று எதிர்பாராத முடிவுகளால் சாம்பியன்ஸ் டிராபி போட்டி திடீரென பரபரப்பாகியுள்ளது... 
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குத் தகுதி பெற அணிகள் என்ன செய்யவேண்டும்?
Updated on
2 min read

* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது பாகிஸ்தான். 

* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை.

* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது வங்கதேசம்.

இந்த மூன்று எதிர்பாராத முடிவுகளால் சாம்பியன்ஸ் டிராபி போட்டி திடீரென பரபரப்பாகியுள்ளது. இந்த நிலையில் லீக் சுற்றின் இறுதிக்கு வந்துவிட்டதால் அரையிறுதிக்குத் தகுதி பெற ஒவ்வொரு அணியும் என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.

குரூப் ஏ

இங்கிலாந்து: 4 புள்ளிகள்

இங்கிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. எனவே அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உற்சாகமாக விளையாடும்.

ஆஸ்திரேலியா: 2 புள்ளிகள்

இங்கிலாந்துடனான கடைசி லீக் போட்டி, ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாகும். அந்த அணி விளையாடிய முதல் இரு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. எனவே இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது ஆஸ்திரேலியா.

வங்கதேசம்: 3 புள்ளிகள்

நேற்று நியூஸிலாந்து அணியை வென்றதன் மூலம் வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோற்கும்பட்சத்தில் வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறும். 

நியூசிலாந்து: 1 புள்ளி

வங்கதேசத்திடம் தோற்ற நியூஸிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

குரூப் பி

இந்தியா: 2 புள்ளிகள்

முதல் போட்டியில் வெற்றி. அடுத்தப் போட்டியில் எதிர்பாராத தோல்வி. எனவே நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். தோற்றுப்போனால் வெளியேறவேண்டியதுதான். 

தென் ஆப்பிரிக்கா: 2 புள்ளிகள்

நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். தோற்றுப்போனால் வெளியேறவேண்டியதுதான். குரூப் பி பிரிவில் இந்தியா அல்லது தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என யார் எண்ணியிருக்கமுடியும்? 

பாகிஸ்தான்: 2 புள்ளிகள்

தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்த பாகிஸ்தான் அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. கடைசி லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இதில் வெல்லும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். 

இலங்கை: 2 புள்ளிகள்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. திங்கள் அன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

மீதமுள்ள லீக் போட்டிகள்

சனி: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

ஞாயிறு: இந்தியா - தென் ஆப்பிரிக்கா

திங்கள்: பாகிஸ்தான் - இலங்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com