டெஸ்ட்: இந்தியா நல்ல தொடக்கம்! ஆஸி. 451 ரன்கள்!

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட்: இந்தியா நல்ல தொடக்கம்! ஆஸி. 451 ரன்கள்!

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. காயத்திலிருந்து மீண்ட முரளி விஜய் அணிக்குத் திரும்பினார். அபிநவ் முகுந்த் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்குப் பதிலாக கிளென் மேக்ஸ்வெல், பட் கம்மின்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 244 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 117, கிளென் மேக்ஸ்வெல் 147 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் அதிகம் தாமதிக்காமல் தனது முதல் சத்தை எட்டினார் மேக்ஸ்வெல். அவர் பிறகு ஜடேஜா பந்துவீச்சில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 116-வது ஓவரில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. மேத்யூ வேட், ஜடேஜா பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 37 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கம்மின்ஸும் அதே ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு ஸ்மித் 315 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 2-ம் நாள் உணவு இடைவேளையின்போது 118 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி. ஸ்மித் 153 ரன்களுடனும் ஓ’கீஃப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். 

71 பந்துகள் வரை தாக்குப்பிடித்து ஸ்மித் மேலும் ரன்கள் சேர்க்க உதவிய ஓ’கீஃப் 25 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த லயனை 1 ரன்னில் வீழ்த்தினார் ஜடேஜா. இது அவருடைய 5-வது விக்கெட்டாகும். ஹேஸிவுட் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களுக்கு 451 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்மித் அபாரமாக ஆடி 178 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியத் தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்தது. விஜய் 2, ராகுல் 18 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

வழக்கம்போல இந்த இன்னிங்ஸிலும் சுறுசுறுப்பாக ரன்கள் குவித்தார் ராகுல். சரியான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்து ரன்களை உயர்த்தினார். 69 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். நிச்சயம் சதமெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வழக்கம்போல கவனமாக விளையாடி மெல்ல மெல்ல ரன்களைச் சேர்த்தார் முரளி விஜய். 

2-வது நாள் முடிவில் இந்திய அணி ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 42, புஜாரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 331 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com