டெஸ்ட்: சதத்துடன் ஆஸி.யின் சவாலை எதிர்கொண்ட புஜாரா!

இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட்: சதத்துடன் ஆஸி.யின் சவாலை எதிர்கொண்ட புஜாரா!
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் புஜாரா அற்புதமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 361 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 178 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 185 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 42, புஜாரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடர்ந்தபோது மிகவும் கவனமாக ஆடிய முரளி விஜய் அரை சதம் எடுத்தார். 129 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் அவர் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

விஜய் - புஜாரா ஆகிய இருவரும் நிதானமாக ஆடி 100 ரன்கள் வரை சேர்த்தார்கள். உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஸ்டம்பிங் ஆகி 82 ரன்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய். சதமடிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

இன்றைய நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 73 ரன்கள் சேர்த்துள்ளது. 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 70.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. புஜாரா 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முதல் நாள் ஆட்டத்தின்போது பந்து பவுண்டரிக்கு செல்வதை பாய்ந்து சென்று தடுத்தார் கோலி. அப்போது அவருடைய வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து களத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. தோள்பட்டையில் காயமடைந்த கோலி, 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். ஆனால் 2-வது நாள் ஆட்டத்தின்போது அவர் பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் தோள்பட்டையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவர் பேட்டிங் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் அவுட் ஆனபின்பு ஆடவந்தார் கோலி.

உணவு இடைவேளைக்குப் பிறகு, 155 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் புஜாரா. இந்த டெஸ்டிலாவது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.

கோலி சென்றபிறகு ரஹானே களத்துக்குள் வந்தார். மீண்டும் இன்னொரு புஜாரா - ரஹானே கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்பியபோதும் புஜாரா கவனமாக ஆடிவந்தார். 214 பந்துகளில் சதம் எடுத்து அசத்தினார் புஜாரா. இதில் 14 பவுண்டரிகள்.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 99 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. புஜாரா 109, நாயர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்றைய நாளின் முடிவில் ஆஸி.-யின் ஸ்கோரை இந்தியா எட்டிவிடுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் ஆஸி. அணியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியைத் தடுமாறச் செய்தது. நாளின் கடைசிப் பகுதியில் அதிக ரன்கள் குவிக்கலாம் என்று திட்டமிட்ட நிலையில் அதை நிறைவேற்றமுடியாத அளவுக்குச் சூழல் மாறிப்போனது. முச்சதத்துக்குப் பிறகு ரன்கள் குவிக்கத் தடுமாறும் கருண் நாயர், இந்த ஆட்டத்திலும் ஏமாற்றினார். 23 ரன்களில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். இந்தத் தொடரில் ரன்கள் எடுக்கத் தடுமாறும் இன்னொரு வீரர் அஸ்வின். ஆனால் அவரும் 3 ரன்களில் டிஆர்எஸ் முறையீட்டுக்குப் பிறகு அவுட் ஆகி ஏமாற்றினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாரா - சாஹா ஜோடி இறுதிவரைப் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.

3-ம் நாளின் முடிவில் இந்திய அணி 130 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130, சாஹா 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com