எல்கர், மார்க்ரம் சதம்; தென் ஆப்பிரிக்கா 428 ரன் குவிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட்இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது.
சதமடித்த மகிழ்ச்சியில் டீன் எல்கர்.
சதமடித்த மகிழ்ச்சியில் டீன் எல்கர்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட்இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான டீன் எல்கர் (113), அய்டன் மார்க்ரம் (143) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 53.4 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் புளோயம்ஃபான்டீன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு டீன் எல்கர்-அய்டன் மார்க்ரம் ஜோடி அபார தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. அசத்தலாக ஆடிய டீன் எல்கர் 116 பந்துகளில் சதமடித்தார். இந்தத் தொடரில் அவர் அடித்த 2-ஆவது சதம் இது. அதேநேரத்தில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 10-ஆவது சதம் இதுவாகும்.
டீன் எல்கரைத் தொடர்ந்து மார்க்ரம் 141 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய முதல் சதமாகும். தென் ஆப்பிரிக்கா 53.4 ஓவர்களில் 243 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. டீன் எல்கர் 152 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் சேர்த்து சுபாஷிஸ் ராய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆம்லாவும் சிறப்பாக ஆட, அந்த அணி 58.4 ஓவர்களில் 276 ரன்களை எட்டியபோது மார்க்ரம் ஆட்டமிழந்தார். அவர் 186 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவித்தார்.
பின்னர் வந்த டெம்பா பெளமா 7 ரன்களில் நடையைக் கட்ட, ஆம்லாவுடன் இணைந்தார் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ். இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்துள்ளது. ஆம்லா 89, டூபிளெஸ்ஸிஸ் 62 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 
வங்கதேசம் தரப்பில் சுபாஷிஸ் ராய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com