தோல்வி எதிரொலி: ஆஸி. வீரர்கள் பேருந்து மீது கல் வீச்சு! 

வீசப்பட்ட கல், கிரிக்கெட் பந்து அளவுக்குப் பெரிதாக இருந்துள்ளது. பேருந்தின் வலது பக்கத்தில்...
தோல்வி எதிரொலி: ஆஸி. வீரர்கள் பேருந்து மீது கல் வீச்சு! 
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியினர் போட்டி முடிந்து தங்களுடைய நட்சத்திர விடுதிக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த பேருந்தின் மீது பெரிய கல் ஒன்று வீசப்பட்டுள்ளது. கல் வீசப்பட்டதில் ஜன்னல் கண்ணாடி சிதறியுள்ளது. இதனால் ஆஸி. வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைக் கவலையுடன் பகிர்ந்துள்ளார் ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச். இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்கமுடியாத ரசிகர் ஒருவர்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று அறியப்படுகிறது.   

வீசப்பட்ட கல், கிரிக்கெட் பந்து அளவுக்குப் பெரிதாக இருந்துள்ளது. பேருந்தின் வலது பக்கத்தில் வீசப்பட்ட கல் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே விழுந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக அந்த ஜன்னலின் ஓரம் எந்த ஒரு வீரரும் அமர்ந்திருக்கவில்லை. இதனால் இந்தக் கல் வீச்சுச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சமீபத்தில் வங்கதேசத்துக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அடுத்த ஐந்தாவது வாரத்தில் மீண்டுமொரு கல் வீச்சுச் சம்பவத்தை ஆஸி. வீரர்கள் எதிர்கொண்டுள்ளார்கள். 

குவாஹாட்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் ஆஸி. வீரர்களுக்குக் கூடுதல் காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com