டி20 தொடரின் பரிசளிப்பு விழா நிராகரிப்பு: ரசிகர்கள் - வெறியர்களானது காரணமா?

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் முடிந்ததை அடுத்து நடைபெற இருந்த பரிசளிப்பு விழா நிராகரிக்கப்பட்டது.
டி20 தொடரின் பரிசளிப்பு விழா நிராகரிப்பு: ரசிகர்கள் - வெறியர்களானது காரணமா?

இந்தியா சுற்றுப்பயணம் செய்த ஆஸ்தேரலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. மேலும் இதன்மூலம் அணிகளுக்கான ஐசிசி தரவரிசையிலும் முதலிடம் பிடித்தது.

இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன. 3-ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் கோப்பை பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், வழக்கமாக ரசிகர்கள் முன்பு மைதானத்திலேயே இதுபோன்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கை. ஆனால் இம்முறை வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் இந்தக் கோப்பை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த 3-ஆவது போட்டி கைவிடப்பட்டதை கூட வீரர்கள் தங்கள் விடுதிக்குச் சென்ற பின்பு தான் அறிவிக்கப்பட்டது. 

ரசிகர்கள் - வெறியர்கள் ஆன கதை தெரியுமா?

விளையாட்டு என்றாலே வெற்றியும், தோல்வியும் அடங்கியது தான். இதில் போட்டியிடும் இரு அணிகளில் ஏதேனும் ஒன்று வெற்றிபெற வேண்டுமானால் அடுத்த அணி தோல்வியடையத்தான் வேண்டும். இதில், ரசிகர்கள் தங்கள் தாய்நாட்டு அணி அல்லது விருப்ப அணி வெற்றிபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நிதர்சனம். ஆனால், தோல்வியை ஏற்றுக்கொள்ளாத மனநிலை வளர்ந்தால் மட்டுமே ஆபத்து மேலோங்கும். 

குறிப்பாக தங்கள் அணி வெற்றியடைந்தால் அதை தலைமேல் வைத்து கொண்டாடுவதும், தோல்வியுற்றால் ரகளையில் ஈடுபடும் நிலைமை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு எந்த விளையாட்டும் விதிவிலக்கல்ல. விளையாட்டு என்றால் ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்வென்பது மறைந்து எதிர்தரப்பு போட்டியாளரை வாழ்நாள் எதிரியாக பார்ப்பதே காலக்கொடுமை.

ஒற்றுமையும், சமத்துவமும் மேலோங்க வேண்டிய கலை மற்றும் விளையாட்டுத்துறையில் அரசியல் லேலோங்குவது வேடிக்கைதான். இது அவ்விளையாட்டில் பங்கேற்கும் போட்டியாளருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவது போன்று அமைந்து விடுகிறது. மேலும் அந்தப் போட்டியாளர் விரும்பி விளையாட வேண்டியதை கட்டாயமாக விளையாடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற விளையாட்டாக இருக்கும் கால்பந்து ஆட்டங்களின் போது வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது இதற்குச் சான்றாகும். இதில் வீரர்களும் தங்கள் மாண்பு குறையும் விதமாக நடந்துகொள்கின்றனர். இந்த மிருகத்தனம் தற்போது கிரிக்கெட் விளையாட்டையும் மெல்ல ஆட்கொண்டு வருகிறது.

இந்தியாவும், கிரிக்கெட்டும் என்றும் பிரிக்க முடியாத அங்கமாகி  தலைமுறைகள் ஆகிறது. முந்தைய காலகட்டத்தில் கிரிக்கெட்டுக்கு இந்தியர்கள் ரசிகர்களாய் இருந்தது கடந்து இப்போது வெறியர்களாக உருவெடுத்து வருகின்றனர். இதற்கு அச்சாரமிட்டது 1996 உலகக் கோப்பை. இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்தது. இதை சற்றும் சகித்துக்கொள்ளாத ரசிகர்கள் மைதானத்திலேயே ரகளையில் ஈடுபட்டு வெறியர்களாகத் தொடங்கினர்.

பின்னர் நடைபெற்ற 2001, 2007 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி தோல்விகளைச் சந்தித்தபோது எல்லாம் அவர்களின் வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபடுவதும், கல்வீச்சு சம்பவங்களை அரங்கேற்றுவதுமாக வெறித்தனம் வளர்ந்தது. குறிப்பாக பாகிஸ்தானுடன் தோல்வி என்றால் சொல்லத்தேவையில்லை.

இதனால் வீரர்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கும், கூடுதல் நெருக்கடிக்கும் ஆளாகினர். வெளிநாட்டுத் தொடர்களில் சரிவர சோபிக்கத் தவறினால், இந்தியாவில் அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு தரும் நிலை ஏற்பட்டது. இதற்கு சற்றும் சளைக்காத சம்பவம்தான் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியத் தொடரிலும் அரங்கேறியது.

2-ஆவது டி20 போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்தித்து. இந்நிலையில் போட்டி முடிந்து வீரர்கள் அனைவரும் விடுதிக்குத் திரும்பும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்தின் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதுவே இந்த டி20 தொடரின் பரிசளிப்பு விழா நிராகரிக்கப்பட காரணமாக அமைந்தது. ஹைதராபாத்தில் நடைபெற இருந்த 3-ஆவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதைக் கூட இரு நாட்டு வீரர்களும் பத்திரமாக விடுதிக்குத் திரும்பிய பின்னர் தான் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்தக் கோப்பையும் விடுதியிலேயே வழங்கப்பட்டது. இங்கு ரசிகர்கள் யாரும் ரகளையில் ஈடுபடவில்லை என்றாலும் முன்பு நடந்த இதுபோன்ற சம்பவங்களே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது.

இருப்பினும், இதுநாள் வரையில் சென்னையில் மட்டும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் இருப்பது தனிச்சிறப்புதான். சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் எந்த அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் அவர்களைப் பாராட்டத் தவறியதில்லை. பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்தியாவுக்கு எதிராக இதே சேப்பாக்கம் மைதானத்தில் 196 ரன்கள் விளாசியபோது ரசிகர்கள் அவருக்கு ஏகோபித்த வரவேற்பை அளித்தது சிறந்த உதாரணமாகும். சென்னையைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ரசிகர்களின் இந்த நற்பண்பு தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com