ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, திங்கள்கிழமை பத்மபூஷண் விருது பெற்றார்.
ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் மற்றும் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து உயரிய பத்மபூஷண் விருது பெற்றார். இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய 3-ஆவது நிலை கௌரவமாக பத்மபூஷண் விருது உள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் பத்மபூஷன் பெறும் 11-ஆவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். 

இந்த விழாவில் ராணுவ சீருடையில் வந்த மகேந்திர சிங் தோனி, ராணுவ அணிவகுப்பில் சென்று குடியரசுத் தலைவரிடம் இருந்து இவ்விருதை பெற்றார். புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இவ்விழா நடைபெற்று வருகிறது. 

சரியாக 7 வருடங்களுக்கு முன்னதாக 2011-ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 28 வருடங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. 

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, 91 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதிலும் தனது பாணியில் அதிரடியாக சிக்ஸர் அடித்து இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

ரசிகர்கள் மனதில் நீங்காத நினைவாக அமைந்துள்ள இதே தினத்தில் அவருக்கு இந்திய அரசின் உயரிய பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com