ஐபிஎல்-லில் இன்னொருமுறை சாதிப்பாரா வாஷிங்டன் சுந்தர்?

ஐபிஎல்-லில் இன்னொருமுறை சாதிப்பாரா வாஷிங்டன் சுந்தர்?

ஐபிஎல்-லில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ரூ. 3.30 கோடிக்கு வாஷிங்டனைத் தேர்வு செய்துள்ளது....

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் தன் திறமையைப் பலமாக நிரூபித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். 5 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எகானமி - 5.70. வாஷிங்டனின் இன்னொரு சிறப்பு, பவர்பிளே பகுதியில் ஓவர்கள் வீசுவது. இதனால் கேப்டனின் சுமையை அவர் எளிதாக்குகிறார். 

இதுவரை ஒரு ஒருநாள் ஆட்டங்களிலும் 6 டி20 ஆட்டங்களிலும் ஆடியுள்ளார் வாஷிங்டன். அனைத்திலும் ரோஹித் சர்மாவே கேப்டன். ஆனால் ஐபிஎல்-லில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ரூ. 3.30 கோடிக்கு வாஷிங்டனைத் தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வி. உள்ளூர் வீரரைத் தேர்வு செய்து அணியை பலமூட்டும் மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டது சிஎஸ்கே என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. 

கடந்த வருடம் அஸ்வினுக்குப் பதிலாக புணே ஐபிஎல் அணியில் இடம்பிடித்தார் வாஷிங்டன் சுந்தர். அவருடைய தேர்வு அந்த அணிக்கு மிகப்பெரிய திருப்பத்தை அளித்தது. புணே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 11 ஆட்டங்கள் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 6.16. ஐபிஎல் முடிவில் பவர்பிளே-யில் சிறப்பாகப் பந்துவீசுகிறவர் என்கிற முத்திரை சுந்தர் மீது விழுந்தது. 

இவரை அணியில் சேர்ப்பதற்கு முன்பு பவர்பிளே ஓவர்களில் புணே அணி தடுமாறி வந்தது. உதாரணமாக முதல் நான்கு ஆட்டத்தில் புணே அணி, பவர்பிளே-யில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் வழங்கியது. இதனால் அந்த முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பிறகு வாஷிங்டன் சுந்தர், உனாட்கட், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களால் அந்த அணி விஸ்வரூபம் எடுத்து இறுதிச்சுற்று வரை முன்னேறியது.

முதல் ஐபிஎல் போட்டியிலேயே இறுதிச்சுற்றில் கலந்துகொண்ட வாஷிங்டன் சுந்தர், அதில் இரு சாதனைகளை நிகழ்த்தினார்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடிய இளம் வீரர்கள்

17 வயது 228 நாள்கள் வாஷிங்டன் சுந்தர் (2017)
19 வயது 178 நாள்கள் ஜடேஜா (2008) 
19 வயது 256 நாள்கள் மனிஷ் பாண்டே (2009) 

ஐபிஎல் இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி குறைந்த ரன்கள் அளித்த வீரர்கள்

13 ரன்கள் வாஷிங்டன் சுந்தர்
16 ரன்கள் அஸ்வின்  
16 ரன்கள் கும்ப்ளே  
16 ரன்கள் ஆர்பி சிங்

2017 ஐபிஎல் போட்டியில் கவனம் ஈர்த்த வாஷிங்டன் சுந்தர், இந்தமுறை தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். வாஷிங்டன் தன்னுடைய மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தி பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வெல்ல உதவுவாரா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com