சிறந்த ஐபிஎல் கேப்டன் தோனியா ரோஹித் சர்மாவா?

ஏழு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்றது பெரிதா அல்லது மூன்றுமுறை கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தது பெரிதா?
சிறந்த ஐபிஎல் கேப்டன் தோனியா ரோஹித் சர்மாவா?

ஐபிஎல்-லின் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி என்கிற பதில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் சாம்பியன் ஆன சென்னை அணி 2008, 2012, 2013, 2015 ஆகிய நான்கு வருடங்களிலும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இதுதான் தோனிக்கு எதிராக உள்ளது. ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்கிற விவாதத்துக்கு வலு சேர்க்க சாதகமான அம்சங்கள் ஏராளமாக உள்ளன.

தோனி அதிகமுறை (7) ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினாலும் அதிக வெற்றிகள் ரோஹித் சர்மாவையே தேடிவந்துள்ளன.

கடந்த வருட இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோனி இடம்பெற்ற ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ். முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது. 

மும்பை அணி விளையாடிய நான்கு ஐபிஎல் இறுதிச்சுற்று ஆட்டங்களும் தோனிக்கு எதிராகத்தான். 2010, 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற மும்பை அணி, 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

தோனியை விடவும் ரோஹித் சர்மா நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார் (2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் வீரராக). இந்தச் சாதனை வேறு எந்த வீரருக்கும் கிடையாது. ஐபிஎல்-லில் மூன்றுமுறை கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்கிற பெருமையும் ரோஹித் சர்மா வசமே உள்ளது. யூசுப் பதான், மலிங்கா, பொலார்ட், ராயுடு ஆகிய வீரர்களும் மூன்றுமுறை இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்துள்ளார்கள். மும்பை அணியில் தற்போதுள்ள வீரர்களில் கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் பொலார்ட், அம்பட்டி ராயுடு ஆகியோர் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றபோது இடம்பெற்றிருந்தனர். ஆனால் தோனியோ, இவர்களுக்குப் பின்னால் இரு வெற்றிகளுடன் உள்ளார்.

ஏழு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தோனி தேர்வானாலும் இதுவரை ஒருமுறை கூட அவர் ஆட்ட நாயகன் பட்டத்தையோ தொடர் நாயகன் பட்டத்தையோ பெற்றதில்லை. அதேபோல அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்ததில்லை. ஆனால் 2015-ம் ஆண்டில் ரோஹித் சர்மா ஐபிஎல் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

ஏழு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்றது பெரிதா அல்லது மூன்றுமுறை கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தது பெரிதா? தொடரட்டும் விவாதம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com