விதிமுறைகளை மீறவேண்டாம்: கோலியிடம் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்திய போட்டி நடுவர்!

ஓர் அணியின் கேப்டனின் நடத்தை எப்படியிருக்க வேண்டும், கேப்டனின் பொறுப்புகள் என்னென்ன...
விதிமுறைகளை மீறவேண்டாம்: கோலியிடம் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்திய போட்டி நடுவர்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடி 225 பந்துகளில் 22 பவுண்டரியுடன் 149 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கோலியின் 22-வது டெஸ்ட் சதத்துக்கு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் பலத்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ரன் அவுட் செய்தார் விராட் கோலி. அப்போது, மிகவும் ஆக்ரோஷமாக கத்தியபடி, ஒருநாள் தொடரின்போது ரூட் செய்த செய்கையை தானும் செய்துகாண்பித்தார் கோலி. அப்போது அவர் மிகவும் உணர்ச்சிவயமாகத் தென்பட்டார். இதையடுத்து, இந்த டெஸ்ட் போட்டியின் நடுவரான ஜெஃப் குரோவ் கோலியின் செயலை ஏற்கவில்லை என்று தற்போது தெரிய வருகிறது. 

இன்று காலை கோலியைச் சந்தித்த குரோவ், ஆட்ட விதிமுறைகளை மீறவேண்டாம் என அதிகாரபூர்வமாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஓர் அணியின் கேப்டனின் நடத்தை எப்படியிருக்க வேண்டும், கேப்டனின் பொறுப்புகள் என்னென்ன என்று அவர் கோலிக்கு விளக்கியதாகத் தெரிகிறது. எனினும் ரூட் ஆட்டமிழந்தபோது ஆக்ரோஷமாகக் கத்திய கோலி மீது நடவடிக்கை எதுவும் இல்லை என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

முன்னாள் வீரர் ஆதர்டன், கோலியின் செயலில் தவறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இச்செய்தி என்னைக் கடுப்பேற்றுகிறது. இரு அற்புதமான நாள்கள் அமைந்துள்ளன. வீரர்கள் யாரும் பேட்ஸ்மேனின் முகத்துக்கு முன்பு கேவலமாக நடந்துகொள்ளவில்லை. வெளியேறும்படி சைகை காட்டவில்லை. கோலியின் ஆக்ரோஷம், ஆடுகளத்துக்கு வெளியே, தன்னிச்சையாக எழுந்த செயல். இதை விடவும் கவலைப்பட முக்கியமான விஷயங்கள் உள்ளன என கோலிக்கு ஆதரவாகப் பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com