ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் 2018: கோலாகல தொடக்கம்

18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது.
ஆசியப் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வாணவேடிக்கை.
ஆசியப் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வாணவேடிக்கை.


* வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள்
* வாண வேடிக்கைகள்
* நீரஜ் சோப்ரா தலைமையில் இந்தியா அணிவகுப்பு

18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது.
முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன.
இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் போட்டிகள் நடக்கின்றன. 45 நாடுகளைச் சேர்ந்த 10000 வீரர் வீராங்கனைகள், அதிகாரிகள், நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஆசியப் போட்டித் தொடக்க விழா சனிக்கிழமை ஜகார்த்தாவின் ஜெலரோ பங் கர்னோ விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் அகமது அல் பஹாத் அல் சபா தலைமை தாங்கினார்.
மோட்டார் பைக்கில் வந்த அதிபர்: விழா தொடங்குவதற்கு முன்பு ஹெல்மெட் அணிந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக விளையாட்டரங்கில் நுழைந்தார். பின்னர் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மோட்டார் பைக்கில் இருந்தில் அதிபர் விடோடோ இறங்கி மேடைக்குச் சென்றார்.
சரியாக மாலை 5.30 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் 2200 குழந்தைகள் பங்கேற்ற வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில் ஆப்கானிஸ்தான் அணியினர் அணிவகுத்து வந்தனர். இந்திய அணிக்கு இளம் தடகள வீரரும், காமன்வெல்த் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா தலைமை தாங்கி கொடியை ஏந்தி வந்தார். இந்திய அணியினர் நீல நிற கோட் சூட் அணிந்து கம்பீரமாக நடந்து வந்தனர். மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 6000 வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு சீருடைகளில் அணிவகுத்து வந்தனர். 
இறுதியாக போட்டியை நடத்தும் இந்தோனேஷி வீரர்கள் அணிவகுத்து வந்தனர். பின்னர் அந்நாட்டின் பிரபல பாடகி வியா வல்லேன் ஆசிய போட்டியின் அதிகாரப்பூர்வ பாடலை பாடி அசத்தினார். மற்றொரு பாடகர் டுலுஸ் தேசிய கீதத்தை பாடினார். 
அதைத் தொடர்ந்து இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக போட்டிகளை தொடங்கி வைத்தார். அவரது மனைவி ஐரியனா விடோடோ, துணை அதிபர் ஜுஸுப் கல்லா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தோனேஷியாவின் கலாசாரம், கலை சிறப்புகளை பிரதிபலிக்கும் கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்நாட்டு பாட்மிண்டன் வீராங்கனை லூசியா பிரான்ஸிஸ்கா சுசு சுசாந்தி ஆசிய போட்டி ஜோதியை ஏற்றி வைத்தார். தொடக்க விழாவுக்கு 120 மீ நீளம், 30 மீ அகலம், 26 மீ உயரம் கொண்ட மலைப் போன்ற பின்னணியுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டிருந்தது.

போட்டி துளிகள்
ஆசியப் போட்டிக்கு இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் உள்பட 804 பேர் குழு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்திய அணிகள் சிறப்பான வெற்றிகளைக் குவிக்க பிரதமர் மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோர், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சுட்டுரை (டுவிட்டர்) மூலம் வாழ்த்து 
தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் சங்க செயல்பாடுகளில் அரசின் தலையீடு இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த குவைத் அணி பங்கேற்க ஓசிஏ அனுமதி அளித்தது.

ஒருங்கிணைந்த கொரிய அணிகள்


பரம வைரிகளாக திகழ்ந்த தென்கொரியா-வடகொரிய நாடுகள் இடையே தற்போது அமைதி நிலவி வரும் நிலையில் இரு அணிகளும் ஒன்றிணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனர். ரோயிங், கூடைப்பந்து, டிராகன் போட் பந்தயம் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்த அணிகளை களமிறக்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com