

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 6-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மொத்தம் 6 ஆட்டங்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 5 ஆட்டங்கள் முடிவில் 4-1 என முன்னிலை வகிக்கிறது இந்தியா. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 5-ஆவது ஆட்டத்தில் வென்றதன் மூலம், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது. அத்துடன், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
கடைசி ஆட்டத்திலும் வென்று, ஒருநாள் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது. மறுபுறம், இந்தத் தொடரில் இதுவரை ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா. அந்த ஆறுதல் வெற்றியோடு கூடுதலாக ஒரு வெற்றி பெறும் நோக்கில் தென் ஆப்பிரிக்கா களம் காணும்.
இரு அணிகளிலும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. எனினும், இந்தியாவின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.
இலங்கை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை புவனேஷ்வர் குமார் 19 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களிலும், ஜஸ்பிரீத் பும்ரா 20 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளனர். எனவே, அடுத்த சுற்றுப் பயணத் தொடர்களுக்கு முன்பாக அவர்கள் இருவருக்கும் அளிக்கப்படும் ஓய்வு பயனுள்ளதாக இருக்கும்.
வேகப்பந்துவீச்சில் இந்தியா இவர்களை மட்டுமே நம்பியுள்ளது. 2019 உலகக் கோப்பை போட்டி நெருங்கியுள்ள நிலையில், மாற்று வீரர்களையும் தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. முகமது ஷமி 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு 3 ஒருநாள் தொடர்களில் மட்டுமே ஆடியுள்ளார். 4-ஆவது தேர்வான ஷர்துல் தாக்குர் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் இன்னும் சோபிக்க வேண்டியுள்ளது. இத்தொடரில் 4 முதல் 7-ஆவது எண் வரையிலான பேட்ஸ்மேன்களால் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களது வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே, ஓய்வு காரணமாக இந்திய அணியினர் வியாழக்கிழமை பயிற்சி மேற்கொள்ளவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.