குளிர்கால ஒலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கம் வென்றது ஜெர்மன் ஜோடி

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஃபிகர் ஸ்கேட்டிங் பிரிவில் ஜெர்மனியின் மாஸ்ஸாட் புருனோ-சாவ்சென்கோ அல்ஜோனா ஜோடி புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.
பனிச்சறுக்கு நடனத்தில் புருனோ- அல்ஜோனா ஜோடி.
பனிச்சறுக்கு நடனத்தில் புருனோ- அல்ஜோனா ஜோடி.
Updated on
2 min read

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஃபிகர் ஸ்கேட்டிங் பிரிவில் ஜெர்மனியின் மாஸ்ஸாட் புருனோ-சாவ்சென்கோ அல்ஜோனா ஜோடி புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6-ஆவது நாளாக வியாழக்கிழமை 7 பதக்கப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டியில் ஜெர்மனியின் புருனோ-அல்ஜோனா ஜோடி மொத்தமாக 235.90 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.
இந்த ஜோடி ஃப்ரீ ஸ்கேட்டிங் பிரிவில் 159.09 புள்ளிகள் வென்று புதிய உலக சாதனை படைத்தது. இதன்மூலமாக, கடந்த டிசம்பரில் நடைபெற்ற கிராண்ட் ஃப்ரீ ஃபைனல் போட்டியில் 157.25 புள்ளிகளை எட்டி அவர்கள் படைத்த சாதனையை, அவர்களை தகர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சீனாவின் ஹான் காங்-சுய் வென்ஜிங் இணை 235.47 புள்ளிகளில் நூலிழையில் முதலிடத்தை நழுவிட்டு வெள்ளியை கைப்பற்றியது. கனடா ஜோடியான எரிக் ராட்ஃபோர்டு-மீகன் டுஹாமெல் 230.15 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது.

ஆல்பைன் ஸ்கையிங்
ஆடவருக்கான ஆல்பைன் ஸ்கையிங் போட்டியில் நார்வேயின் அக்செல் லன்ட் ஸ்வின்டால் 1 நிமிடம் 40.25 விநாடிகளில் வந்து முதலிடம் பிடித்தார். சகநாட்டவரான ஜெதில் ஜான்ஸ்ரட் 1 நிமிடம் 40.37 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஸ்விட்சர்லாந்தின் பீட் ஃபியூஸ் 1 நிமிடம் 40.43 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனர்.
மகளிர் பிரிவில் அமெரிக்காவின் மிக்கேலா ஷிஃப்ரின் தங்கமும், நார்வேயின் ராகன்ஹில்ட் மோவின்கெல் வெள்ளியும், இத்தாலியின் ஃபெடரிகா பிரிக்னன் வெண்கலமும் வென்றனர்.

பையத்லான்
பையத்லான் போட்டியில் மகளிருக்கான தனி நபர் 15 கி.மீ. பிரிவில் ஸ்வீடனின் ஹன்னா ஒபெர்க் 41.7 நிமிடங்களில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். ஸ்லோவேகியாவின் அனஸ்தாஸியா குஸ்மினா 41.31 நிமிடங்களில் வந்து வெள்ளியும், ஜெர்மனியின் லெளரா டால்மியர் 41.48 நிமிடங்களில் வந்து வெண்லமும் வென்றனர்.


ஆடவர் தனிநபர் 20 கி.மீ. பிரிவில் நார்வேயின் ஜோஹன்னஸ் திங்னஸ் போ முதலிடமும், ஸ்லோவேகியாவின் ஜோகோவ் ஃபாக் 2-ஆம் இடம், ஆஸ்திரியாவின் டொமினிக் லான்டர்டிங்கர் 3-ஆம் இடமும் பிடித்தனர்.

கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்
மகளிருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்கில் 10 கி.மீ. பிரிவில் நார்வேயின் ராகன்ஹில்டு ஹாகா 25 நிமிடத்தில் இலக்கை எட்டி தங்கமும், ஸ்வீடனின் சார்லட் கல்லா 25. 20 நிமிடத்தில் வந்து வெள்ளியும் வென்றனர். 
25.32 நிமிடத்தில் வந்த நார்வேயின் மரிட் ஜோர்கன், ஃபின்லாந்தின் கிறிஸ்டா பர்மகோஸ்கி ஆகியோர் வெண்கலத்தை பகிர்ந்துகொண்டனர்.

பலத்த காற்றால் 16 பேர் காயம்
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடங்களில் ஒன்றான காங்னியூங் ஒலிம்பிக் பூங்காவில் பலத்த காற்று வீசியதில் 16 பேர் காயமடைந்ததனர்.
'பலத்த காற்றால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை. 
எனினும், பல்வேறு பொருள்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டதில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் 13 பேரும், 3 பார்வையாளர்களும் காயமடைந்தனர். 
அத்துடன், 60 தாற்காலிக குடில்கள், 120 வேலிகள் பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன' என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

ஸ்னோபோர்டு
ஆடவருக்கான ஸ்னோபோர்டு கிராஸ் பிரிவில் பிரான்ஸின் பியரி வால்டியர் முதலிடமும், ஆஸ்திரேலியாவின் ஜேரைட் ஹியூஜஸ் 2-ஆம் இடமும், ஸ்பெயினின் ரெஜினோ ஹெர்னான்டஸ் 3-ஆம் 
இடமும் பிடித்தனர்.

ஸ்பீடு ஸ்கேட்டிங்
ஆடவருக்கான 10,000 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் கனடாவின் டெட் ஜேன் புளோமென் 12.39 நிமிடத்தில் வந்து தங்கம் வென்றார். 
நெதர்லாந்தின் ஜோரிட் பெர்க்ஸ்மா 12.41 நிமிடத்தில் வந்து வெள்ளியும், இத்தாலியின் நிகோலா டுமோலெரோ 12.54 நிமிடத்தில் வந்து வெண்கலமும் வென்றனர்.

லூக்
அணிகளுக்கான லூக் பிரிவில் ஜெர்மனி 2 நிமிடம் 24.5 விநாடிகளில் வந்து தங்கமும், கனடா 2 நிமிடம் 24.8 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஆஸ்திரியா 2 நிமிடம் 24.9 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com