சிக்ஸர் மழை பொழிந்த டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா உலக சாதனை!

இதுவரை நடைபெற்ற 6800 + சர்வதேச, உள்ளூர் டி20 ஆட்டங்களிலும் எந்த அணியும் இந்த இலக்கை எட்டியதில்லை... 
சிக்ஸர் மழை பொழிந்த டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா உலக சாதனை!

120 பந்துகளில் 244 ரன்கள்.

இதுதான் ஆஸ்திரேலிய அணிக்கு அளிக்கப்பட்ட இலக்கு. இதை மட்டும் நிகழ்த்திக்காட்டினால் உலக சாதனை செய்யலாம். இதற்கு முன்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 231 ரன்கள் எடுத்தபோது அந்தக் கடினமான இலக்கை 19.2 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஏழு பந்துகள் மீதமுள்ள நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றியடைந்த ஆஸ்திரேலியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற 6800 + சர்வதேச, உள்ளூர் டி20 ஆட்டங்களிலும் எந்த அணியும் இந்த இலக்கை எட்டியதில்லை.  

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய வார்னரும் ஷார்ட்டும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். 2-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் ஷார்ட். 5 மற்றும் 6-வது ஓவர்களில் ஆஸி. அணி 40 ரன்கள் எடுத்தது. முதல் 6 ஓவர்களில் ஆஸி. அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவித்து அருமையான தொடக்கத்தை உருவாக்கியது. இதன் பின்னர் 24 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் வார்னர் 59 ரன்களில் வீழ்ந்தார். இதன்பின்னர் வந்த லின்னும் மேக்ஸ்வெல்லும் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து முறையே 18 மற்றும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

இரண்டு ஃபுல்டாஸ்களை வீசியதால் வீலரைத் தொடர்ந்து பந்துவீச நடுவர்கள் தடை விதித்தார்கள். அவர் 3.1 ஓவர்களில் 64 ரன்களை வாரி வழங்கி நியூஸி. அணியின் தோல்விக்கு முக்கியப் பங்கு வகித்தார். 

44 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்த ஷார்ட், போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வந்தவுடன் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸும் அடித்து ஆட்டத்தை ஆஸி. அணி பக்கம் திருப்பினார் ஃபிஞ்ச். 

இறுதியில் 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றியடைந்த ஆஸ்திரேலிய அணி புதிய உலக சாதனையைப் படைத்தது. அலெக்ஸ் கேரே 1 ரன், ஆரோன் ஃபிஞ்ச் 36 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. 

நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 49 பந்துகளில் 9 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் சதமெடுத்து அசத்தினார். இது அவருடைய 2-வது டி20 சதமாகும். இதன்மூலம் அவர் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 

மெக்கல்லம் 71 ஆட்டங்களில் 2140 ரன்களுடன் முதலிடத்திலும் இந்தியாவின் விராட் கோலி 55 ஆட்டங்களில் 1956 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் இருந்தார்கள். இந்நிலையில் இன்று சதமெடுத்த கப்தில், மெக்கல்லமின் ரன்களைத் தாண்டி 2185 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதையடுத்து மெக்கல்லம் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

அதிரடியாக ஆடிய மன்ரோ 33 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து நியூஸி அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். இதனால் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. நியூஸி. வீரர்கள் இன்று 18 சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். 

ஆஸ்திரேலிய அணியும் சிக்ஸர் மழை பொழிந்ததால் இன்று மட்டும் இந்த ஆட்டத்தில் 32 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இரு அணிகளும் ஒட்டுமொத்தமாக 488 ரன்கள் எடுத்தன.

76 ரன்கள் குவித்த ஷார்ட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

அதிக ரன்களைக் குவித்து இலக்கை எட்டிய அணிகள்

டெஸ்ட்: 418/7 - ஆஸ்திரேலியாவை மேற்கிந்தியத் தீவுகள் அணி தோற்கடித்தது, 2003
ஒருநாள்: 438/9 - ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது, 2006
டி20: 245/5 - நியூஸிலாந்தை ஆஸ்திரேலியா தோற்கடித்தது, 2018. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com