சாஹல் பந்துவீச்சைப் பிரித்து மேய்ந்த கிளாசென்! பெருமைப்பட முடியாத புள்ளிவிவரங்கள்

சாஹல் பந்துவீச்சைப் பிரித்து மேய்ந்த கிளாசென்! பெருமைப்பட முடியாத புள்ளிவிவரங்கள்

4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு முதல் காரணமாக விளங்கியுள்ளார்... 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசத் தீர்மானித்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் பும்ராவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகுருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு இது முதல் சர்வதேச டி20 போட்டியாகும்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடத் தொடங்கியது. 18.4 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 64 ரன்களுடன் டுமினியும், 16 ரன்களுடன் பெஹர்தீனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 69 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் கிளாசென் உனத்கட் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடைய அதிரடி ஆட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

சாஹல் vs கிளாசென்! 

இந்திய அணிக்கு மிகவும் பலமாக விளங்கிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல், இந்த ஆட்டத்தில் மிக மோசமாகப் பந்துவீசினார். 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு முதல் காரணமாக விளங்கியுள்ளார். 

* நேற்றைய ஆட்டத்தில் சாஹலின் பந்துவீச்சுக்கு எதிராக 7 சிக்ஸர்களை அடித்தார்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள். இதில் கிளாசென் மட்டுமே 5 சிக்ஸர்களை அடித்தார். எந்தவொரு இந்திய பந்துவீச்சாளரும் இதற்கு முன்பு டி20 போட்டியில் 7 சிக்ஸர்களைக் கொடுத்ததில்லை. இதற்கு முன்பு 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜடேஜா பந்துவீச்சில் ஆறு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதை சாஹல் முறியடித்துள்ளார்.

டி20 ஆட்டத்தில் அதிக சிக்ஸர்களைக் கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் 

7 சாஹல் vs தென் ஆப்பிரிக்கா, 2018
6 ஜடேஜா vs ஆஸ்திரேலியா, 2009
5 பின்னி vs மே.இ., 2016
5 ஜடேஜா vs மே.இ., 2017
5 சாஹல் vs இலங்கை, 2017

* இதற்கு முன்பு 2007-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஜொகிந்தர் சர்மா 57 ரன்கள் கொடுத்ததே ஓர் இந்திய பந்துவீச்சாளர் டி20 ஆட்டத்தில் அதிக ரன்கள் கொடுத்ததாக இருந்தது. சாஹல் அதை நேற்று முறியடித்துள்ளார். 

டி20 ஆட்டத்தில் சிறந்த பந்துவீச்சு - இந்தியா

சாஹல் - 6/25 vs இங்கிலாந்து, 2017

டி20 ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சு - இந்தியா

சாஹல் - 64 ரன்கள் vs தென் ஆப்பிரிக்கா, 2018

* கிளாசென்னுக்கு சாஹல் 12 பந்துகளை வீசியதில் அவர் 5 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களை விளாசியுள்ளார். ஒரு இந்திய பந்துவீச்சாளருக்கு எதிராக எந்தவொரு பேட்ஸ்மேனும் டி20 போட்டியில் இத்தனை ரன்களை எடுத்ததில்லை. கடந்த வருடம் குல்தீப் யாதவுக்கு எதிராக இலங்கையின் பெரேரா 14 பந்துகளில் 38 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. அதையும் சாஹல் முறியடித்துள்ளார்.

கிளாசென் vs சாஹல் (எல்லா வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும்)

ரன்கள் - 110
பந்துகள் - 74
விக்கெட் - 1
ஸ்டிரைக் ரேட்- 148.65
பவுண்டரிகள் - 6
சிக்ஸர் - 8

* இந்தத் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே தோற்றுள்ளது. இரண்டிலும் சாஹல் மிக மோசமாக பந்துவீசியுள்ளார். வாண்டரர்ஸ் ஒருநாள் ஆட்டத்தில் 5.3 ஓவர்களில் 68 ரன்களை வாரி வழங்கிய சாஹல் நேற்றைய டி20 ஆட்டத்தில் 4 ஓவர்களில் 64 ரன்களைக் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாகியுள்ளார். இந்த இரண்டு ஆட்டத்தில் மட்டும் 13 சிக்ஸர்கள் சாஹல் பந்துவீச்சில் அடிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி வெற்றி பெற்றபோது (6 ஆட்டங்கள்) சாஹலின் பந்துவீச்சு

விக்கெட்டுகள் - 16, எகானமி - 4.59, சிக்ஸர்கள் - 6

இந்திய அணி தோற்றபோது (2 ஆட்டங்கள்) சாஹலின் பந்துவீச்சு

விக்கெட் -1, எகானமி - 13.89, சிக்ஸர்கள் - 13

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com