ஆடுகளத்தில் மணீஷ் பாண்டேவைக் கடிந்துகொண்ட தோனி! ரசிகர்கள் ஆச்சர்யம்! (விடியோ)

தோனியின் கடும் கோபத்தைத் தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தார்கள்...
ஆடுகளத்தில் மணீஷ் பாண்டேவைக் கடிந்துகொண்ட தோனி! ரசிகர்கள் ஆச்சர்யம்! (விடியோ)

கேப்டன் கூல் என்று பெயர் வாங்கிய தோனி கோபமடைந்து, சக வீரர்களைக் கடிந்துகொண்ட காட்சியைப் பார்த்ததுண்டா? நேற்று அத்தகைய காட்சி ஒன்றைக் காண நேர்ந்த ரசிகர்கள், தோனியா இது என ஆச்சர்யப்பட்டார்கள்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசத் தீர்மானித்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் பும்ராவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகுருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு இது முதல் சர்வதேச டி20 போட்டியாகும்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடத் தொடங்கியது. 18.4 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 64 ரன்களுடன் டுமினியும், 16 ரன்களுடன் பெஹர்தீனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 69 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் கிளாசென் உனத்கட் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடைய அதிரடி ஆட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

இந்திய அணி பேட்டிங் செய்யும்போது 20-வது ஓவரின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. திடீரென தோனி, மணீஷ் பாண்டேவைப் பார்த்து கோபமாகப் பேசினார். அங்கே பார்த்து சொல்லாதே, நான் விளையாடும்போது என்னைப் பார் என்று பாண்டேவைக் கடிந்துகொண்டார் தோனி. 

அந்த ஆக்ரோஷத்தை அடுத்ததாகப் பந்துவீச்சாளரிடமும் காண்பித்தார். பேட்டர்சன் வீசிய அடுத்தப் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் சிக்ஸர் அடித்தார் தோனி.

தோனியின் கடும் கோபத்தைத் தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தார்கள். மணீஷ் பாண்டே போன்று இந்திய அணிக்குப் புதிதாக நுழைந்துள்ள வீரரிடம் தோனி இவ்வாறு நடந்துகொண்டிருக்க வேண்டாம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com