யுவ்ராஜுக்குப் பதிலாக அஸ்வினை கேப்டனாகத் தேர்வு செய்தது ஏன்?: சேவாக் விளக்கம்

யுவ்ராஜ் என்னுடைய சிறந்த நண்பர். ஆனால் கிரிக்கெட் விஷயங்களில் நட்பைத் தள்ளி வைத்து...
யுவ்ராஜுக்குப் பதிலாக அஸ்வினை கேப்டனாகத் தேர்வு செய்தது ஏன்?: சேவாக் விளக்கம்

பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டனாக அஸ்வினைத் தேர்வு செய்தது ஏன் என அந்த அணியின் இயக்குநர் சேவாக் விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணிக்காக இதுவரை விளையாடிய அஸ்வின் இந்த வருடம் பஞ்சாப் அணிக்குத் தேர்வாகியுள்ளார். அவரை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

சமீபத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அஸ்வினை கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப் அணி. 

கிறிஸ் கெயில், ஃபிஞ்ச், யுவ்ராஜ் சிங், டேவிட் மில்லர், ஆண்ட்ரூ டை, மயங்க் அகர்வால், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்‌ஷர் படேல் போன்ற வீரர்கள் பஞ்சாப் அணியில் உள்ளார்கள்.

பஞ்சாப் அணியின் இயக்குநரும் ஆலோசகருமான சேவாக் கூறியதாவது:

ஏலத்தில் நல்ல வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். ஆனால் எங்கள் அணியின் கேப்டன் யார் என்கிற கேள்வி எல்லோருடமும் இருந்தது. 90 சதவிகித ரசிகர்கள் யுவ்ராஜ் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் என்னுடைய தேர்வு சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என எண்ணினேன். பந்துவீசும் வீரரே கேப்டனாக இருக்க வேண்டும் என்பது என் தேர்வு. கபில் தேவ், வாசிம் அக்ரம், வக்கார் யூனூஸ் போன்றோருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். 

ஏலத்தில் கேப்டன் பதவிக்கு அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரை மனத்தில் நினைத்திருந்தோம். தினேஷ் கார்த்திக்கைத் தேர்வு செய்ய முடியவில்லை. எனவே எங்கள் தேர்வாக இருந்த அஸ்வின் ஏலத்தில் எடுத்தோம். 

அணி நிர்வாகத்தில் யுவ்ராஜை கேப்டனாக்குவது குறித்தும் பேச்சு இருந்தது. யுவ்ராஜ் என்னுடைய சிறந்த நண்பர். ஆனால் கிரிக்கெட் விஷயங்களில் நட்பைத் தள்ளி வைத்துவிட வேண்டும். அஸ்வின் சிறந்த கேப்டனாக இருப்பார் என நாங்கள் எண்ணினோம். 

அஸ்வின் புத்திசாலி கிரிக்கெட் வீரர். பந்துவீச்சாளரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். டி20 கிரிக்கெட்டை நன்குப் புரிந்து வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com