

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி டிராவில் முடிந்தது. இத்தொடரின் முதல் 3 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், இந்த ஆட்டம் வெற்றி-தோல்வி இல்லாமல் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தை மோசம் என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.
மெல்போர்ன் நகரில் பாக்ஸிங் டே அன்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 119 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 103 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்மித் 76 ரன்களுக்கு வீழ்ந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தொடங்கிய இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர் அலாஸ்டர் குக் அபாரமாக ஆடினார். இரட்டைச் சதம் கடந்த அவர் 27 பவுண்டரிகள் உள்பட 244 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரால் இங்கிலாந்து 144.1 ஓவர்களில் 491 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஹேஸில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா 124.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் 102, மிட்செல் மார்ஷ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இத்துடன் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக அலாஸ்டர் குக் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆடுகளம் குறித்த அதிருப்தியை இரு அணி கேப்டன்களும் தெரிவித்தார்கள். பந்துவீச்சுக்கு ஏற்றதாக இல்லாமல் பேட்டிங்க்குச் சாதகமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்கள்.
4-வது டெஸ்ட் போட்டிக்கான ஐசிசி நடுவர் ரஞ்சன் மடுகலே மெல்போர்ன் ஆடுகளம் குறித்த தனது அறிக்கையை ஐசிசியிடம் சமர்ப்பித்தார். அதில், 5 நாள்களில் 24 விக்கெட்டுகள் மட்டும் வீழ்ந்த மெல்போர்ன் ஆடுகளம் மோசம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஆடுகளம் ஒன்று மோசம் என ஐசிசி நடுவரால் மதிப்பிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இதையடுத்து இந்தப் புகாருக்கு 14 நாள்களில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பதில் அளிக்கவேண்டிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.