மீண்டும் படுதோல்வியடைந்த மே.இ. அணி: மன்ரோவின் உலக சாதனையால் தொடரை வென்ற நியூஸிலாந்து!

உலக சாதனை நிகழ்த்தியுள்ள காலின் மன்ரோ ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
மீண்டும் படுதோல்வியடைந்த மே.இ. அணி: மன்ரோவின் உலக சாதனையால் தொடரை வென்ற நியூஸிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நியூஸி. தொடக்க வீரர் காலின் மன்ரோ அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதமடித்தார். 

நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் கப்திலும் மன்ரோவும் மே.இ. அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தார்கள். முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தார்கள். பவர்பிளே முடிந்தபிறகும் இருவருடைய அதிரடி ஆட்டம் நிற்கவில்லை. தொடர்ந்து சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்து ரன் ரேட்டை உயர்த்திக்கொண்டே இருந்தார்கள். 10-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. கடைசியில் 12-வது ஓவரில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கப்தில்.

பத்ரீ வீசிய 13-வது ஓவரில் மன்ரோவும் ப்ரூஸும் 20 ரன்கள் சேர்த்தார்கள். இதனால் 13-வது ஓவரிலேயே 150 ரன்களை எட்டியது நியூஸிலாந்து. ஒருவழியாக 23 ரன்களில் ப்ரூஸின் விக்கெட்டை வீழ்த்தி ஆறுதல் தேடிக்கொண்டது மே.இ. அணி. இதன்பிறகு 47 பந்துகளில் 10 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார் மன்ரோ. இது அவருடைய 3-வது டி20 சதமாகும். 

இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வீரரும் 3 சதங்களை அடித்ததில்லை. இந்த நிலையில் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் மன்ரோ. இந்த மூன்று சதங்களையும் கடந்த ஒரு வருடத்தில் அடித்துள்ளார் என்பது மற்றொரு சிறப்பம்சம்.

16-வது ஓவரிலேயே 200 ரன்களை எட்டி அசத்தியது நியூஸிலாந்து. பிறகு கிட்சன் 9 ரன்களிலும் கேன் வில்லியம்சன் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி ஓவரின் முதல் பந்தில் 104 ரன்களுடன் ஆட்டமிழந்தார் காலின் மன்ரோ. 53 பந்துகளில் இந்த ரன்களை எட்டிய மன்ரோ, 10 சிக்ஸும் 3 பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்துள்ளது. பிலிப்ஸ் 7,  சான்ட்னர் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 60 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து.

இன்று களமிறங்கிய அனைத்து நியூஸிலாந்து வீரர்களும் குறைந்தது ஒரு சிக்ஸராவது அடித்தார்கள். அதிகபட்சமாக மன்ரோ 10 சிக்ஸும் கப்தில் 2 சிக்ஸும் அடித்தார்கள். ஒட்டுமொத்த நியூஸிலாந்து வீரர்கள் இன்று 17 சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு அளவில்லாத சந்தோஷத்தை அளித்தார்கள். 

கெய்ல் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆட்டத்தில் திருப்பம் உண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே வால்டன், கெய்ல் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார்கள். இருவருமே ரன் எதுவும் எடுக்கவில்லை. இதன்பின்பு வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்தன. பிளெட்சர் மட்டும் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். 16.3 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இதனால் 3-வது டி20 போட்டியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து. மேலும் டி20 தொடரை 2-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

உலக சாதனை நிகழ்த்தியுள்ள காலின் மன்ரோ ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com