151 ரன்களுக்குச் சுருண்டது இந்தியா: தொடரை வென்றது தெ.ஆ.

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது...
151 ரன்களுக்குச் சுருண்டது இந்தியா: தொடரை வென்றது தெ.ஆ.

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரை அந்த அணி வென்றுள்ளது. 

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்துடன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 23 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. பார்திவ் (5 ரன்கள்), புஜாரா (11 ரன்கள்) களத்தில் இருந்தார்கள். 

இந்திய அணி புஜாரா மீது மிகுந்த நம்பிக்கை வைத்த நிலையில் முதல் இன்னிங்ஸைப் போல இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளார் புஜாரா.

இதன் மூலம் புஜாரா சில விநோத சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுவரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆனதில்லை. இதன் அடிப்படையில் இருமுறை ரன் அவுட் ஆன முதல் இந்திய பேட்ஸ்மேன் என்கிற விநோத சாதனைக்கு உள்ளாகியுள்ளார் புஜாரா. 

ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆன பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை - 23. கடந்த 17 வருடங்களில் இப்போதுதான் மீண்டும் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2000-ம் ஆண்டு டிசம்பரில் ஸ்டீபன் பிளமிங் இதுபோல ஒரே டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆனார். 

புஜாராவின் ரன் அவுட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. பார்தீவ் படேல் மார்கலின் அற்புதமான கேட்ச்சால் 19 ரன்களில் வெளியேறினார். பாண்டியா 6 ரன்களில் நடையைக் கட்டினார். முதல் இன்னிங்ஸில் நன்கு விளையாடிய அஸ்வின் 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். இதன்பிறகு ரோஹித் சர்மாவும் ஷமியும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார்கள்.

1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் வேகமாக ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, 47 ரன்களில் ரபடா பந்துவீச்சில் வீழ்ந்தார். அடுத்ததாக ஷமி 28 ரன்களிலும் பூம்ரா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் வேதனையான 2-வது இன்னிங்ஸ் நிறைவு பெற்றது.

இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 50.2 ஓவர்களில் 151 ரன்களுக்குச் சுருண்டது. தெ.ஆ. வேகப்பந்து வீ ச்சாளர் எல்.கிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

2-வது டெஸ்டை 135 ரன்களில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com