ஐபிஎல் 2018 போட்டித் தொடர் தேதிகள் அறிவிப்பு: போட்டி நேரங்களிலும் மாற்றம்!

2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெறும் தேதிகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2018 போட்டித் தொடர் தேதிகள் அறிவிப்பு: போட்டி நேரங்களிலும் மாற்றம்!

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் போட்டித் தொடர் நடைபெறும் தேதிகள், நேரம், துவக்க மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான சௌரவ் கங்குலி கலந்துகொள்ளவில்லை. 

இம்முறை ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது. எனவே அவர்களின் கோரிக்கையின் படியும் நிர்வாக உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நேரங்களில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளோம்.

அதனடிப்படையில் மாலை 4 மணிக்கு துவங்கும் போட்டிகள் 5:30 மணிக்கும், இரவு 8 மணிக்கு துவங்கும் போட்டிகள் 7 மணிக்கும் துவங்கும். இதனை ஒளிபரப்ப தங்களிடம் போதிய சேனல்கள் இருப்பதால் அவர்கள் இதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளனர்.

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடைபெறும். துவக்க விழா ஏப்ரல் 6-ந் தேதி மும்பையில் நடைபெறும். இதையடுத்து 7-ந் தேதி முதல் போட்டியும், மே 27 இறுதிப்போட்டியும் கூட மும்பையிலேயே நடைபெறும்.

இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சொந்த மைதானங்களாக மொகாலி மற்றும் இந்தூர் இடம்பெறும். அதுபோல ஜனவரி 24-ந் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மைதானம் அமையும். 

அவ்வாறு அந்த தீர்ப்பில் ராஜஸ்தான் மைதானத்துக்கு தடை விதிக்கப்பட்டால் புணே மைதானம் அவர்களின் சொந்த மைதானமாக தேர்ந்தெடுக்கப்படும். 

ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 578 பேர் இடம்பெற்றுள்ளனர். இவற்றில் 360 பேர் இந்திய வீரர்கள் ஆவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com