பந்துவீச்சில் மிரட்டும் தெ.ஆ: இந்திய அணி மீண்டும் திணறல்!

பந்துவீச்சில் மிரட்டும் தெ.ஆ: இந்திய அணி மீண்டும் திணறல்!

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா - இந்தியா ஆகிய இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் அஸ்வினுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். பார்தீவ் படேல் இந்த டெஸ்டிலும் இடம்பெற்றுள்ளார். பாண்டியா உள்ளிட்ட 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹராஜுக்குப் பதிலாக அன்டிலே பெலுக்வாயோ இடம்பெற்றுள்ளார்.

இன்றும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. இதனால் இந்த டெஸ்டிலும் இந்திய தொடக்க வீரர்கள் ரன் எடுக்கச் சிரமப்பட்டார்கள். கேஎல் ராகுல், 7 பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன்னும் எடுக்கமுடியாமல் பிலாண்டரின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அடுத்தச் சில ஓவர்களில் 8 ரன்களுடன் முரளி விஜய்யும் நடையைக் கட்டினார். ரபடா அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். 13 ரன்களுக்குள் தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து இந்த டெஸ்டிலும் ஏமாற்றமளித்துள்ளார்கள்.

முதல் விக்கெட் வீழ்ந்தபிறகு களமிறங்கிய புஜாரா மிகவும் கவனமாக விளையாடினார். ரன் எடுப்பதை விடவும் விக்கெட் பறிபோகாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார். பிலாண்டர் பந்துவீச்சை அதிகம் எதிர்கொண்ட புஜாரா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால் அவரால் முதல் ரன்னை எடுக்கவே நீண்ட நேரம் பிடித்தது. 24-வது பந்தை எதிர்கொண்டபோது ஒரு ரன் எடுத்தார். ஆனால் அதனை லெக் பை என நடுவர் முடிவு செய்தார். கடைசியாக 54-வது பந்தில்தான் அவரால் தன்னுடைய முதல் ரன்னை எடுக்கமுடிந்தது. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் செய்து புஜாராவை உற்சாகப்படுத்தினார்கள்.

ரபடா பந்துவீச்சில் கோலி கொடுத்த கேட்ச்சை பிலாண்டர் தவறவிட்டதால் கோலியை வெளியேற்றும் நல்ல வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா. பிறகு கோலி, தெ.ஆ. வேகப்பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டு விளையாடினார்.

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 58 பந்துகளில் 24 ரன்களுடனும் புஜாரா 66 பந்துகளில் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com