நம்புங்கள், இந்தப் பிரபல வீரர்களுக்கு ஐபிஎல்-லில் இடமில்லை!

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை (154) வீழ்த்திய மலிங்காவுக்கே இந்த வருட ஐபிஎல்-லில் இடமில்லை என்பது...
நம்புங்கள், இந்தப் பிரபல வீரர்களுக்கு ஐபிஎல்-லில் இடமில்லை!

2018 ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாத வீரர்கள் இதுவரை விளையாடிய ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 613 ஐபிஎல் ஆட்டங்கள்!

அதிலும் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை (154) வீழ்த்திய மலிங்காவுக்கே இந்த வருட ஐபிஎல்-லில் இடமில்லை என்பது நம்பமுடியாததாக உள்ளது. 

11-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 12.50 கோடிக்கும் இந்திய வீரர் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.11.5 கோடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்து ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் பல பிரபல வீரர்களையும் எந்த அணியும் சீந்தாதது அதைவிடவும் பெரிய ஆச்சர்யம்! இந்தப் பட்டியலில் மலிங்கா, கப்தில், சிம்மன்ஸ், ஆம்லா, மார்கன், மெக்லெனகன், மேத்யூஸ், ஜேம்ஸ் ஃபாக்னர் போன்ற முக்கியமான வீரர்கள் உள்ளார்கள்! 

கடந்த வருட ஐபிஎல்-லில் பஞ்சாப் அணிக்காக இரு சதங்கள் எடுத்தும் இந்தமுறை ஹாசிம் ஆம்லாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. கடந்த வருடம் 10 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய ஆம்லா, 420 ரன்கள் எடுத்தார். அதில் இரு சதங்கள் இரு அரை சதங்களும் உண்டு. சென்னை அணி ஆம்லாவைத் தேர்வு செய்திருக்கவேண்டும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.  

மலிங்கா இதுவரை 110 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த வருடம் 12 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2009 முதல் ஐபிஎல்-லில் பங்கேற்கும் மலிங்கா கடந்த வருடம்தான் குறைந்த விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல ரன்களை வாரிவழங்கியதும் கடந்த வருடம்தான். எகானமி - 8.52. இந்தக் காரணங்களால் இந்தமுறை அவரை எந்த அணியும் தேர்வு செய்ய விருப்பப்படவில்லை. 

சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா 2016 முதல் இன்றுவரை எந்த அணிக்கும் தேர்வாகவில்லை. 2010-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 2 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

டி20 போட்டியின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்தின் இஷ் சோதி தேர்வாகவில்லை என்பது இன்னமும் நம்பமுடியாத செய்தியாகவே உள்ளது. அதேபோல டி20 அணிகளில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தமுறையும் ஐபிஎல்-லில் இடமில்லை. 

கடைசிவரை விலை போகாமல் இருந்த கிறிஸ் கெய்லைக் கடைசிக்கட்டத்தில் பஞ்சாப் அணி தேர்வு செய்தது. அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு அவர் தேர்வானார். 

மார்டின் கப்தில் இதுவரை ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் தேர்வாகாமல் உள்ளார்.

கடந்த வருடம் ரூ. 12 கோடிக்குத் தேர்வான டைமல் மில்ஸ் (பெங்களூர்) இந்த வருடம் தேர்வாகவில்லை. 

இஷாந்த் சர்மா

2017-ல் அடிப்படை விலை - ரூ. 2 கோடி: தேர்வாகவில்லை

2018-ல் அடிப்படை விலை - ரூ. 75 லட்சம்: தேர்வாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com