திசைமாறிய ஐபிஎல் வாழ்க்கை: கோடிகளில் புரளும் சஞ்சு சாம்சனும் எந்த அணியும் சீந்தாத பாபா அபரஜித்தும்!

அடிப்படை விலை ரூ. 20 லட்சம் என்றபோதிலும் எந்த ஓர் அணியும் பாபாவைத் திரும்பிப் பார்க்கவில்லை... 
திசைமாறிய ஐபிஎல் வாழ்க்கை: கோடிகளில் புரளும் சஞ்சு சாம்சனும் எந்த அணியும் சீந்தாத பாபா அபரஜித்தும்!

2012 யு-19 உலகக் கோப்பைப் போட்டியின் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது. இதன் அடுத்தக்கட்டமாக 2013-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் விளையாட வாய்ப்பு. இதைவிடவும் பிரகாசமான தருணங்கள் ஓர் இளைஞருக்கு வாய்க்குமா? எத்தனை எத்தனை கனவுகள் கண்டிப்பார் தமிழகத்தைச் சேர்ந்த பாபா அபரஜித்?!

அதே 2012-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டிக்குத் தேர்வானார் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன். அதில் சரியாக விளையாடாததால் யு-19 உலகக்கோப்பை போட்டிக்கு அவர் தேர்வாகவில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறாவிட்டாலும் 2013 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தேர்வானார். 

அப்போது பாபா அபரஜித், சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் ஒரே வயது. சஞ்சு சாம்சனை விடவும் பாபா அபரஜித் உலகக் கோப்பையில் தன்னை நிரூபித்து தன்னை ஒரு சாதனையாளராக நிரூபித்திருந்தார். இருவரும் ஒரே சமயத்தில் ஐபிஎல் போட்டிக்குத் தேர்வானார்கள்.

2018-ல் இருவரும் ஐபிஎல்-லில் எந்த நிலையை அடைந்துள்ளார்கள் என்று பார்த்தால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. 

சஞ்சு சாம்சன் இதுவரை 66 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிக்குத் தேர்வான முதல் வருடம் 11 போட்டிகளில் பங்குபெற்றார். அடுத்த வருடம் 13 போட்டிகள். அதற்கடுத்த 3 வருடங்களிலும் தலா 13 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 66 ஐபிஎல் போட்டிகளில் 1146 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் 7 அரை சதங்களும் உண்டு. 112 பவுண்டரிகள், 57 சிக்ஸர்கள். விக்கெட் கீப்பராகவும் பணியாற்றியதால் 34 கேட்சுகளும் 3 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார். அமோகமான ஐபிஎல் வாழ்க்கை இந்த வருடமும் தொடர்கிறது. அவரை ரூ. 8 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

விக்கெட் கீப்பிங் கூடுதல் தகுதி என்பதால் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்வதில் எப்போதுமே ஐபிஎல் அணிகளுக்கிடையே பலத்த போட்டி நடக்கும். அதனால் அவருக்கு ஏலத்தில் எப்போதும் நல்ல தொகையே கிடைக்கும். 2013-ல் ரூ. 10 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணிக்குத் தேர்வான சஞ்சு சாம்சன், 2016-ல் ரூ. 4.20 கோடிக்கு தில்லி அணிக்குத் தேர்வாகி தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணிக்கே ரூ. 8 கோடி சம்பளத்துக்குத் திரும்பியுள்ளார். இதுதவிர இந்திய அணிக்காக ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடியுள்ளார். கிரிக்கெட் உலகில் சஞ்சு சாம்சன் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது என்கிற நிலையை அடைந்துவிட்டார்.

சரி, பாபா அபரஜித் என்ன செய்துகொண்டிருக்கிறார்? ஐபிஎல்-லில் அவர் அடைந்த உயரம் என்ன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

2013-ம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வானார் பாபா அபராஜித். யு-19 உலகக்கோப்பையில் திறமையை வெளிப்படுத்தி அதிகக் கவனம் பெற்றதால் ஐபிஎல்-லிலும் தன்னை நிரூபிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அவர்மீது இருந்தது. ஆனால் நட்சத்திரங்கள் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரால் ஓர் ஆட்டத்திலும் இடம்பெறமுடியாமல் போனது. சென்னை சூப்பர் கிங்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டபிறகு புணே அணிக்கு மாறினார். அப்போதாவது நிலைமை மாறும் என்றால் அதுவும் இல்லை. கடைசிவரை புணேவிலும் அவருக்கு ஓர் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இப்படிக் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு ஐபிஎல் ஆட்டத்திலும் விளையாடாமலேயே காலத்தைக் கழித்துவிட்டார்.

இந்த வருடம்?

இதற்கு முன்பு அவர் ஏதாவதொரு ஐபிஎல் அணிகளிலாவது இடம்பெற்றார். இந்தமுறை அந்தப் பாக்கியமும் கிடைக்கவில்லை. அடிப்படை விலை ரூ. 20 லட்சம் என்றபோதிலும் எந்த ஓர் அணியும் பாபாவைத் திரும்பிப் பார்க்கவில்லை. எந்த ஐபிஎல் அணியிலும் தேர்வாகாமல் மிகப்பெரிய சறுக்கலைச் சந்தித்துள்ளார் பாபா அபரஜித். 

எந்த வாய்ப்புகளையும் இதுவரை அமையவில்லை என்றுதான் சொல்லமுடியுமே தவிர இனிமேலும் அதேநிலை தொடரும் என்று சொல்லிவிடமுடியாது. அப்படி ஒரு திறமையை ஒதுக்கிவிடவும் முடியாது. ஐபிஎல் கைவிட்டாலும் தமிழக அணியில் பாபா அபரஜித்துக்கு எப்போது நல்ல மதிப்பு உண்டு. 23 வயதுக்குள் பிராந்திய அளவில் அவர் செய்த சாதனைகளைப் பலரால் கனவுதான் காணமுடியும். ஐபிஎல்-லும் அவரால் எட்டமுடியாத உயரம் அல்ல. விரைவில் காட்சிகள் மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com