நம்பமுடியாத ரன் அவுட்கள், ஸ்டம்பிங்குகள்: மேட்ச் ஃபிக்ஸிங்கா என பதறிய ஐசிசி! (விடியோ)

இக்காட்சிகளை நம்பமுடியவில்லை என்று முன்னாள் வீரர் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்...
நம்பமுடியாத ரன் அவுட்கள், ஸ்டம்பிங்குகள்: மேட்ச் ஃபிக்ஸிங்கா என பதறிய ஐசிசி! (விடியோ)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் டி20 போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஆச்சயத்துடன் கருத்து தெரிவித்திருப்பதும் போட்டியின் தன்மை மேட்ச் ஃபிக்ஸிங்குக்கு உகந்ததா என்று ஐசிசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் நடைபெற்ற அஜ்மன் ஆல் ஸ்டார்ஸ் லீக் என்கிற தனியார் டி20 போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. இதில் துபாய் ஸ்டார் மற்றும் ஜார்ஜா வாரியர்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் புதிரான முறையில் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனதாகப் புகார் எழுந்தது.

சர்ச்சைக்குள் ஆளாகியிருக்கும் போட்டியில் முதலில் விளையாடிய துபாய் ஸ்டார் அணி 135 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வாரியர்ஸ் அணி 46 ரன்களில் சுருண்டது. இதில் வாரியர்ஸ் அணியினர் ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங் ஆன முறை பார்வையாளர்களுக்குப் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

மிகவும் அலட்சியமாக விளையாடி அவுட் ஆனதால் இந்தப் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றிருக்குமோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்தப் போட்டியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து சர்வதேச வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். பிரபல வீரர் கெவின் பீட்டர்சன், பல ஸ்மைலிகளைத் தன் பதிலாகத் தெரிவித்துள்ளார். இக்காட்சிகளை நம்பமுடியவில்லை என்று முன்னாள் வீரர் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற புகார்களையடுத்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்கம், இந்த டி20 போட்டி மேலும் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. 

இதையடுத்து ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு இந்தப் போட்டி குறித்து விசாரணை மேற்கொள்கிறது. கிரிக்கெட்டின் நேர்மையைக் காப்பாற்றும் பணியில் ஊழல் தடுப்புப் பிரிவு செயல்படுகிறது. எனவே அதன் பொருட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களிடமும் போட்டி அமைப்பாளர்களிடமும் விசாரணை செய்து வருகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com