

அஸ்ஸாம் நெல் வயல்களில் இருந்து உருவான உலக தடகள சாம்பியன் என்ற சிறப்பை விவசாயி மகளான 400 மீ ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் பெற்றுள்ளார்.
தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள் என்றால் மில்கா சிங், பிடி உஷா, ஷைனி வில்சன், அண்ணாவி, ஆகியோரது பெயர்கள் உடனே நினைவுக்கு வரும். இதற்கிடையே தற்போது புதிய வீரர்கள், வீராங்கனைகள் உருவாகி நாட்டுக்கு பதக்கங்களையும், புகழையும் தேடித் தந்து வருகின்றனர்.
குறிப்பாக ஈட்டி எறிதலில் இளம் வீரரான நீரஜ் சோப்ரா உலக ஜூனியர் தடகள போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். அதே வகையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஹிமா தாஸ் உலக ஜூனியர் தடகள போட்டியில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
குவாஹாட்டியில் இருந்து 140 கி.மீ தூரத்தில் உள்ள நாகெளன் மாவட்டம் திங் கிராம நெல் வயல்களில் சிறுவர்களுடன் கால்பந்தை விளையாடி வந்தார் ஹிமா. தடகளத்தில் கவனம் செலுத்தும்படி உள்ளூர் பயிற்சியாளர் கூறியதால், ஹிமா ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தினார். அதன்பிறகு அவரது வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகத்தொடங்கியது.
குறிப்பாக 18 மாதங்களுக்கு முன்பு சிவசாகரில் நடந்த மாவட்டங்கள் இடையிலான போட்டியில் 100, 200 மீட்டரில் புயலைப் போல் ஓடி ஹிமா தங்கம் வென்றதை கவனித்த அரசு தடகள பயிற்சியாளர் நிப்பான் குவாஹாட்டிக்கு இடம் பெயரும்படி ஹிமாவுக்கு அறிவுறுத்தினார். இதுதொடர்பாக பெற்றோர் ராஞ்சித் தாஸ்-ஜோமாலி தம்பதியிடமும் வலியுறுத்தினார். 6 குழந்தைகளில் சிறியவரான ஹிமாவை பிரிய அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையிலும் நிப்பான் வார்த்தையை தட்ட முடியவில்லை. அதன்பின் சாருசாஜாய் விளையாட்டு விடுதியில் ஹிமா தங்க ஏற்பாடு செய்தார் நிப்பான். பின்னர் சிறப்பு பயிற்சி அகாதெமியில் சேர்க்கப்பட்டு, தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
18 மாதங்களிலேயே பின்லாந்தின் டாம்பரே நகரில் நடந்த உலக ஜூனியர் தடகளப் போட்டியில் 400 மீ பந்தயத்தை 51.46 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார் ஹிமா. இதன் மூலம் உலக தடகளப் போட்டியில் ஒட்டப்பந்தயத்தில் முதல் தங்கம் வென்றவர் என்ற சாதனையும் புரிந்துள்ளார்.
இதுதொடர்பாக பயிற்சியாளர் நிப்பான் கூறியதாவது:
முதன்முதலில் ஹிமாவை பார்த்த போது விலை குறைந்த ஸ்பைக்ஸ் காலணிகளை அணிந்திருந்தார். எனினும் புயலைப் போல் ஓடியது என்னை கவர்ந்தது. ஆசிய போட்டியில் தொடர் ஓட்ட அணியில் ஹிமாவை இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பையெல்லாம் மீறி உலக தடகளம் தனிநபர் பிரிவிலேயே தங்கம் வென்று விட்டார் ஹிமா என புகழாரரம் சூட்டினார். 400 மீ ஓட்டத்தில் இறுதி 80 மீ தூரத்தில் தான் ஹிமா தனது வேகத்தை அதிகரித்தார் என்றார் நிப்பான். ஹிமாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஹிமாவின் ஆங்கிலம் பேசும் திறன் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளது இந்திய தடகள சம்மேளனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.