

இன்றைய இளம் தலைமுறையினர் தன்னைப் போலவும், நடால் மற்றும் ஜோகோவிச்சைப் போலவும் பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது கடினம் என்று ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் 18-ஆவது லெளரியஸ் உலக விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் '2017-ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்', 'சிறந்த மீண்டு வந்த வீரர்' ஆகிய இரு விருதுகளை ஃபெடரர் வென்றார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இன்றைய இளம் தலைமுறையினர் என்னைப் போலவும், சக வீரர்களான நடால், ஜோகோவிச் போலவும் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது சற்று கடினமாகும். பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் போன்றவர்கள் பல கிராண்ட்ஸ்லாம்களை வெல்லும் திறன் கொண்டிருந்தாலும், அதிகபட்சம் அவர்களால் 10 பட்டங்களை வெல்ல இயலும்.
பொதுவாக, ஒருவர் ஓரிரு பட்டங்கள் வெல்வதை உறுதியாகக் கூறலாம். ஆனால், 10 பட்டங்கள் வெல்வதை கணிக்க இயலாது. என் விஷயத்திலும் அதுபோல் கணித்திருக்க இயலாது. என்னையும், ஜோகோவிச்சையும் போன்று ஃபார்முடன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பட்சத்தில், ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்க்கும்போது, 8 முதல் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கலாம். அதற்கு தன்னம்பிக்கையும், உந்துதலும் மிக அவசியம்.
வெற்றிக்கு தடையாக இருப்பதை கண்டறிந்து, பயிற்சியாளர் ஆலோசனையை கேட்டு, வெற்றியை நோக்கி பயணிக்கத் தொடங்கினால் மாற்றங்கள் ஏற்படும். டென்னிஸ் விளையாட்டானது எப்போதும் சாம்பியன்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். நாங்கள் இந்த விளையாட்டின் நிழல்களாகத் தொடர்கிறோம்.
இளம் வீரர்களுக்கு தற்போது தடையாக இருக்கும் நாங்கள், ஒரு கட்டத்தில் ஓய்வு பெறும்போது அவர்கள் எங்களது வழியில் சாம்பியின்களாவர்கள். டென்னிஸில் நான் கற்றுக்கொண்டது, காயமடைந்தால் அதிலிருந்து மீண்டு 100 சதவீதம் தயாராகும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஃபெடரர் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற ஃபெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் உலகின் முதல் நிலை வீரராக மீண்டு வந்து, சர்வதேச தரவரிசையில் முதலிடம் பிடித்த மிக வயதான வீரர் என்ற புகழையும் அடைந்துள்ளார் ஃபெடரர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.