இந்த வருட ஐபிஎல்-லில் மூன்று அணிகளுக்கு ஆதரவளிக்க தமிழ்நாட்டு ரசிகர்கள் முடிவு!

கடந்த இரண்டு வருடங்களாக தங்களுக்கென்று சொந்தமாக ஒரு ஐபிஎல் அணியும் இல்லாமல் தவித்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இந்தமுறை...
இந்த வருட ஐபிஎல்-லில் மூன்று அணிகளுக்கு ஆதரவளிக்க தமிழ்நாட்டு ரசிகர்கள் முடிவு!

கடந்த இரண்டு வருடங்களாக தங்களுக்கென்று சொந்தமாக ஒரு ஐபிஎல் அணியும் இல்லாமல் தவித்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இந்தமுறை மூன்று ஐபிஎல் அணிகளுக்கு ஆதரவளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.  

2013-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு (குருநாத், ராஜ் குந்த்ரா) உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

இதனால் கடந்த இரு வருடங்களாகத் தங்களுக்கென்று சொந்தமாக ஐபிஎல் அணி எதுவும் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இந்தமுறை ஆதரவளிக்க மூன்று அணிகள் கிடைத்துள்ளன. 

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் முடிவடைந்ததால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்திலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் இரு ஐபிஎல் அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸில் 8 ஆண்டுகளாக அங்கம் வகித்த அஸ்வின், ரைசிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில், இந்த சீசனில் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ள அவர், தற்போது அந்த அணியின் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணைக் கேப்டனாக ராபின் உத்தப்பாவும் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டனர்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவிர அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் வழிநடத்தவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் தமிழ்நாட்டு ரசிகர்களின் சொந்த அணிகளாக மாறியுள்ளன. ஐபிஎல் போட்டியில் இதுவரை வீரர்களாக சாதித்த அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் கேப்டன்களாகவும் சாதிக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். எனவே இந்த வருட ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், கொல்கத்தா ஆகிய இரு அணிகளுக்கும் ஆதரவளிக்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் கிடைத்துள்ள ஆதரவுப் பதிவுகள் இதை வலியுறுத்துகின்றன. 

மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிக்கு சென்னை, பஞ்சாப், கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளுமே தகுதி பெற்றால் அதைவிட ஒரு பெரிய சந்தோஷம் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கமுடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com