ஐபிஎல் பிளே ஆஃப்: புணேவுக்கு வழங்கப்பட்ட நீதி சென்னைக்கு வழங்கப்படாதது ஏன்?

இதேபோன்றதோரு முனைப்பையும் ஆர்வத்தையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏன் வெளிப்படுத்தவில்லை?
ஐபிஎல் பிளே ஆஃப்: புணேவுக்கு வழங்கப்பட்ட நீதி சென்னைக்கு வழங்கப்படாதது ஏன்?

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரண்டு பிளே ஆஃப் ஆட்டங்களில் புணேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய சர்ச்சையைத் தொடங்கிவைத்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

11-வது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.

இரண்டு முறை (2010, 2011) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்று முறை (2013, 2015, 2017) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.

56 லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதலாவது தகுதிச்சுற்றிலும், அடுத்த 2 அணிகள் வெளியேற்றுதல் சுற்றிலும்(எலிமினேட்டர்) மோதும். முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். தோல்வியைச் சந்தித்த அணி எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியுடன் 2-ஆவது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் இரண்டாம் இடம் பிடிக்கும் நகருக்கு அடுத்த வருட பிளே ஆஃப் போட்டிகளை (2-வது மற்றும் மூன்றாவது ஆட்டங்கள்) நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதன் அடிப்படையில் இந்த வருட பிளே ஆஃப் போட்டிகளை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று புணே சார்பில் மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்தது. உண்மையில் இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரிக்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆச்சர்யப்படும்விதத்தில் பிசிசிஐ சம்மதம் தெரிவித்துவிட்டது.

இந்த வருட பிளே ஆஃப் போட்டிகள் புணேவில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிளே ஆஃப் போட்டிகளின் முதல் ஆட்டம் மும்பையிலும் மற்ற இரு ஆட்டங்கள் புணேவிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி மே 27 அன்று மும்பையில் நடைபெறுகிறது. அதாவது பிளே ஆஃப் போட்டிகள், இறுதிப் போட்டி என அனைத்தும் மஹாராஷ்டிராவில் மட்டுமே நடைபெறவுள்ளன. 

இந்த இடத்தில் ஓர் கேள்வி எழுகிறது. 2015-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதின. மும்பை சாம்பியன் ஆனது. சென்னைக்கு 2-ம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நடந்ததை சென்னை ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடினார்கள்.

இதனால் 2016, 2017-ம் ஆண்டுகளில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டில் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல்-லுக்குள் நுழைந்துள்ளன.

இந்த வருடம் புணே நகருக்கென்று எந்த அணியும் கிடையாது. ஆனால் அணியே இல்லாத புணே நகருக்கு ஐபிஎல் பிளேஆஃப் ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டது போல 2016-ம் ஆண்டு சென்னை நகருக்கு ஏன் பிளேஆஃப் போட்டிகள் ஒதுக்கப்படவில்லை? சென்னைக்குப் பதிலாக இரு பிளே ஆஃப் ஆட்டங்கள் அந்த வருடம் தில்லியில் நடைபெற்றன.

ஏற்கெனவே மும்பையில் பிளே ஆஃப் போட்டி ஒன்றும் இறுதிப் போட்டி ஒன்றும் நடந்தாலும் இதர இரு பிளே ஆஃப் போட்டிகளையும் தங்கள் மாநிலத்திலேயே நடக்கவேண்டும் என்று மஹாராஷ்டிர சங்கம் முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் இந்த வருடம் பிளே ஆஃப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் மஹாராஷ்டிர மாநிலத்தில் நடக்கின்றன. இதேபோன்றதோரு முனைப்பையும் ஆர்வத்தையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏன் வெளிப்படுத்தவில்லை? சென்னைக்கு வழங்கப்படாத நீதியை புணேவுக்கு மட்டும் பிசிசிஐயும் ஐபிஎல்-லும் வழங்கியது ஏன்? சென்னைக்கு அதுபோல வழங்கப்படவில்லை, எனவே புணேவுக்கும் பிளே ஆஃப் ஆட்டங்கள் கிடையாது என்று தீர்ப்பு எழுதியிருக்கலாமே! 

கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளே நடைபெறவில்லை. இதனால் குறைந்தபட்சம் 2016 பிளேஆஃப் ஆட்டங்களையாவது சென்னைக்கு ஒதுக்கும்படி கேட்டிருக்கலாம். அதற்கான முழு உரிமையும் சென்னைக்கு உண்டு. சரி, அப்போதுதான் கேட்கவில்லை. அப்போது இழந்த வாய்ப்பை இந்த வருடமாவது கொடுங்கள் என்றாவது கேட்டிருக்கலாம் அல்லவா! இதன்மூலமாக இந்த வருட பிளே ஆஃப் போட்டிகளைச் சென்னைக்குக் கிடைக்கும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யத் தவறிவிட்டது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். இதனால் சம்பந்தமே இல்லாமல் இரு பிளேஆஃப் ஆட்டங்கள் புணே-வில் நடைபெறவுள்ளன.

உரிமையை கேட்டுப் பெறுவது எப்படி என்று புணேவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com