அபராதத்துடன் தப்பித்தார் வங்கதேச கேப்டன்! இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதி!

வீரர்களை பெவிலியன் திரும்புமாறு அழைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி கடுமையான தண்டனை விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது...
அபராதத்துடன் தப்பித்தார் வங்கதேச கேப்டன்! இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதி!

இலங்கை - வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 போட்டியில் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக இரு வங்கதேச வீரர்களுக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி.

வங்கதேச இன்னிங்ஸின்போது கடைசி ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசப்பட்டது. இரண்டாவதாக வீசப்பட்ட பந்தை ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் என சிக்னல் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் இதை மற்றொரு நடுவர் அங்கீகரிக்க மறுத்தார். கடைசியில் அந்தப் பந்து நோ பால் அல்ல என முடிவு செய்யப்பட்டது. இதனால் டிரிங்ஸ் கொண்டு வந்த வங்கதேச சப் ஃபீல்டர்ஸூக்கும், இலங்கை ஃபீல்டர்ஸூக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இரு தரப்பினரையும் நடுவர்கள் சமாதானம் செய்ய முயலும்போது, பவுண்டரி லைன் அருகே கடும் கோபத்தில் இருந்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன், பெவிலியன் திரும்புமாறு தனது பேட்ஸ்மேன்களை அழைத்தார்.

இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி அவர்கள் வெளியேறியிருந்தால் வங்கதேசம் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும். எனினும், ஒருவழியாக கேப்டன் ஷாகிப் சமாதானம் ஆனார். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினார்கள். பின்னர் பேட் செய்த மஹ்முதுல்லா பவுண்டரி, சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில் வங்கதேச வீரர்களின் ஓய்வறைக் கதவு உடைக்கப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வறையின் கண்ணாடிக் கதவை, வங்கதேச வெற்றிக்குப் பிறகு அந்த அணி வீரர்களில் சிலர் உடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட், சிசிடிவி வீடீயோக்களின் பதிவைக் கோரியுள்ளார். தங்கள் வீரர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தால் அதற்குரிய இழப்பீடை வழங்குவதாக வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

நடுவர்களின் தீர்ப்பை மதிக்காமல் வீரர்களை பெவிலியன் திரும்புமாறு அழைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி கடுமையான தண்டனை விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவர் நாளை நடக்கும் இறுதிச்சுற்று ஆட்டத்தைத் தவறவிடவும் வாய்ப்பு உண்டு என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் ஷாகிப் அல் ஹசனுக்குக் குறைவான தண்டனையே கிடைத்துள்ளது.

வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் சப் ஃபீல்டர் நுருல் ஹசன் ஆகிய இருவருக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா ஒரு அபராதப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்ற நடத்தையை யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவேண்டும் என்கிற பரபரப்பில் இரு அணி வீரர்களும் இருந்தார்கள். ஆனால் இரு வீரர்களின் நடத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அவர்கள் எல்லையை மீறியுள்ளார்கள். நான்காவது நடுவரும் கள நடுவர்களும் இந்தப் பிரச்னையில் தலையிடாவிட்டால் நிலைமை மோசமாகியிருக்கும் என்று போட்டி நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com