தனக்கு முன்னதாக ஹர்பஜன், சாஹரை களமிறக்கியது ஏன்? இது தான் தோனி வியூகம்

பஞ்சாப் அணிக்கெதிரான நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் தோனி, ஜடேஜா, பிராவோ போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்த போதும் ஹர்பஜன், சாஹர் என பந்துவீச்சாளர்கள் களமிறங்கினர். 
தனக்கு முன்னதாக ஹர்பஜன், சாஹரை களமிறக்கியது ஏன்? இது தான் தோனி வியூகம்

நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 

ஆனால், பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் முதல் பேட்டிங் என்பதால் குறைந்தபட்சம் 53 ரன்கள் வித்தியாசத்திலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 

பின்னர், பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், கெயிலும் களமிறங்கினர். நேற்றைய போட்டியில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. சாஹர் மற்றும் நிகிடி இருவருக்கும் பந்து அருமையாக ஸ்விங் ஆனது. இதனால், அந்த அணியின் டாப் ஆர்டர் தாக்குபிடிக்க முடியாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டியது. 

இறுதிக்கட்டத்தில் கருண் நாயரின் அதிரடியால் அந்த அணி 19.4 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

சென்னை அணிக்கு பந்து ஸ்விங் ஆனது போல் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களான ராஜ்புத்துக்கும் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால், சென்னை அணியும் திணறியது. ராயுடு, டு பிளேசிஸ் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஹர்பஜன் சிங் களமிறங்கினார். 

சற்று நேரம் தாக்குபிடித்த ஹர்பஜன் 19 ரன்கள் எடுத்து 4-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்த நிலையிலாவது தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதும் அவருக்கு பதிலாக சாஹர் களமிறங்கினார். இதனால், ரசிகர்கள் அனைவரும் குழம்பி போயிருந்தனர். ஆனால், சாஹர் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி 20 பந்துகளில் 39 ரன்கள் என அதிரடியாக விளையாடி முக்கிய பங்காற்றினார். சாஹரும் ஆட்டமிழந்த பிறகு தான் தோனி களமிறங்கினார்.

இதையடுத்து, தோனியும் ரெய்னாவும் சேர்ந்து சென்னை அணியை வெற்றி பெற வைத்து பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

இந்த வெற்றிக்குப் பிறகு ஹர்பஜன் மற்றும் சாஹரை முன்னதாக இறக்கியது ஏன் என்று விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து, தோனி கூறியதாவது,

"பஞ்சாப்பின் பந்துவீச்சு வரிசையை பார்க்கும் போது அன்கித்துக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆனது. கேப்டனின் பார்வையில், முன்னதாக எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமோ அத்தனை விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அதனால் தான் குழப்பத்தை உண்டாக்க ஹர்பஜன் மற்றும சாஹரை முன்னதாக அனுப்பினோம். 

அதனால், பந்துவீச்சாளர்கள் பவுன்சர்களும் யார்க்கர்களுமாக வீசத் தொடங்கினர். பேட்ஸ்மேன் பேட்டிங் செய்தால் தங்களது திட்டப்படி சரியான இடத்தில், சரியான அளவில் பந்தை வீசி திணறடித்து இருப்பர். ஆனால், ஹர்பஜன் மற்றும் சாஹருக்கு எதிராக அவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்தாமல் அவர்களது சரியான இடம் மற்றும் அளவை மறந்துவிட்டனர். 
 
அதுமட்டுமில்லாமல், பிளே ஆஃபில் ஹர்பஜனும் சாஹரும் அவர்களது பங்கை அளிப்பர்" என்றார்.

தோனியின் இந்த வியூகம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. இல்லையெனில், பல விமர்சனங்களுக்கு அவர் பதில் கூற கடமைப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com