பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது: டேவிட் வார்னர் மனைவி உருக்கமான பேட்டி

கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதை இருவருமே உணர்ந்தோம். இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு...
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது: டேவிட் வார்னர் மனைவி உருக்கமான பேட்டி

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

நாடு திரும்பிய டேவிட் வார்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கண்ணீருடன் உருக்கமாகப் பேசினார். இச்சம்பவத்தால் தான் மிகவும் மனம் உடைந்ததால் தனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதாக வார்னரின் மனைவி கேண்டிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பெண்கள் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் என்னைப் பற்றி மோசமாகப் பேசினார். அதுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் தொடக்கமாக இருந்தது. கேப்டவுனில் இருந்தபோது நான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. 

பந்தைச் சேதப்படுத்திய சம்பவத்தை இரண்டு குழந்தைகளுடன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். இதைப் பார்த்து நான் மனம் வருந்தினேன். அதைத் தொடர்ந்து நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப நேரிட்டது. நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தில் ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தோம். எனினும் என்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார் வார்னர். சிட்னியில் வந்திறங்கியவுடன் எந்தத் தொந்தரவுமின்றி வீட்டுக்குச் செல்லலாம் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் சிட்னி விமான நிலையத்தில் ஊடகங்களைப் பார்த்ததும் நான் மேலும் வருத்தமடைந்தேன். நான் கர்ப்பமாக இருந்தது யாருக்கும் தெரியாது. 

பிறகு வீட்டுக்குச் சென்றோம். வார்னரை கழிப்பறைக்கு அழைத்து எனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டத்தைச் சொன்னேன். கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதை இருவருமே உணர்ந்தோம். இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு அழுதோம். டெஸ்ட் தொடரின் மோசமான நிகழ்வுகளுக்குப் பிறகு இந்தக் கருச்சிதைவு எங்களை மேலும் வருத்தமடைய வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com