

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து படுதோல்வியுடன் இலங்கை அணி வெளியேறிய நிலையில் அதன் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸை பதவியில் இருந்து நீக்கியது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். அவருக்கு பதிலாக தினேஷ் சண்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பதவி நீக்கப்பட்ட கேப்டன் மேத்யூஸ் கூறும்போது, ஆசியக் கோப்பை தோல்விக்கு என்னை பலிகடா ஆக்கி விட்டனர் என்றார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியிலிருந்தும் மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். குசால் மெண்டிஸ், சுரங்கா லக்மல், ஷெஹன் ஜெயசூர்யா, தில்ருவன் பெரேரா ஆகியோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
மேத்யூஸின் நீக்கம் குறித்து தேர்வுக்குழுத் தலைவர் சண்டிகா ஹதுருசிங்கா ஒரு பேட்டியில் கூறியதாவது:
மேத்யூஸால் 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்து, 30 ஓவர்கள் பேட்டிங் செய்யமுடியும் எனத் தோன்றவில்லை. அவரால் இரண்டையும் சிறப்பாகவும் செய்யமுடியும் என நாங்கள் கருதவில்லை. எனவே கேப்டன் பதவியிலிருந்து விலகி, உடற்தகுதியை மேம்படுத்தும்படி கூறியுள்ளோம். யோ யோ தேர்வில் அவர் தோல்வியடைந்ததுகூட பெரிய விஷயமில்லை. ஆடுகளத்தில் ஒரு வீரர் எப்படிச் சிறப்பாகப் பங்களிக்கிறார் என்பது எங்களுக்கு முக்கியம். ஆசியக் கோப்பைப் போட்டியில் ரன் ஓடுவதில் அவர் மோசமாகச் செயல்பட்டார். அவர் 64 ரன் அவுட்களில் ஈடுபட்டுள்ளார். அதில் 49 தடவை எதிரே உள்ள வீரர் ஆட்டமிழந்துள்ளார். இது ஓர் உலக சாதனை. அவர் மீண்டும் புது மனிதனாக வந்து, இலங்கை கிரிக்கெட் அணிக்குச் சேவை புரியவேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கை - இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், அக்டோபர் 10 முதல் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.