கணவன் என்னும் கயவன் - வழக்குரைஞர்  எஸ். தமிழ்ப்பூங்குயில்மொழி

ஜெனிஃபருக்கு - நாட்டுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் வேலை, கை நிறைய சம்பளம். பெண் கேட்டு வந்த மாப்பிள்ளை சேவியர் நட்சத்திர ஹோட்டலில் மேனேஜர் என்றாலும்,
கணவன் என்னும் கயவன் - வழக்குரைஞர்  எஸ். தமிழ்ப்பூங்குயில்மொழி

ஜெனிஃபருக்கு - நாட்டுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் வேலை, கை நிறைய சம்பளம். பெண் கேட்டு வந்த மாப்பிள்ளை சேவியர் நட்சத்திர ஹோட்டலில் மேனேஜர் என்றாலும், அவரின் குறையற்ற தோற்றப் பொலிவு ஜெனிஃபரின் பெற்றோருக்குப் பிடித்துப் போனதால் இரு வீட்டாரும் இணைந்து திருமணத்தை நடத்தி வைத்தது 1992ஆம் ஆண்டு. 

மணம் முடித்த மறு ஆண்டு பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார் ஜெனிஃபர். "ஏஞ்சல் ஒன்று இல்லத்தில் ஜனித்திருக்கிறது' என்று இரு குடும்பங்களுமே கொண்டாடியிருக்கிறது. அதுநாள்வரை அமைதியான நீரோடையாய் சென்ற ஜெனிஃபரின் வாழ்க்கையில் குழந்தைக்குக் கடைப்பிடிக்கவேண்டிய சடங்குகள் - நடைமுறைகளில் கணவரின் பெற்றோருக்கும் ஜெனிஃபருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சலசலப்புகளாக மாறி, ஒரு நிலையில் ஜெனிஃபரை குழந்தையோடு அழைத்துச்சென்று அவரின் பிறந்த வீட்டில் விட்டு விட்டுச் சென்றுவிட்டார் சேவியர். பின்பு, பெரியவர்கள் தலையிட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டும் வகையில் பேசி இருவரையும் மீண்டும் ஒன்றிணைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, நீதிமன்றத்திலிருந்து சேவியர் தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கில் நேரில் ஆஜராகக் கோரிய அறிவிப்பு ஒன்று ஜெனிஃபர் பெயருக்கு (தாய் வீட்டு முகவரிக்கு) வந்திருக்கிறது. 

இரவு எப்போது வரும் என்று எதிர்நோக்கி கணவருக்காக காத்திருந்த ஜெனிஃபர், வந்ததும் நீதிமன்ற அறிவிப்பை கணவரிடம் காட்டி விவரம் கேட்டபோது, "ஜெனிஃபர் அவரின் தாய் வீட்டில் இருந்தபோது தான் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ததாகவும், இப்போது ஒன்று சேர்ந்து விட்டதால், அந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள இருப்பதாகவும்' நம்பும்படி கூறியிருக்கிறார் சேவியர். நம்பிக்கைதானே தாம்பத்தியத்தின் அஸ்திவாரம். சரி பிரச்னை அத்தோடு முடிந்துவிட்டது என்று நம்பினார் ஜெனிஃபர். பிறகு, "வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டதாக'வும் கணவர் தெரிவித்ததால் அந்த வழக்கு பற்றிய நினைவே அவருக்கு மறந்து போய்விட்டிருக்கிறது.

இல்லற வாழ்க்கையில் தொடர்ந்திருக்க, 1995 ஆம் ஆண்டு ஓர் ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அதன்பின், சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின், உயர்நீதிமன்றத்திலிருந்து மீண்டும் ஒரு அறிவிப்பு "விவாகரத்து வழக்கின் தேதி தாங்கி' வரவும், கேள்விகளைக் கணைகளாகத் தொடுத்திருக்கிறார். 

ஜெனிஃபர். கணவர் சேவியரோ, "இது பழைய வழக்கு சம்பந்தப்பட்டது என்றும், அது ஏற்கெனவே வாபஸ் பெற்றுவிட்டதாகவும் ஏதோ தவறுதலாக மீண்டும் அறிவிப்பு வந்திருக்கலாம்' என்றும் அலட்டிக் கொள்ளாமல் கூறியிருக்கிறார்.      

இந்தமுறை ஜெனிஃபருக்கு உள்ளுணர்வு உறுத்த, தன் கணவரின் வார்த்தையை நம்புவதாகக் காட்டிக் கொண்டு, அதேசமயம், உண்மையைக் கண்டறிய தன் தந்தையின் உதவியை நாடியிருக்கிறார். தந்தை அந்த அறிவிப்பைக் கொடுத்து நிலவரம் அறியக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் கோப்புகளை ஆராய்ந்து உண்மை நிலையையும், வழக்கின் சாராம்சங்களையும் தெரிவித்தபோது நிலைகுலைந்துபோனார்கள் ஜெனிஃபரும், அவரது பெற்றோரும்.

குடும்பநல நீதிமன்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டவர்கள் விவாகரத்து வழக்கினை உயர்நீதிமன்றத்திலும், மற்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு மாவட்டம்தோறும் இயங்கி வரும் சார்பு நீதிமன்றங்களும் அதிகார வரம்பாக இருந்து வந்தது. 

இந்த வழக்கு, குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுவதற்கு முன்பாகவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குடும்பநல நீதிமன்றங்கள் போல தீர்ப்பு ஒருமுறை வழங்கப்படும் நிலை உயர்நீதிமன்ற விதிகளில் வழிவகைகள் செய்யப்பட்டிருக்கவில்லை. விவாகரத்து வழக்குகளைப் பொருத்தவரை முதலில் ஒரு முதல் நிலைத் தீர்ப்பும், பின்பு இறுதிநிலைத் தீர்ப்பும் வழங்கும் வகையில் விதிகள் இயற்றப்பட்டிருந்தன. 

சேவியர் முதல் நிலைத் தீர்ப்பு வேண்டித் தாக்கல் செய்த மனுவின் முதல் அறிவிப்பு ஜெனிஃபருக்குக் கிடைத்தபோது, பெரியோர்களால் பிரச்னைகள் பேசி முடிக்கப்பட்டு கணவரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகச் சொன்ன கணவர், வஞ்சகமாக வழக்கை நடத்தி வந்திருக்கிறார். 

அறிவிப்பினைப் பெற்றுக் கொண்டபின்பும், கணவரின்பால் கொண்ட நம்பிக்கையால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் உயர்நீதிமன்றம் ஜெனிஃபருக்கு எதிராக ஒருதலைபட்சமாக விவாகரத்து உத்தரவை வழங்கிவிட்டது. உத்தரவு நகல் பெற்றபின்பும், சிறிதும் அச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல்  ஜெனிஃபரோடு வாழ்க்கை நடத்தி இரண்டாவதாக ஓர் ஆண்குழந்தையையும் பெற்றெடுத்தார் சேவியர். 

தம்பதியாக வாழ்ந்துகொண்டே, இறுதிநிலைத் தீர்ப்பிற்கும் மனுசெய்து அந்த அறிவிப்புதான் இரண்டாம் முறையாக ஜெனிஃபருக்குக் கிடைத்தபிறகு தட்டிய பொறியில்தான் உண்மை வெளிப்பட்டது. சேவியர் தாக்கல் செய்திருந்த மனுவில், விவாகரத்து வேண்டுவதற்கு சொல்லப்பட்டிருந்த காரணங்களை அறிந்த ஜெனிஃபரின் தாய் சேவியரின் வக்கிர எண்ணங்களால் தன் மகள் வாழ்க்கை அழிந்துபோனதை எண்ணிப் பதறினார்.

முன்பு, இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் பெரியோர்களால் சமரசம் செய்யப்பட்டு, இணக்கமாக வாழ்ந்ததால் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததனை நீதிமன்றத்திடம் மறைத்திருந்தார் சேவியர். அந்த மாபாதக மனுவில் சேவியர் குறிப்பிட்டிருந்த காரணங்கள் இவைதான்:
"தன் மனைவிக்கு மூன்றாம் நபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தனக்கும், தன் மனைவிக்கும் இடையில் உண்டான கருத்து வேறுபாட்டினால், கணவனைப் பிரிந்து, பிறந்த வீட்டிற்குச் சென்ற ஜெனிஃபர் திரும்பி வரவே இல்லை' என்று பொய்யுரைகளைப் புனைந்து கூறியிருந்த சங்கதிகளின் உச்சம் எதுவென்றால், "திரும்பி வந்து தன்னுடன் சேர்ந்து வாழாத நிலையில் ஜெனிஃபருக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் தான் தந்தை இல்லை' என்றதுதான். 

திருமணம் ஆனது முதல் ஜெனிஃபரின் மாதச் சம்பளம் முழுமையையும் பெற்றுக் கொண்ட கணவரும் அவரது குடும்பத்தாரும், பேருந்து பயணச் செலவுக்கு மட்டும் படிக்காசு போல் கொடுத்துக் கொண்டிருந்த கணவரின் கயமைத்தனத்தால், கையில் காசு பணம் இன்றி, இரண்டு குழந்தைகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு புகுந்த வீட்டைவிட்டு வெளியேறிய ஜெனிஃபர், தன் தாய் வீட்டில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்திருக்கிறார். அடுத்த ஒரு மாதத்தில் ஜெனிஃபரின் தாய் மகளின் நிலையை எண்ணிக் கவலைப்பட்டே மாண்டுபோனார். 

திருமணமாகாத தம்பியும், தந்தையும் மட்டும்தான் என்றாலும், ஏற்கெனவே தாயின் மரணத்திற்கொரு காரணமாய்த் தான் இருந்ததால் விரைவாக வாடகைக்குத் தனிவீடு பிடித்துத் தங்கிக் கொண்டார் ஜெனிஃபர். 

காலையில் எழுந்ததும் குழந்தைகளைத் தயார் செய்து அப்பாவுக்கும், தம்பிக்குமாக சேர்த்து சமையலை முடித்து, தம்பிக்கும், அப்பாவுக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டுபோய் தன் அப்பாவிடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளையும் தந்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு பின் வங்கிப் பணிக்குச் சென்று வந்திருக்கிறார். 

இப்படியே சில ஆண்டுகள் செல்ல... தம்பிக்குத் திருமணம் செய்து, தந்தைக்குக் கிடைத்த ஓய்வூதியப் பலன்களைக் கொண்டு தம்பிக்கு ஒரு சொந்த வீடு வாங்கிக் கொடுத்து தனிக்குடித்தனம் வைத்த பின், தன் தந்தையோடு வசித்து வந்திருக்கிறார். 

ஆனாலும், கணவன் என்ற அந்தக் கயவனோடு நடக்கும் சட்டப் போராட்டம் மட்டும் இன்றளவில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக நீதிமன்றப் படிகளேறி நிஜமாகவே இவரின் கால்கள் இளைத்துப் போய் இருக்கக் கூடும். வழக்கையும், வாழ்க்கையையும் அவர் எதிர்கொண்ட விதம்... 
அடுத்த இதழில்..! 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com