தூக்கமும் மன ஆரோக்கியமும்! - எஸ். வந்தனா பதிலளிக்கிறார்

கோபம், என்பது ஓர் இயல்பான ஆரோக்கியமான உணர்வு. கோபம் என்பது சில நபர்களிடம் சில சந்தர்ப்பத்தில் சில சூழ்நிலையில் வெளிப்படுத்தக் கூடிய எதார்த்தமான உணர்வு.
தூக்கமும் மன ஆரோக்கியமும்! - எஸ். வந்தனா பதிலளிக்கிறார்

மன நலம் காப்போம் -4
இதைச் சாப்பிடு, இந்த டிரஸ்ஸை போட்டுக்கொள், என்று சாப்பாடு, உடைகள் விஷயத்தில் அளவுக்கு அதிகமாக யாராவது வற்புறுத்தினால் எனக்குக் கடும் கோபம் வருகிறது... இதை எப்படி கட்டுப்படுத்துவது..?
-பாக்யா, திருச்சி.
கோபம், என்பது ஓர் இயல்பான ஆரோக்கியமான உணர்வு. கோபம் என்பது சில நபர்களிடம் சில சந்தர்ப்பத்தில் சில சூழ்நிலையில் வெளிப்படுத்தக் கூடிய எதார்த்தமான உணர்வு. அவ்வாறு கோபப்படுவதன் மூலம் நமது உணர்ச்சியை பிறரிடம் வெளிப்படுத்துகிறோம் அது முற்றிலும் ஏற்கக் கூடியதே ஆகும். பிற உணர்வுகளைப் போல கோபமும் நம் உடல் அளவிலும் மன அளவிலும் பல மாற்றங்கள் ஏற்படுத்துகிறது.
(எ.டு): இதய துடிப்பு,  ரத்த அழுத்தம் அதிகரித்தல்,  ரசாயன மாற்றம் இவை நீடிக்கும் நிலையில் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகின்றன. கோபத்தினால் நாமோ அல்லது பிறரோ பாதிப்படைவாரேயானால் அக்கோபம் தவறானது.
கோபத்தை அணுகும் மூன்று வழிகள்: 1. கோபத்தை வெளிப்படுத்துதல்.  2.கோபத்தை அடக்குதல். 3.கோபத்தை நிதானப்படுத்துதல். எனவே, நீங்கள் கோபப்படுவர்களிடம் நேரடியாக சென்று, உங்களின் உணர்வுகளையும், நியாயங்களையும், கருத்துகளையும், பிறரின் உணர்வுகளையும் மதித்து, உங்களின் உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்துதல் வேண்டும். இது ஒரு வழிமுறை. அடுத்த கட்ட வழிமுறையாக உங்களுடைய கோபத்தினை சிறிது நேரத்திற்குக் கட்டுப்படுத்திக் கொண்டு, பின் மற்றவர்களின் நிலையிலிருந்து ஆலோசித்துப் பார்த்து செயல்படவும். சில நேரங்களில் உங்களின் கோபத்தை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்துதல் கூட உடல் மற்றும் மன நல பாதிப்பிற்கு காரணமாகலாம். எனவே, கோபத்தை கையாளும் வலிமையான முறைகளைக் கடைப்பிடிக்கவும்.

என் வயது 47. என் மனைவியின் வயது 42. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமானது முதல் என் மனைவி தொடர்ந்து ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப்படுகிறார். ஓயாத வைத்திய செலவு மற்றும் மன உளைச்சல். இதனால் எனக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை. இதை சகித்துக் கொண்டு வாழலாமா... அல்லது தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று அடிக்கடி தோன்றுகிறது..! 
- வாசகர், மன்னார்குடி.
ஆரோக்கியமான வாழ்வு, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான அங்கத்தினை கொண்டுள்ளது. ஆரோக்கியம் என்பது ஒருவரின் உடல், மனம் மற்றும் சுற்றுச்சூழல் கொண்டே உருவானதாகும். நீங்கள் உங்களுடைய மனைவியின் நோயைப் பற்றி விரிவாக எதுவும் கூறவில்லை. ஆனால், நீங்கள் பல வருடங்களாக, அவர்களின் உடல் நல பராமரிப்பில் உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள். உடல் ஆரோக்கியமற்றவரை கவனித்துக் கொள்வது கடினமான வேலையே ஆகும். இக்கடினமான வேலையை பல ஆண்டுகளாக ஒரு தனி நபராக மிகவும் ஈடுபாட்டுடன் செய்து கொண்டு வருகிறீர்கள். இவ்வாறு பிறரை பராமரிக்கும் பணியில் உள்ள தன்னை எவரும் கவனிப்பதில்லை. இவ்வாறு தொடர்ந்து நமது அன்றாடத் தேவைகளை (உடல் மற்றும் மனரீதியான) பூர்த்திச் செய்யாதிருப்பதால் ஒரு விதமான மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதை உளவியல் ரீதியாக "கேர் டேக்கர் பர்டன்' என்று கூறுவார்கள். இம் மனஉளைச்சளிலிருந்து வெளியேறுவதற்கு சில வழிமுறைகள்:
தங்களின் மனைவியின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு மற்றவர்களின் உதவியை நாட வேண்டும். தங்களின் வேலையை பலருடன் பகிர்ந்து செயல்படுத்துதல் வேண்டும். பல வருட காலமாக, உங்களின் செயல்களுக்கு நீங்களே உங்களை பாராட்டவில்லை. எனவே, இதுவே உங்களின் மன உளைச்சலுக்கு ஒரு காரணமாகும்.
தினமும், உங்களுக்கென சில மணி நேரத்தை உங்களுக்காகவே நீங்கள் ஒதுக்க வேண்டும். அந்நேரத்தை உங்களுக்கு மிகவும் பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வழிமுறைகளை பின்பற்றுங்கள். இவைகளைப் பின்பற்றியப் பின்பும் உங்களால் மன உளைச்சலிலிருந்து வெளியேற முடியவில்லை என்றால் மனநல ஆலோசகரை அணுகவும்.
நாங்கள் 4 பேர் நண்பர்கள். 8-ஆம் வகுப்பு படிக்கிறோம். 36 மாணவர்களுடன் விடுதியில் தங்கியுள்ளோம். நாங்கள் நண்பர்களாக இருப்பது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.  அவர்களுக்குப் படிப்பு சரியாக வராமல் இருப்பதால் நன்றாகப் படிக்கும் எங்களுடன்  சண்டைக்கு வருவதாக நண்பன் கூறுகிறான். இப்படியும் இருப்பார்களா?
 - கணேஷ், மதுரை.
நீங்கள் இக்கேள்வியில் கூறியுள்ளது போன்று உங்களுடைய பார்வையிலேயே நீங்கள்  படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் மற்றவர்கள் வேறு ஒரு குழுவைப்  போன்றும் கூறியுள்ளீர்கள். எனவே, இது போன்ற கருத்து வேறுபாடுகள் உடைய பார்வை அவர்களிடம் மட்டுமில்லை; நீங்களும் அப்படித்தான் வேறுபாட்டுடன் இருக்கிறீர்கள். சிறு வயதில் அதிக மதிப்பெண் எடுப்பவரும், குறைந்த மதிப்பெண் எடுப்பவரும் சிறு சண்டையுடன் காணப்படுவது இயல்பு. இது போன்ற எண்ணங்கள், ஆசிரியர்களும், பிற விடுதி அதிகாரிகளும் படிக்கும் மாணவர்களையும் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களையும் நடத்தும் விதமே இப்படியான குழந்தைகளிடையே வேறுபாட்டினை விதைக்கிறது. அதுவும் இல்லாமல் உங்களுடைய நண்பனான ஒரு பையனின் பேச்சை ஆராயாமல் நம்புவது தவறு. தனிப்பட்ட முறையில் பிற மாணவர்களை சந்தித்து பொறுமையுடன் நேரடியாகப் பேசுவது நல்லது. உங்களுடைய விடுதியில் இருக்கும் அனைவரும் நட்புடன் இருக்க அவர்களை பார்க்கும் பொழுது நல்ல வார்த்தைகளையும், அன்பையும், ஒரு உண்மையான சிரிப்புடன் வெளிப்படுத்துதல் உங்களிடையே நட்பை வளர்க்கும். பகைமை உணர்வை வளர்க்காமல், அனைவரையும் நண்பர்கள் என்ற வரிசையிலேயே வையுங்கள். உணவு உண்ணும்போது அனைவருடனும் பேசிக்கொண்டே பிறருடன் (அதாவது நீங்கள் 4 பேரை தவிர்த்து) மற்றவர்களுடன் அமர்ந்து பேசுங்கள். மற்றவர்களுக்கு கடினமாகத் திகழும் பாடத்தினை ஒரு குழுவாக அமர்ந்து பகிர்ந்து படியுங்கள். உங்களுக்குத் தெரியாதவற்றை அவர்களிடம் சென்று கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்யும் சிறு நல்ல செயலுக்கும் மனமார்ந்த பாராட்டினைத் தெரிவியுங்கள். இச்செயல் அவர்களிடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். மற்றவர்களின் உணர்வை காயப்படுத்தாமல் பேசுங்கள், பழகுங்கள் என்றும் நட்புடன் வளர என்னுடைய வாழ்த்துகள்.

எங்கள் வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை நள்ளிரவு ஒரு மணி வரை விழித்திருப்பது வழக்கம். இதனால் தூக்கம் வருவது தாமதமா
கிறது. குறைவான நேரம் தூங்குவது நல்லதா... விளக்கவும்..?
- வாசகி, திருப்பூர்.
தூக்கம் என்பது உயிரியல் சார்ந்த செயல்பாடு. உணவைப் போல் தூக்கமும் மிக அவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் 3இல் 1 பங்கை தூக்கத்திற்கு செலவிடுகின்றனர். பொதுவாக, மக்கள் படுத்தவுடன் 10-15 நிமிடத்தில் உறங்கி விடுகின்றனர். ஆனால், தூக்கப் பிரச்னை உள்ள மனிதர்கள் உறங்குவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. பொதுவாக 30 நிமிடத்திற்கு மேல் தூங்குவதற்கு நேரம் பிடித்தால், மனநல பிரச்னை உள்ளது என்று அர்த்தம். மனிதர்கள் உணவு இல்லாமல் 2 மாதம் கூட இருக்க முடியும், ஆனால், தூங்காமல் 11 நாட்களுக்கு மேல் இருக்க முடியாது என்பது ஆய்வில் நிரூபனம் ஆனதாகும். மனிதர்கள் மட்டுமே உயிரினங்களில் தங்கள் உறக்கத்தை தள்ளிப் போட கூடியவர்கள் ஆவர். மனிதர்களின் "பயோலாஜிகல் கிளாக்' பாதிக்கப்படும் போது உடல் மற்றும் மன ரீதியான பிரச்னை ஏற்படுகின்றது. மனநலக் கோளாறுகள் ஏற்படுவதற்கும் தூக்கமின்மை முக்கிய காரணம். இதனால் இதர தூக்க கோளாறுகள் ஏற்படக்கூடும். இதனை தக்க முறையில் கண்டறிந்து உளவியல் ரீதியான தீர்வு காணவேண்டும் இல்லையேல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடையே இதைச் சார்ந்த விளைவுகள் அதிகரிக்க கூடும். தூக்கம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் இடையே பரஸ்பர உறவுள்ளது. ஒன்று பாதித்தால், மற்றொன்று பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்படவும்.
(பதில்கள் தொடரும்)
-ரவிவர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com