மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடையை வடிவமைத்திருக்கிறேன்! சொல்கிறார் : ஃபேஷன்  டிசைனர்   ஷாலினி  விசாகன்

ஃபேஷன் ஷோ  என்றால் அழகிகள்  வித விதமான  ஆடைகள் அணிந்து கேட் வாக் நடந்து வருவார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடையை வடிவமைத்திருக்கிறேன்! சொல்கிறார் : ஃபேஷன்  டிசைனர்   ஷாலினி  விசாகன்

ஃபேஷன் ஷோ  என்றால் அழகிகள்  வித விதமான  ஆடைகள் அணிந்து கேட் வாக் நடந்து வருவார்கள்.  ஆனால், சென்ற வாரம்  சென்னையில்  ஒரு  வித்தியாசமான ஃபேஷன்  ஷோ நடந்தது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக உடுத்திக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்ட ஆடைகளை  அணிந்து  வீல் சேரில் இருக்கும் ஆண்களும், பெண்களும்  த்ரியோஸ் ஃபேஷன் ஷோ, 2017 நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகள்  கல்யாணம், வரவேற்பு  போன்ற  நாலு பேர் கூடும் நிகழ்ச்சிகளுக்கு  அழைத்துச் செல்லப்படும் போது மற்றவர்கள்  அசத்தலாக  உடை அணிந்து  வரும் போது  அதற்கு  சரிசமமாக. அவர்களும்   அணிந்து செல்ல அருமையான  பார்ட்டி  வேர்களை (party  wear )யும்   அந்த  ஃபேஷன் ஷோவில்  அணிந்து வந்தனர். 

மாற்றுத்திறனாளிகள் வீட்டில், வெளியில், முக்கிய நிகழ்ச்சிகளின் போது  அவர்களுக்குச்   சிரமம் இல்லாமல்  அணிவிக்கப்படும்  உடைகளை (adaptive   clothing ) வடிவமைக்கிறார்  ஃபேஷன் டிசைனர்  ஷாலினி விசாகன்.  சென்னை அடையாறில் வசிக்கும் ஷாலினிக்கு முப்பது வயதாகிறது.

சென்னை  தேசிய  பேஷன்  டெக்னாலஜி நிலையத்தில்  படித்து முடித்த கையுடன்  வழக்கமான  உடை வடிவமைப்பில் ஈடுபட்ட ஷாலினி விசாகன், மாற்றுத்திறனாளிகளுக்கு  தேவைப்படும்,   எளிதாக அணியச் செய்யும் உடைகளை  வடிவமைப்பதில்  ஈடுபாட்டுடன்  தன்னை  இணைத்துக் கொண்டார். இதற்கான காரணங்களை ஷாலினி சொல்கிறார்:
"கணவர் விசாகன்  மூன்று வயதிலே  போலியோவால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலியின்  துணையுடன் தான் வெளியே போக முடியும். அப்படித்தான் பள்ளிப் படிப்பை முடித்தார். பொறியியல் பட்டப்படிப்பில்  சேர்ந்தாலும்  படிப்பை நிறைவு செய்ய முடியவில்லை... அவருக்கு உடை மாற்றும் போதும் சரி.. உடை மாற்றிவிடுபவர்களுக்கும் சரி.. பல சிரமங்கள்... பல சமயங்களில்  கைகளின் மூட்டு விலகிக் கொள்ளும். பயணங்களின் போது இந்த சிரமம்  இன்னும் அதிகம். 

அதே போன்று  எனது அத்தைக்கு  நைட்டி மட்டும்தான்  அணிய  முடியும்.  சேலை கட்டிக் கொள்ளவோ ஜாக்கெட் போட்டுக் கொள்ளவோ முடியாது.  அவர் கோயிலுக்குத்  தவறாமல் போகிறவர். அவரது உடல்நலப் பிரச்னை  பெரிதான  போது,  சேலை கட்டிக்கொள்ள  இயலாது போனதால்  கோயிலுக்குப் போக முடியாமல் ரொம்பவும்  சங்கடப்பட்டார்.  நைட்டி  அணிந்து கோயிலுக்குப் போக முடியாது.  இந்த இருவர் பிரச்னைகளைத்  தீர்க்க  அவர்கள் அணியும் உடையில்  சில மாற்றங்களைக் கொண்டு வந்தேன். 

சாதாரணமாகப் பயன்படுத்தும்  பொத்தான்களைத் தவிர்த்து, காந்த பொத்தான்கள்,   மெல்ல அமர்த்தினால் ஒட்டிக் கொள்ளும் வெல்க்ரோவ்...  கிச்சென்று பிடிக்கும்  எலாஸ்டிக் ... zipல்  போன்றவற்றை  உடைகளில்   அறிமுகம் செய்தேன்.    அத்தைக்கு  பாரம்பரிய மடிப்புகள் கொண்ட  சேலையை பேண்ட்  மாதிரி வடிவமைத்து  அதில்  ஜாக்கெட்டையும் இணைத்து   கிட்டத்தட்ட  மாறுபடுத்தப்பட்ட  நைட்டியாக  உருவாக்கினேன்.   பார்ப்பதற்கு  ஜாக்கெட் சேலை  தனித்தனியாக  அணிந்திருப்பது போல் தோன்றும். இந்த உடையை நைட்டி அணிவது போல  போட்டுக் கொள்ள முடியும் என்பதால்  அத்தைக்கு   பழைய நிம்மதி வந்தது.  போட்டுக்  கொள்ள சிரமம் ஏதும் ஏற்படவில்லை  என்பதினால் அந்த உடையுடன்   கோயிலுக்கும்  போய் வர ஆரம்பித்தார்.  கணவரை  படுக்கையிலிருந்து வீல்சேருக்கும்   வீல்சேரிலிருந்து படுக்கைக்கும்  மாற்றும் போதும், பயணங்களின் போதும்  எடுக்க வைக்க  சிரமப்   பட்டோம்.  என்னதான் கவனமாக எடுத்தாலும், சில  சமயம் வழுக்கும். அப்படி வழுக்காமல் இருக்க  பேண்டின் பக்கவாட்டில் பிடிப்பதற்காக  லூப்களையும்  சட்டையில்  பெல்ட்களையும்   வைத்தேன்.  அதில் கைகளை   நுழைத்துத் தூக்கும் போது  அவருக்கும் சரி.. தூக்குபவர்களுக்கும் சரி  .. எந்த  பிரச்னையும் இல்லை. உடல்  ஊனம்  பல தரப்பட்டது. சிலருக்கு  கைகளை தூக்க முடியாது. அதனால்,  சட்டையில்  கை  வைத்து தைக்காமல்,  தனியாக  தைத்து  வெல்க்ரோவ் உதவியால்  ஒட்ட வைப்போம்.  காஜா துளையில்   பொத்தானை நுழைக்க  சிரமப்படுபவர்களுக்கு    காந்த பொத்தான்கள் வைக்கிறோம்... மாற்றுத்திறனாளிகளுக்கு  உடை   அணிவதில் என்ன பிரச்னை என்பதை அறிந்து  அதை தீர்க்க  அவர்களின்   தேவைக்கு  ஏற்ற மாதிரி   ஆடைகளை  வடிவமைக்கிறோம். ஆண்கள் பெண்கள் அணியும் டயாபரில் கூட சில மாற்றங்களைக்  கொண்டு வந்திருக்கிறேன்.   

சென்னையில்  மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயல்படும்  வித்யா சாகர்  நிறுவனத்திற்குச் சென்று  மாற்றுத்திறனாளிகளை சந்தித்து  உடை அணிவதில் அவர்களுக்கு இருக்கும்  பல்வேறு சிரமங்களைத்     தெரிந்து கொண்டு  அதற்கு ஓர் தீர்வையும்  தந்து வருகிறேன்.  இந்த உடை பார்க்கும்படி இருக்குமா?   என்று  நினைக்கலாம்.   அம்சமாக இருக்கும்.  யாரையும் முகம் சுளிக்க வைக்காது.  வேட்டியைக் கூட நான் பேண்ட் போடுகிறமாதிரி  வடிவமைத்
திருக்கிறேன்.   

சாதாரணமாக இருப்பவர்களுக்குத்  தயாரிக்கப்படும் உடைகளைத்தான்,  மாற்றுத்திறனாளிகளுக்கும் அணிவித்து வருகிறோம். மேலை நாடுகளில்  சில நிறுவனங்கள் மட்டுமே  மாற்றுதிறனாளிகளுக்கென்று பிரத்யேகமாக  உடைகளைத் தயாரிக்கின்றன. அந்த உடைகளை  இறக்குமதி செய்யவேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல்...  ஆண்களுக்கு,  மேல்நாட்டு     உடைகள்  பொருந்தும். ஆனால் பெண்களுக்கு  மேல்நாட்டு உடைகள்  பொருந்தாது.    அதனால்,  இந்திய கலாசாரத்திற்குப்  பொருந்தும்படியான உடைகளை  வடிவமைத்திருக்கிறேன். இந்திய பெண்களின் பாரம்பரிய  மற்றும் இன்றைய ஃபேஷனும்    கொண்டு வந்திருக்கிறேன்'' என்கிறார் ஷாலினி.

ஷாலினி குறித்து அவர் கணவர் விசாகன் கூறுவது:
"நாங்கள்  கொடுத்த  கல்யாண   விளம்பரம்  பார்த்துதான்  ஷாலினி  என்னை வந்து பார்த்தார். அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அங்கு பள்ளியில்  நிர்வாகியாகப்  பணி புரிந்து வந்தார்.  சென்னையில் என் வீட்டில்  இரண்டு நாள் தங்கி  எனது  நிலைமைகளை முழுமையாகப்  புரிந்து   கொண்டு   "சம்மதம்' என்றார்.  2009- இல்   எங்கள் திருமணம் நடந்தது.  எனது  உடை அணியும் பிரச்னையினைப்  புரிந்து கொண்டு  அதைத் தீர்க்க  ஃபேஷன்  டெக்னாலஜி படித்தார்.  பல முறை   உடைகளை  வடிவமைத்து  எனக்குப் போட்டுப் பார்த்து மீண்டும்  தேவையான  மாற்றங்களைச் செய்து  இறுதியாக என்னென்ன  மாற்றங்களைச்  செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தார். இப்போது   கூடிய மட்டும் நானே  உடைகளை உடுத்திக் கொள்கிறேன். எல்லாம் ஷாலினியின்   கைங்கரியம்தான். 

ஷாலினி உடைகளை  மட்டும்  வித்தியாசமாக வடிவமைக்கவில்லை. தனது சொந்த வாழ்க்கையையும்  பிறருக்கு  எடுத்துக் காட்டாக அமைய  தானாகவே அர்த்த பூர்வமாக  அதிசயமாக  வடிவமைத்திருக்கிறார்'' என்றார்.
- பிஸ்மி பரிணாமன் 

Caption
Caption

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com