
சோபியா ஒரு மாடல் ஆவார். முன்னாள் தடகள வீராங்கனை. தேசிய அளவில் குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் சாம்பியனாக மூன்று முறை தேர்வானவர். உயிரான ஓவியங்களை வரைபவர். நகை வடிவமைப்பு நுட்பமும் கைவரப் பெற்றவர். இத்தனை திறமைகள் உள்ள சோபியாவுக்கு பேச வராது, காது கேட்காது என்றால் நம்பவே முடியவில்லை. ஆனால் கசப்பான உண்மையும் அதுதான். இந்த குறைகளைக் கடந்து, சோபியா தொட்டிருக்கும் சிகரங்கள் பல. சோபியாவின் தாயார் கோரட்டி பேசுகிறார்:
"சோபியா பிறந்தது கொச்சியில். பிறந்த போதே அந்தக் குறைபாடுகள் இருந்திருக்க வேண்டும். பிறந்த குழந்தை என்பதால் எங்களாலும் அந்தக் குறைகளை அனுமானம் செய்ய முடியவில்லை. அப்போது மருத்துவ வசதிகளும் குறைவு.'
"ஒருமுறை சர்ச்சில் நடந்த திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். நல்ல கூட்டம்... எங்கும் கலகலப்பு ஆரவாரம்... வான வேடிக்கை ஆரம்பம் ஆனது. காதைக் கிழிக்கும் வெடிச் சத்தம்... அக்கம்பக்கத்தில் அம்மா அப்பாக்கள் சுமந்து நின்ற பச்சிளம் குழந்தைகள் பயங்கரமான வெடிச் சத்தங்களைக் கேட்டு பயந்து போய் அழ ஆரம்பித்தன. ஆனால் சோபியா வான வேடிக்கை ஏதும் நடக்காத மாதிரி சிரித்துக் கொண்டே இருந்தாள். அப்போதுதான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. உடனே வீட்டிற்கு விரைந்து வந்தோம். சோபியாவை சோபாவில் வைத்து விட்டு சாப்பாடு தட்டை எடுத்து கரண்டியால் பலமாகப் பலமுறை தட்டி ஓசையை எழுப்பினேன். சோபியாவின் பின்பக்கம் நின்று கொண்டும் ஓசை எழுப்பினோம். சோபியா எதையும் கேட்காத மாதிரி அமைதியாக இருந்தாள். எங்கள் சந்தேகம் இன்னும் அதிகமானது .'
"அடுத்த நாள் டாக்டரிடம் ஓடினோம். நாங்கள் பயந்ததை டாக்டர் உறுதிப் படுத்தினார். பிறவியிலேயே சோபியாவுக்கு காது கேட்கும் திறன் இல்லை. கேட்கும் திறன் இல்லாததால் பேசவும் வராது என்று டாக்டர் சொன்னதும்.. கொஞ்ச நேரத்திற்கு நாங்களும் கேட்கும் சக்தியை இழந்தோம். பேசவும் முடியவில்லை. பேச கேட்க இயலாத நிலையில் ஒரு பெண் குழந்தை... அவள் எதிர்காலம் எப்படி இருக்கும்... கலங்கி நின்றோம்.. சோபியாவிற்குப் பிறகு பிறந்த ரிச்சர்டுக்கும் அதே குறைகள் இருந்தன. எங்களின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா.."
"என்ன பாவம் செய்தார்களோ .. இப்படி குறைகளுடன் இவர்களுக்கு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.. என்று பலரும் பேசினார்கள். எங்கள் செவிகளில் அக்கினி திரவம் ஊற்றியது போல சுட்டது. மனம் புண்ணானது...'
"சோபியாவின் குறைகளுக்கு பொருத்தமான பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். சோபியா வளர்ந்து ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தாள். கேட்கும் பேசும் திறன் இல்லாதவர்களுக்கு நடைபெறும் அழகிப் போட்டியில், "மிஸ் இந்தியா 2014' ஆக இரண்டாம் இடத்தை சோபியா பிடித்தார். இந்தியாவின் சார்பாக பிரேக்கில் நடைப்பெற்ற கேட்கும் பேசும் திறன் இல்லாதவர்களுக்கு நடந்த "மிஸ் வேர்ல்ட்' போட்டியில் கலந்து கொண்டார். மாற்றுத் திறனாளிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட "பெஸ்ட் விஷஸ்' என்ற திரைப்படத்திலும் சோபியா நடித்துள்ளார். சோபியாவுக்கு நடனம் நன்றாகவே வரும். வளைகுடா நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார் .
கேரளத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் காது கேளாத பெண்மணி சோஃபியாதான். இதற்காக சோபியா நீதிமன்றங்கள் பல ஏறி இறங்க வேண்டிவந்தது. லைசென்ஸ் தேர்வின் போது, "உனக்குத்தான் காது கேட்காதே... வேறு வாகனங்கள் வருவதை, போவதை எப்படி சமாளிக்கப் போகிறீர்?'' என்று தேர்வாளர் கேட்க... "பிளீஸ் வெயிட் அண்ட் வாட்ச்..'' என்று சொல்லி அவர் முன்னால் வாகனத்தை அபாரமாக ஓட்டிக் காண்பித்தாள். கல்லூரிக்கு ஸ்கூட்டரில்தான் போய் வந்தாள் சோபியா பைக்கும் ஓட்டுவாள். "அதிவேக கார் ரேசராக வேண்டும்' என்பதும் சோபியாவின் விருப்பம்.' என்கிறார் சோபியாவின் அம்மா கோரட்டி.
தன் பங்கிற்கு சோபியா சைகைகளால் தெரிவிக்கிறார்.:
"பெற்றோர்தான் எனது இன்றைய நிலைக்கு காரணம். எனக்கு என்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு துணையாக நின்றார்கள். மனதில் உறுதியை வளர்த்தார்கள். மெளனம் எனது நிரந்தரமொழியாகி விட்டது. அதனால் சைகை மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்யக் கற்றேன். பிறகு உதடுகள் அசைவதை வைத்து பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள பயிற்சி பெற்றேன்.'
"பள்ளியில் படிக்கும் போது விளையாடுவதில் அதிகம் ஈடுபாடு காட்டினேன். குண்டு எறிவது, தட்டு வீசுவது போன்ற பிரிவுகளில் தேசிய அளவில் பரிசுகள் பல பெற்றுள்ளேன். ஃபேஷன் டிசைனரான டாலு கிருஷ்ணதாஸை சந்தித்தது ஒரு திருப்பமாக அமைந்தது. அவர் எனக்கு மாடலிங் ஆக யோசனை சொன்னதுடன் பயிற்சியும் வழங்கினார். எனக்கும் மாடலாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் அழகிகள் போல் மேடையில் "கேட் வாக்' செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. மாடலிங் எனது தொழிலானது. இந்தியாவில் நகரங்களில் நடந்த ஃபேஷன் ஷோக்களில் பங்கு பெற்றேன். பல்வேறு ஃபஷன் ஷோக்களில் "மிஸ் கன்ஜீனியாலிட்டி', "மிஸ் எடிக்கெட்', "மிஸ் டேலன்ட்' போன்ற பட்டங்கள் எனக்கு கிடைத்தன. சர்வதேச மாடலான லிசா ஹேடன்னுடன் ஒரே மேடையில் வந்த அனுபவமும் உண்டு'' என்கிறார் சோபியா.
- பிஸ்மி பரிணாமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.