கருவூலம்: அரியலூர் மாவட்டம்

உடையார்பாளையம் ஜமீன் வம்சத்தினர் காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படுகிறது.
கருவூலம்: அரியலூர் மாவட்டம்

சென்ற வாரத் தொடர்ச்சி...
உடையார்பாளையம் அரண்மனை
உடையார்பாளையம் ஜமீன் வம்சத்தினர் காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மற்றவர்களுக்குப் போரில் துணை புரிந்ததால் "காலாட்கள் தோழ உடையார்' என அழைக்கப்பட்டனர்.
இவ்வம்சத்தினரால் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அரண்மனை இன்று சிதிலமடைந்து பொலிவிழந்து காணப்படுகிறது.
அன்று 30 ஏக்கர் பரப்பளவில் அழகிய கலைநயமிக்க கட்டடக் கலையுடன் அகழி, கோட்டைச் சுவர், 64 அறைகள் - அதிலும் சில அறைகளில் தாஜ்மஹால் போன்ற சிறந்த வேலைப்பாடுகள் மற்றும் மதுரை திருமலைநாயக்கர் மஹால் போன்ற தர்பார் மஹால் என இருந்துள்ளது.
இந்த அரண்மனை பற்றிய தகவல்கள் ஜமீனின் 24-ஆவது அரசரான திரு.கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார் என்பவர் எழுதி வெளியிட்ட "உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்' என்ற ஆங்கில நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று இங்கு பீரங்கி, துப்பாக்கி, வாள்கள்,  வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு, உள்ளிட்ட ஜமீனுக்கு சொந்தமான பல பொருட்கள் காட்சிக்குள்ளன.
இவர்கள் பல தமிழ் அறிஞர்களை ஆதரித்தனர். அவர்களில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் குறிப்பிடத்தக்கவர்.
கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சிங்க முகக் கிணறு இவர்களின் கொடையாகும். மேலும் பல ஆலயங்களை இவர்கள் புதுப்பித்துள்ளனர். 

ஏலக்குறிச்சி அடைக்கல மாதா சர்ச்!
அரியலூரிலிருந்து 32கி.மீ. தொலைவில் உள்ளது இந்த மாதா கோயில் ரோமன் கத்தோலிக்கர்களின் புனிதத் தலம்! இந்த தேவாலயம் "வீரமாமுனிவர்' என்று தமிழகத்தில் அழைக்கப்படும் "ஜோசப் பெஸ்சி' என்பவரால் கட்டப்பட்டது. வீரமாமுனிவர் இத்தாலியிலிருந்து கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக அரியலூர் பகுதியில் 1710முதல் 1742வரை தங்கியிருந்தார். அப்பொழுது தீராத நோயினால் அவதிப்பட்டு வந்த அரியலூர் பாளையக்காரரின் நோயினை மேரியின் கருணையால் குணப்படுத்தினார். அதனால் அகமகிழ்ந்த பாளையக்காரர், 60 ஏக்கர் நிலத்தினை கொடுத்தார்.அவ்விடத்திலேயே இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. 

கரைவெட்டி பறவைகள் காப்பகம்!
தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம். அரியலூரிலிருந்து 15கி.மீ. தொலைவில் கரைவெட்டி என்ற சிற்றூரில் 454ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான இந்த விவசாய குளத்திற்கு மேட்டூர் அணையே நீராதாரம். 
சுமார் 180வகையான நீர்ப்பறவைகள்  உலகின் பல பகுதிகளிலிருநதும் இங்கு வருகின்றன.  ஏப்ரல், மே மாதங்களே இப்பறவைகளைப் பார்த்து ரசிக்க சிறந்த காலம். பறவைகள் பகலில் இரை தேடிச் சென்று வருவதால் வெறிச்சோடிக் கிடக்கும். மாலையில் களைகட்டி விடுகிறது. 

கங்கை கொண்ட சோழபுரம்-சில தகவல்கள்
இவ்வூரினை பண்டை புலவர்கள் கங்காபுரி, கங்கை மாநகர், கங்காபுரம் என்றெல்லாம் பலவாறாகப்  புகழ்ந்துள்ளனர். 
இன்றைய கிராமமாகிய கங்கைகொண்ட சோழபுரத்தினை சுற்றிலுமுள்ள உட்கோட்டை, மாளிகை மேடு, ஆயிரக்கலம், கொல்லாபுரம், வீரசோழநல்லூர், மெய்க்காவல்புதூர், சுண்ணாம்புக்குழி, முதலிய சிற்றூர்கள் பண்டைய தலைநகரத்தின் பகுதிகளே. 
அன்று மன்னர்கள் வாழ்ந்த இடம் இன்று மாளிகை மேடு என்றும், கட்டட வேலைகளுக்கு சுண்ணாம்பு தயாரித்த இடம் சுண்ணாம்புக் குழி என்றும், கோட்டை இருந்த பகுதி உட்கோட்டை என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. 
முதலாம் கடைய வர்ம சுந்தர பாண்டியன் சோழர்களை வென்றான். மாறவர்ம குலசேகர பாண்டியன் கங்கை கொண்ட சோழபுரத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். அந்நாட்களில் இந்நகரம் முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

பழமையான புகழ் பெற்ற ஆலயங்கள்!
அரியலூர்-கோதண்டராமசாமி கோயில்!
இந்த விஷ்ணு கோயில் மண்டபத்தில் உள்ள தசாவதாரச் சிற்பங்கள் புகழ் பெற்றவை!  இந்த மண்டபம் 20அடி உயரமுள்ள 40 தூண்களைக் கொண்டது. 

திருமழப்பாடி-வைத்தியநாதர் கோயில்
 தேவாரப் பாடல் பெற்ற தலம். புகழ் பெற்ற "பொன்னார் மேனியனே' என்று தொடங்கி "மண்ணே மாமணியே மழப்பாடியுள் மாணிக்கமே'  என்று முடியும் தேவாரப்பாடல் இத்தல இறைவன் மீது பாடப்பட்டதே. 
 இங்கு கற்கோயில் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டு, பின் ராஜராஜ சோழன் காலத்தில் விரிவு படுத்தப்பட்டு ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 

காமராசவள்ளி-செளந்தரேஸ்வரர் கோயில்
 காமராசவள்ளி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் சுந்தரசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு சோழர் கால அழகிய சிற்பங்களும், வெண்கல சிலைகளும் உள்ளன. அதில் வெண்கல ரதிதேவி சிற்பம் குறிப்பிடத்தக்கது. 

விக்கிரம மங்களம்-ராஜேந்திர சோழீஸ்வரம்
 அக்காலத்தில் இவ்வூர் விக்கிரம சோழபுரம் என்றழைக்கப்பட்டது. இந்த ஆலயம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இங்கு சோழர் காலத்திய புத்தர் மற்றும் ஜைன மத சிற்பங்கள் உள்ளன. 

கோவிந்தபுரம் சிவன் கோயில்
 உடையார் பாளையம் வட்டத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தல இறைவனை அர்ஜுனன் வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. தற்போதுள்ள கற்கோயில் உத்தமசோழனால் (970-986) கட்டப்பட்டது.

மேலப்பழுவூர் - சுந்தரேஸ்வரர் கோயில்! 
 சோழர்களின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு பழுவேட்டரையர் பற்றியும், அவர்களின் முக்கியத்துவம் பற்றியும் நன்கு தெரியும். அவர்களின் தலைநகரம்தான்  இவ்வூர். இங்குள்ள சுந்தரேஸ்வரர் கோயிலும், கீழப்பழுவூரில் உள்ள ஆலத்துறையார் கோயிலும் பழமையான சோழர்கால கோயில்களே!
 இது போல் எண்ணற்ற பழமையான ஆலயங்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளது.  பழமையான கோயில்கள், வரலாற்றுச் சிறப்பு  மிக்க சோழர்களின் கட்டடக் கலையில் உருவான ஆலயங்கள் கலையார்வம் உள்ளவர்களைக் கவர்ந்திழுக்கும்! மிக அருமையான சுற்றுலாத்தலம்!
தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com